

பூக்களின் அரசனைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? பூவரசு மரத்திற்குப் பூப்பருத்தி, புவிராசன், கல்லால், அர்த்தநாரி, ஈஸ்வரம், பம்பரக்காய், பூளம் எனப் பல பெயர்கள் தமிழில் இருந்தாலும், பூவரசு என்பதே மிகப் பொருத்தமான பெயராகும்.
ஏனெனில், இது மற்ற பூக்களைக் காட்டிலும் மிகவும் அழகானது. இம்மரத்தின் இலை அரச மரத்தின் இலையைப் போன்றும் இளம் மலர் மஞ்சள் நிறத்திலும், முதிர்ந்த மலர் சிவப்பு நிறத்திலும் காணப்படும். பூவரசு மரம் மால்வேசி குடும்பத்தைச் சேர்ந்தது, இதன் அறிவியல் பெயர் Thespesia populnea, ஆங்கிலப் பெயர் Portia tree, Indian tulip.
விளையாட்டுப் பொருள்
அந்தக் காலத்தில் கிராமத்துச் சிறுவர்கள், பூவரசு மரத்தின் பசுமையான இலையைப் பறித்து, அதன் நுனிப்பகுதியைச் சற்று நீக்கிவிட்டு, இலையை நன்றாகச் சுருட்டி மேற்பகுதியைச் சிறிது கையால் அழுத்திவிட்டால் பீப்பீ தயாராகிவிடும்.
பிறகென்ன வீடு, வீதிகளில் ஒரே பீப்பீ சத்தம்தான். ‘பூவரச இலையிலே பீப்பீ செஞ்சு ஊதினோம்’ என்கிற திரைப்படப் பாடல் வரிகளே இதற்கு சாட்சி. ‘பூவரசம் பீப்பீ’ என்று ஒரு படமே வந்தது.