

நாம் கட்டும் வீடுகள் காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஒவ்வோர் அறையிலும் எந்தத் திசையில், எவ்வளவு உயரத்தில் ஜன்னல் வைத்தால் நன்றாகக் காற்று வரும் என்று கட்டிடப் பொறியியல் வல்லுநரோடு கலந்து ஆலோசிக்கிறோம். சரியாகக் காற்றோட்டம் இல்லாத அறையில் வாழ்வது கடினம்.
தரைக்கு மேலே கட்டப்படும் வீடுகளுக்கே இவ்வளவு கவனம் தேவை என்றால், தரைக்கடியில் வீடு கட்டி அதுவும் காற்றோட்டமாக இருக்க வேண்டுமென்றால் எவ்வளவு மெனக்கெட வேண்டும். அமெரிக்கா, கனடா நாடுகளில் வாழும் பிரெய்ரி டாக் (praire dogs) எனப்படும் அணில் வகை பூமிக்கடியில் 10-15 அடி வரை வளைகள் தோண்டி வாழ்கின்றது.
வளையின் நீளம் கிட்டத்தட்ட 15 - 30 அடி அளவுவரை இருக்கின்றது. பிரெய்ரி அணில்கள் உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜன் அவசியம். ஆனால், ஐந்தடி ஆழமுள்ள அதேநேரம் கிளை கிளையாகப் பிரியும் நீளமான வளைகளுக்குள் தானாகக் காற்று சென்று வராது.
பிறகு எப்படித் தங்கள் வளைகளைக் காற்றோட்டமாக அவை மாற்றுகின்றன? ஆராய்ச்சியாளர்கள் பிரெய்ரி அணில்களின் வளைகளை ஆராய்ந்தபோது, அவர்கள் கண்டறிந்தது ஆச்சரியமூட்டும் இயற்பியல் கோட்பாடு. பள்ளிப் பாடத்தில் படித்த பெர்னொலி தத்துவம்தான் அது.