புதிய உயிர்ப்பன்மை மரபுத் தலங்கள்: எலத்தூர் குளம், நாகமலை குறித்து விழிப்புணர்வு

புதிய உயிர்ப்பன்மை மரபுத் தலங்கள்: எலத்தூர் குளம், நாகமலை குறித்து விழிப்புணர்வு
Updated on
2 min read

ஈரோடு நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் குளம் மற்றும் நாகமலை குன்று தமிழ்நாட்டின் மூன்றாவது மற்றும் நான்காவது பாரம்பரிய பல்லுயிர் தலமாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.

பல வகையான தாவரங்கள், பறவைகள், பூச்சிகள், ஊர்வனங்கள் மற்றும் பாலுட்டிகளுக்கு வாழ்விடமாக இவ்விரண்டு இடங்களும் திகழ்கின்றன.

எலத்தூர் உயிர்ப்பன்மை மரபுத் தலத்தில் 693 உயிரினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 204 பறவைகள், 174 பூச்சி இனங்கள், 228 தாவர வகைகள், 17 ஊர்வன, 18 எட்டுக்காலிகள், 20 மிதவை நுண்ணுயிரிகள், 8 பாலூட்டிகள், 24 இதர பல்லுயிர்கள் வாழ்வது குறிப்பிடத்தக்கது.

நாகமலை குன்றில் உள்ள காட்டுப்பகுதியில் இதுவரை 135 வகையான பறவைகள், 138 தாவர இனங்கள், 106 பூச்சிகள், 23 எட்டுக்காலிகள், 17 ஊர்வன, 10 பாலூட்டிகள், 8 இதர பல்லுயிர்கள் என மொத்தம் 437 உயிரினங்கள் வாழ்வது சூழல் அறிவோம் குழுவின் ஆய்வுகள் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

எலத்தூர் குளம் மற்றும் நாகமலை குன்று உயிர்ப்பன்மை மரபுத் தலமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டதன் நோக்கம், அவற்றின் சிறப்பம்சங்கள்‌, சூழலியல் முக்கியத்துவம், இங்கு வாழும் பல்லுயிர்கள் குறித்து தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் விழிப்புணர்வு வாகன ஊர்வலம் ஈரோடு நம்பியூர் தாலுகாவில் உள்ள கிராம பகுதிகளில் இந்த வாரம் நடைபெற்றது.

இதில் முக்கியமாகக் குழந்தைகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் உயிர்ப்பன்மை மரபுத் தலம் எவ்வாறு உள்ளது, அதன் முக்கியத்துவம், எவ்வாறு அதை பேணி காக்க வேண்டும் என்பது குறித்து காணொளிகள் மூலம் அறிந்துகொண்டனர்.

ஈரோடு மாவட்டம் எலத்தூர், நாகமலை, வெட்டையம்பாளையம், நம்பியூர், மூணாம்பள்ளி, கரட்டுப்பாளையம், எ.செட்டிபாளையம் ஆகிய இடங்களில் இந்தக் காணொளி வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும் இந்த விழிப்புணர்வு நிகழ்வை ஏற்பாடு செய்த ஈரோடு மாவட்ட நிர்வாகத்துக்கு சூழலியல் ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in