

புரச மலர் படம்: குஞ்சன் | புரச மலர் படம்: குஞ்சன்
புங்க மரத்தின் நிழல் மிகக் குளுமையானது. வெயில் கொளுத்தும் கோடையில் இலைகள் அடர்ந்த அதன் நிழல் இதமானதாக இருக்கும். புங்க மர நிழலைத் தாயின் மடி தரும் நிறைவுடன் எங்கள் அம்மா ஒப்பிடுவார்: ‘புங்க மர நிழலும் மங்காத் தாய்மடிச் சுகமும் ஒன்றாம்’. நீர்த் தேவையின்றி நிலைத்து நிற்கக் கூடிய மரம் அது.
அதில் பூக்கள் வரும்போது நிறையத் தேனீக்களும் சிட்டுகளும் வட்டமிடும். பூக்கள் உதிரும் பருவத்தில் மரத்தடியில் வெண் கம்பளம் விரித்தாற் போலிருக்கும். மழை வரும்போது உதிர்ந்த மலர்கள் மழையால் சிறுசிறு வரப்புகளாக இணைந்து மழைநீர்த் தடுப்புகளாக மாறும். மழைக் காலத்தில் மரத்தில் புழுக்கள் பெருகிவிடும். அவற்றை உண்பதற்கு நிறையப் பறவைகள் வந்திறங்கும்.
ஒருமுறை பொங்கல் நாளன்று ஒரு மின்சிட்டைப் புங்க மரத்தில் கண்டேன். பெயருக்கு ஏற்றாற்போல் அது மின்னலாகப் பாய்ந்து, கிளைக்குக் கிளை தாவிக் கொண்டிருந்தது. அதன் அடிப்பகுதி செங்கதிர் வண்ணமும் மஞ்சள் வண்ணமும் இணைந்து சுடர்விடும் அழகு இனிமையாக இருந்தது.
செஞ்சுடர் வண்ணமே அதைக் காட்டிக்கொடுக்கும். அடர்ந்த இலைகளுக்கு இடையில் மறையும், அதை முழுமையாகக் காணக் காத்திருக்க வேண்டியிருந்தது. பொங்கல் பரிசாக அதைக் கண்டதில் மகிழ்ந்தோம். புங்க மர விதைகளுடன் வேம்பு விதைகளையும் சேர்த்துப் பொடியாக்கி, கால்நடைச் சிறுநீரில் ஊற வைத்துப் பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்துவது உண்டு.