

பிரமிடுகளில் வைக்கப்பட்டிருக்கும் மம்மிகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அந்த மம்மிகளில் காணப்பட்ட குதிரைவாலி தானியத்தின் படிவங்களைக் கண்டு வியப்படைந்தார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் குதிரைவாலியைத் தங்கள் உணவில் பயன்படுத்தினார்கள் என்பதை உணர்த்திய கண்டறிதல் இது.
இந்தியாவில் தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம், சண்டிகர் போன்ற மாநிலங்களில் குதிரைவாலி பரவலாகப் பயிரிடப்படுகிறது. இதன் விளைந்த கதிர், குதிரை வாலைப் போல் தோற்றமளிப்பதால் அந்தப் பெயர் வந்தது.
குதிரைவாலியின் மருத்துவ சிறப்புகள் எண்ணிலடங்காதவை! இது புரதச் சத்து நிறைந்தது; எளிதில் செரிமானம் அடையக் கூடியது. குதிரைவாலியில் மாவுச்சத்து (கார்போ ஹைட்ரேட்) அளவு குறைவாக இருப்பதால், மெதுவாக செரிமானம் அடைகிறது. அதாவது, நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு இது.
குதிரைவாலியில் பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்து அதிகளவில் உள்ளன. சமைக்கும்போது கால்சியம் பாஸ்பேட்டாக அது மாறுகிறது. இதனால், குதிரைவாலியை சமைத்துச் சாப்பிடும்போது எலும்புகள் வலிமை பெறும்; பற்களும் உறுதியடையும்.
வளரும் குழந்தைகளுக்குத் தேவைப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட், பாஸ்பரஸ், கால்சியம், நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து போன்றவை குதிரைவாலியில் அதிகம் உள்ளன.
குதிரை வாலியைச் சாப்பிட்டால், அவர்கள் நாள் முழுக்கச் சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடனும் இருப்பார்கள் அதிக உடல் உழைப்பின்றி, காலை முதல் மாலை வரை உட்கார்ந்து வேலை செய்வோருக்குக் குதிரைவாலி இயற்கையின் கொடை. இதில் உள்ள நார்ச்சத்துகள், உடல் ஆரோக்கியம் மேம்பட வழிவகுக்கின்றன. உடல் வலிமைபெற வேண் டுமா? குதிரைவாலியைச் சாப்பிட்டுப் பாருங்கள்!
நன்றி: பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு