

வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் பரவலாக வளர்க்கப்பட்டுவரும் சிறுதானியம் கம்பு. வறட்சியும் குறைந்த மண் வளமும் அதிக வெப்பநிலையும் கொண்ட பகுதிகளுக்கு ஏற்ற பயிர் இது. மற்ற சிறுதானியங்களுடன் ஒப்பிடும்போது, கம்பு அதிக ஆற்றல் உள்ளடக்கத்தைக் கொண்டது.
இதில் நார்ச்சத்து, அத்தியாவசிய அமினோ அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின்கள், கால்சியம், இரும்பு தாதுக்கள், நன்மை தரும் கொழுப்புகள் உள்ளிட்டவை நிரம்பியுள்ளன. இதில் மிகுந்திருக்கும் இரும்பு, ஃபோலிக் அமில உள்ளடக்கம் காரணமாகக் கர்ப்பிணிப் பெண்களுக்கும், தாய்ப் பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஏற்ற ஆரோக்கியமான உணவாகிறது கம்பு.
உடல் பருமன், நீரிழிவு நோய், மூல நோய், ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்குக் கம்பு மிகுந்த பயன் அளிக்கும். இதய நோய், செரிமானப் பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கம்பு தானியத்தை அவசியம் சாப்பிட வேண்டும். நமது பாரம்பரிய மருத்துவத்தில் மூன்று தோஷங்களையும் சமநிலைப்படுத்த கம்பு பரிந்துரைக்கப்படுகிறது.
கம்பை தினந்தோறும் காலையில் கூழ் அல்லது களியாகச் சாப்பிட்டு வருவது, உடலில் கெட்ட கொழுப்பு தங்குவதைத் தடுக்கும்; தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை அளிக்கும்; உடல் பலத்தையும் பெருக்கும். தினமும் காலை வேளைகளில் கம்பங்கூழைப் பருகுவது, உடல் அதிக வெப்பமடைவதை மட்டுப்படுத்தும். ‘கெரட்டின்’ எனும் புரதம் கம்பில் நிறைந்துள்ளதால், இதை அதிகம் சாப்பிடுவது முடி கொட்டுவதைக் குறைக்கும். கம்பங்கூழ், களி, அடை, தோசை, பக்கோடா, கிச்சடி, முளைவிட்ட பயிர் என எந்த வகையிலும் சாப்பிட முடியும்.
நன்றி: பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு