

சோளம் என்றால் மஞ்சளாக இருக்கும் என்றே பலரும் நம்புகிறோம். அன்றைய மக்காச்சோளம், தற்போதைய அமெரிக்க இனிப்புச் சோளத்தின் காரணமாக நமக்கு இப்படித் தோன்றுகிறது. உண்மையில் நமது நாட்டுச் சோள வகை மஞ்சள் நிறங்கொண்டவை அல்ல. இவை இருங்கு சோளம் (sorghum) என்று அழைக்கப்படுகின்றன. இவை மக்காச்சோளம், இனிப்புச் சோள முத்துகளைவிடச் சிறியவை.
வெண்சாமரச் சோளம், சிவப்புச் சோளம், வெள்ளைச் சோளம், பழுப்புநிறச் சோளம் எனச் சோளத்தில் பல வகை உள்ளன. உலகெங்கும் உள்ள மிதமான தட்பவெப்ப பகுதிகளில் விளையும் பயிர் சோளம்.
அரிசி, கோதுமையைவிடப் பல மடங்கு ஊட்டச்சத்துகளைக் கொண்டது சோளம். இதில் உடலுக்குத் தேவையான புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, பீட்டா கரோட்டின், தயமின், நியாசின், ரிபோபிளேவின், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ உள்ளிட்ட சத்துகள் மிகுந்துள்ளன.
சோளத்தில் இருக்கும் நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள், மூல நோய் போன்றவை ஏற்படாமல் தடுப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது; பாஸ்பரஸ் சத்து உடல் எலும்புகளின் வளர்ச்சிக்கும், சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டுக்கும் உதவுகிறது; மக்னீசியம் சத்து சீரான இதயத்துடிப்பை உறுதிசெய்வதோடு, எலும்புகளின் அடர்த்தி, உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது.
இதில் இருக்கும் ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பைக் குறைத்து ரத்த நாளங்கள், இதயத்திற்குச் செல்லும் தமனிகளில் கொழுப்பு படிந்துவிடாமல் தடுத்து, சீரான ரத்தவோட்டத்தை உறுதிப்படுத்தி, இதய பாதிப்புகள் ஏற்படாமல் காக்கிறது.
சோளத்தில் உள்ள பைட்டோகெமிக்கல் எனப்படும் வேதிப்பொருள், உடலில் இயற்கையாக உற்பத்தியாகும் இன்சுலின் சுரப்பைச் சீராக வைத்து, நோயாளிகளுக்கு ரத்தத்தில் திடீரென சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் ஆபத்தான நிலையைத் தடுக்கிறது; பீட்டா கரோட்டின் கண் செல்களின் வளர்ச்சியை ஊக்குவித்து பார்வை திறனைப் பாதுகாக்கிறது.
நன்றி: பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு