

உலகில் வேறு எந்தப் பண்டைய பண்பாட்டிலும் நிலத் திணைக்கான மலர்கள் அடையாளமாகக் கொள்ளப்படவில்லை. ஒரு வகையில் அகத்திணை (மருதம், நெய்தல், பாலை) மலர்களுடன் இந்தத் தொடர் தொடங்கியது. இந்த முறை புறத்திணை மலர்களைப் பற்றிப் பார்ப்போம்.
புறத்திணை எனப்படும் புற வாழ்க்கை, போர் முறை சார்ந்த நிகழ்வுகளை அடையாளப்படுத்தவும் தமிழ்ப் பண்பாட்டில் மட்டுமே மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தமிழர்களிடையே நிலவிவந்த நெருக்கமான இயற்கைப் பிணைப்பைப் பற்றி மட்டுமல்லாமல், தாவரவியல் அறிவையும் சேர்த்தே பறைசாற்றுகிறது.
சங்க இலக்கியத்தில் புறத்திணைப் பூக்கள் (போர்ப்பூக்கள்) போர் நடவடிக்கைகளின் வெவ்வேறு நிலைகளை அடையாளப்படுத்தவும் வீரர்களின் மனநிலையை வெளிப்படுத்தவும் சூடப்பட்டன.
ஒவ்வொரு போர்ச் செயலுக்கும் ஒரு மலர் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டது. போர் எதற்காகத் தொடுக்கப்படுகிறது என்பதை வெளிப்படுத்தவும், போர்க்களத்தில் தம் அணியினரை அடையாளம் காணவும், வீரர்களின் மன உறுதியைக் காட்டவும் இந்த மலர்கள் பயன்பட்டன.
மேற்கண்ட புறப்பொருள் இலக்கணத்தைக் கூறும் நூல் ‘புறப்பொருள் வெண்பாமாலை’. இயற்றியவர் ஐயனாரிதனார். காலம் பொ.ஆ. (கி.பி.) 9ஆம் நூற்றாண்டு. தொல்காப்பியத்துக்குப் பின் புறப்பொருள் இலக்கணம் பற்றி எழுதப்பட்ட ஒரே நூலாக இது கருதப்படுகிறது.
வெட்சி
பகை நாட்டின் பசுக் கூட்டங்களைக் கவர்வதற்கு வெட்சிப் பூவைச் சூடிச் செல்வர். தமிழில் இட்லிப்பூ எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் Flame flower, அறிவியல் பெயர் Ixora coccinea.
சிவப்பு, வெள்ளை எனப் பல நிறங்களில் தோட்டச் செடியாகப் பரவலாக வளர்க்கப்பட்டது. ஆறு அடி உயரத்துக்கு வளரும் பெரிய புதர்ச்செடி. கொத்துக் கொத்தாகப்பூக்கும். மலரின் மேல்பகுதி நான்கு இதழ்களுடனும் அடிப்பகுதி குழல் போல் நீண்டும் இருக்கும்.