

அது ஒரு வசந்தகாலம், பூர்ணிமாவுக்கு அப்போது ஏழு வயதிருக்கும். அவளைப் பாட்டி வீட்டில் பெற்றோர் விட்டபோது அவள் மிகவும் குதூகலமாகவே உணர்ந்தாள். நகரத்து நெருக்கடிகளுக்கு மாற்றாக பிரம்மபுத்திரா ஆற்றின் சலசலப்பு கேட்கும் அசாமின் காம்ரூப் கிராமம் அவளுக்குப் பெரிதும் பிடித்திருந்தது. அங்கேதான் இயற்கையுடன் ஒன்றி வாழக் கற்றுக்கொண்டாள் பூர்ணிமா.
ஒரு நாள் பாட்டியுடன் தோட்டத்தில் உலவப் போனபோதுதான் அந்தப் பெரிய பறவையைக் கண்டாள். அதன் அலகுகள் கூர்மையாக அரிவாளைப் போல நீண்டிருந்தன, அதன் கழுத்தில் செந்நிறக் காற்றுப்பை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது, பார்க்கவே விநோதமாக இருந்த அந்தப் பறவையின் பெயர் ஹர்கிலா என்று பாட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டாள்.
ஹர்கிலா என்றால் ‘எலும்புத்தின்னி’ என்று பொருள், அதன் உருவத்தைக் கொண்டு, அதைப் பேய்ப்பறவை என்று முடிவுசெய்த அசாமிய மக்களின் அறியாமை அது. உண்மையில் ஹர்கிலாக்கள் இயற்கைத் துப்புரவுப் பணியாளர்கள் (scavengers) என்பதால் கழிவைத் தின்று உயிர்வாழும். அதைக் கண்டு பயப்படத் தேவையில்லை என்று அறிந்த தருணத்தில் இருந்து பூர்ணிமாவின் உலகத்திற்குள் நுழைந்துவிட்டன அந்தப் போதா நாரைகள்.
ஊர் திரும்பியபோது...
காம்ரூப்பில் மேல்படிப்பைத் தொடர இயலாததால் பூர்ணிமாவை வெளியூர் அனுப்பினார் பாட்டி. பெற்றோரைப் பிரிந்தபோது ஏற்படாத துயரம், பாட்டியையும் பறவைகளையும் பிரிந்தபோது அவளுக்கு ஏற்பட்டது. சிறிது சிறிதாகப் படிப்பில் ஆழ்ந்தாள் பூர்ணிமா.