வீர விளையாட்டு மட்டுமல்ல ஜல்லிக்கட்டு

வீர விளையாட்டு மட்டுமல்ல ஜல்லிக்கட்டு
Updated on
2 min read

மிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நூற்றாண்டுகளாகவே ஜல்லிக்கட்டு நடந்திருப்பதைச் சமர்பிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. பாரம்பரியமான வீர விளையாட்டான இது ‘ஏறு தழுவுதல்’ எனவும் அழைக்கப்படுகிறது.

காளையை அடக்க முயலும் மனிதனைச் சித்தரிக்கும் ஓவியங்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியத்தின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் கலித்தொகை, மலைபடுகடாம் போன்ற இலக்கியப் படைப்புகளிலும் மக்கள் ஜல்லிக்கட்டைப் பார்த்து மகிழ்ந்ததாகக் குறிப்புகள் உள்ளன. வீர விளையாட்டான இது,திருமணத்திற்குப் பொருத்தமான ஆண்களைக் கண்டுபிடிப்பதற்காகவும் நடத்தப்பட்டது. காளைச் சண்டையில் வெற்றி பெறுபவர் அந்தப் பெண்ணுக்குப் பொருத்தமானவராகக் கருதப்பட்டு, விளையாட்டில் தோல்வியுற்ற மற்றவர் நிராகரிக்கப்பட்டனர்.


‘கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்’

என்கிறது கலித்தொகை. அதாவது ஒரு பெண் தன் காதலன் ஏறுதழுவும் வீரனாக இருக்க வேண்டுமென்றும் அப்படி இல்லையெனில் மறுபிறப்பில்கூட அவனைக் காதலனாகக் கொள்ள மாட்டாள் எனவும் கூறுகிறது கலித்தொகை.

நாட்டு இனங்கள் பாதுகாப்பு

ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது எந்தக் காளை வலிமையானது என்பதைக் கண்டறிவதற்கும்தான். சண்டையில் வெற்றிபெறும் காளைகள் இனப்பெருக்கதிற்குப் பயன்படுத்தப்பட்டு, வலிமையன சந்ததிக்கு வழிவகுக்கும். பசு பலமான காளையுடன் இணைந்து கருவுற்றால் தரமான பால் பெறுவதற்கு உதவுவதாக அறியப்பட்டது. நாட்டு இன மாடு, அயல்நாட்டு இனங்களைவிட ஒன்பது மடங்கு குறைவான அளவு பால் கொடுக்கும். ஆனால், நாட்டு மாடுகளின் பால் ஆரோக்கியமானது, நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்த்து நோய்களில் இருந்து மனிதர்களைக் காக்கிறது.

உள்நாட்டு மாடுகளின் பால் (காங்கேயம், ஓங்கோல், தார்பார்கர்) A2 பால் என்றும், அயல்நாட்டு இனங்களின் பால் (ஜெர்சி, ஹோல்ஸ்டீன், சுவிஸ்) A1 பால் என்றும் அழைக்கப்படுகிறது. உள்நாட்டு இனங்களின் பாலில் A2 பீட்டா என்கிற புரதம் உள்ளது. இது எளிதில் செரிமானம் அகும். அயல்நாட்டு இனங்களின் பாலில் எளிதில் ஜீரணிக்க முடியாத A1 பீட்டா கேசீன் உள்ளது. A2 பாலைவிட A1 பாலின் உற்பத்தி அதிக அளவில் உள்ளதால் மக்கள் அதைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். மனித நோய் எதிர்ப்புச் அமைப்பு, A1 கேசீனை ஒவ்வாமைப் பொருள் என கருதி எதிர்ப்பதால் ஆட்டோ இம்யூன் நோய்கள் உருவாகின்றன.

கணையத்தில் பீட்டா செல்கள் எளிதில் சேதம் அடையும் அபாயமும் உள்ளது. இதன் விளைவாக நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் மற்றும் பல நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் தரமான பால் அதிக அளவில் கிடைப்பது அவசியமாகிறது. அதேபோல் நம் நாட்டு காளை இனங்கள் அழியாமல் பாதுகாப்பதும் ஜல்லிக்கட்டு நடத்த முக்கிய காரணமாக இருக்கிறது.

- ஆஷிகா குமார், பயிற்சி இதழாளர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in