தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 53: வட்டம் சிறந்த வடிவம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 53: வட்டம் சிறந்த வடிவம்
Updated on
2 min read

நீ

ரின் பரவல் முறையைப் பார்த்தால் நமக்கு ஓர் உண்மை விளங்கும். அது வட்ட வடிவிலேயே தனது பரவல் வழியை அமைத்துக்கொள்கிறது. ஒரு குளத்தில் கல்லை எறிந்தால், அது உருவாக்கும் வடிவம் வட்டமாகவே இருக்கும். அலைகள் வட்ட வடிவில் பரவுகின்றன. வட்டம் என்பது இங்கு மிக முக்கியமானது.

குறிப்பாக 1,600 சதுர அடி கொண்ட ஒரு பரப்பளவு 20-க்கு 80 என்ற முறையில் செவ்வகமாக இருந்தால், அதன் சுற்றளவு 200 அடி. அதேநேரம் அது 40-க்கு 40 என்ற முறையில் சதுரமாக இருந்தால், அதன் சுற்றளவு 160 அடியாக இருக்கும். அதே பரப்பளவு கொண்ட வட்டத்தின் சுற்றளவு 141 அடிகளாகவே இருக்கும்.

வேலி அமைப்பதாக இருந்தால், நாம் தேர்வு செய்யும் இடத்தை வட்டமாக அமைத்தால் அதிக பரப்பளவைக் குறைந்த செலவில் அடைத்துவிடலாம். எனவே, இயற்கையின் பாங்கு இங்கு கவனிக்கப்பட வேண்டும். நீர்த்தொட்டி அமைப்பதாக இருந்தாலும் வட்டம் சிறந்த வடிவம். ஒரு பண்ணைக் குட்டை அமைப்பதாக இருந்தாலும் வட்டமே மிக அருமையான வடிவம். நீரின் அழுத்தம் வட்டமாகப் பரவும்போது, சுவர்களில் விசை பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதனால் கரைகள் எளிதில் உடைவதில்லை.

நமது முன்னோர்கள் உருவாக்கிய குளங்கள் பெரிதும் வட்ட வடிவில்தான் அமைந்துள்ளன. ஏன் திருவைகுண்டம் அணைகூட நமது மன்னர்கள் காலத்தில் குதிரை லாட வடிவில்தான் அமைக்கப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர் அதைச் செவ்வக வடிவமாக மாற்றியபோது பலமுறை உடைந்ததாகவும், பின்னர் மூத்தவர்களின் அறிவுரையின்படி வட்ட வடிவத்துக்கு மாற்றியதாகவும் வரலாற்றுச் செய்திகள் உண்டு. எனவே, ஒரு பண்ணையில் பாங்கமைப்பு மிகவும் அடிப்படையானது.

மரங்களைப் பொதுவாக நேர்நேராக நட்டு வைப்போம். இது மேற்கத்திய முறை, ஐரோப்பியர்களிடம் இருந்து கற்றுக்கொண்டது. எல்லா நேரத்திலும் நேர் என்ற கோட்பாடு எடுபடாது. சூழலுக்கும் இடத்துக்கும் ஏற்ற வகையில் பல கோண முறையில் அமைக்க வேண்டும்.

பாங்கமைப்புக்கு மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டு சிலப்பதிகாரத்தில் ‘ஆய்ச்சியர் குரவை’ என்கிற பகுதியில் ஆயர் பெண்கள் தங்கள் கைகளைக் கோத்து வட்டமாக நின்று ஒரு பாடலை அமைக்கின்றனர். அது ஓர் அழகிய பாங்கமைப்பு வடிவமாகச் சொல்லப்படுகிறது. வடக்குப் பக்கம் ஒரு பெண்ணை நிறுத்துவார்கள். பின் இடப்புறமாக அடுத்த பெண்ணை நிறுத்துவார்கள். இப்படியாக ஏழு பெண்களை நிறுத்தி ஏழு சுரங்களை வடிவுபடுத்திப் பண்களை உருவாக்கும் முறையை இளங்கோவடிகள் விளக்குகிறார். ஆய்ச்சியர் பெண்களிடத்தில் செம்மையான தமிழிசை அன்று நிறைந்திருந்த செய்தியைக் காண முடிகிறது. அவர்கள் அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்வதற்கு இந்தப் பாங்கமைப்பு முறையையே பின்பற்றிவந்துள்ளனர்.

“தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார்

எழுவரிளங் கோதை யார்

என்றுதன் மகளை நோக்கித்

தொன்றுபடு முறையால் நிறுத்தி

இடைமுது மகளிவர்க்குப்

படைத்துக்கோட் பெயரிடுவாள்

குடமுதல் இடமுறை யாக்குரல் துத்தம்

கைக்கிளை உழைஇளி விளரி தாரமென

விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே''

(சிலம்பு: ஆய்ச்சியர் குரவை: 7)

(அடுத்த வாரம்: பழங்குடிகளின் பாங்கமைப்பு)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in