

கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. விடுமுறையில் என்ன செய்யலாம் எனக் குழந்தைகள் சிந்தித்தனர். அவர்களுக்கு இயற்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவல் மிகுந்தது. அதற்கு முதற்படியாகக் காட்டுக்குள் சென்று பறவைகளைப் பார்க்கலாம் என முடிவுசெய்தனர்.
அந்தக் காட்டின் ஒரு பகுதியில் ஒரு வீடு இருந்தது; அதில் அவர்களுக்குத் தெரிந்த குடும்பத்தினர் வசித்துவந்தனர். அவர்கள் தம் உணவுத் தேவைக்காகக் காட்டின் அருகிலேயே ஒரு சிறிய பகுதியை விளைநிலமாக்கி அதில் சிறுதானியங்களையும் காய்கறிகளையும் பயிரிட்டுவந்தனர்.
பல வகையான மரங்கள் உள்ள அந்தக் காட்டுப்பகுதியில் கிடைக்கும் பழங்கள், பூச்சிகள், இயற்கை விவசாயத்தில் விளையும் தானியங்கள், பயிர்களில் உள்ள பூச்சிகள், புழுக்கள் யாவற்றையும் உண்ண உள்ளூர்ப் பறவைகளான சில்லைகள், சின்னான்கள் ஆகியனவும் வலசை பறவைகளான ஐரோப்பியப் பஞ்சுருட்டான், தகைவிலான் ஆகிய வையும் அப்பகுதியில் இருந்ததை அவர்கள் பார்த்திருந்தனர். இம்முறை அவர்கள் வருமுன் அப்பறவைகள் திரும்பிச் சென்றதை அறிந்து, சற்றே ஏமாற்றமடைந்தனர். இருந்தாலும் மற்ற பறவைகளைப் பார்க்கலாம் என்பதால் மகிழ்ந்தனர்.
வியப்புக்கு மேல் வியப்பு: காட்டிலுள்ள வீடு, குழந்தைகள் வரவால் கலகலப்பானது. காலையில் அவர்கள் விழிக்கும் முன்பே அக்காக் குயில் அழைப்புவிடுத்தது. ஆனால், தூங்கிக்கொண்டிருந்ததால் அது அவர்களுக்குக் கேட்கவில்லை. அதன்பின் கரிக்குருவியும் குண்டு கரிச்சானும் குழந்தை களைக் கூவி எழுப்பின. பிற பறவைகளும் ஒவ்வொன்றாக விழித்ததும் குரலெழுப்பின. குறிப்பிட்ட நேரத்தில் நாள்தோறும் மீன்கொத்தி அழைத்தது. அது எப்படிச் சரியாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் வருகிறதெனக் குழந்தைகள் வியந்தனர்.
விடிந்ததும் இருகண்நோக்கியையும் குறிப்பேடுகளையும் எடுத்துக்கொண்டு பறவை களைக் காணக் குழந்தைகள் புறப்பட்டனர். தங்களுக்கு வழிகாட்டப் பறவையியலாளரான தம் நண்பர் ஒருவரையும் அழைத்துச் சென்றனர். கருஞ்சிட்டு, தேன்சிட்டு, குக்குறுவான் எனத் தொடர்ந்தன அழைப்புகள். சின்னான்களும் தவிட்டுக்குருவிகளும் கூட்டமாகத் திரிந்தன. வெண்புருவச் சின்னான் ஏதோ சொல்ல, யாரிது நம்மைப் போலவே கச முசாவெனப் பேசுவது எனக் குழந்தைகள் திகைத்தனர்.
பூச்சிப் பிடிப்பான்கள்: சற்று நேரம் கழித்து மாடுகள் மேயச் சென்றன. உண்ணிக்கொக்குகளும் கரிக் குருவியும் மாடுகளின் மேலேறியும் தனியாகப் பறந்தும் பின்தொடர்ந்து சென்றன. மாடுகளைக் கடிக்கும் பூச்சிகளை அவை பிடிப்பதைக் கண்ட குழந்தைகள் அவற்றின் ஒத்திசைவான வாழ்க்கையைக் கண்டு வியந்தனர்.
காட்டின் அருகில் இருந்த விளைநிலத்தின் ஒரு பகுதியில் உழவர்கள் ஏர் உழுதனர். அப்போது வெளிப்பட்ட பூச்சிகளைப் பிடிக்கச் சுமார் ஐம்பது மைனாக்கள் அங்குக் கூடின. இவ்வளவு எண்ணிக்கையில் அவற்றை ஒரே இடத்தில் கண்டதில் குழந்தைகள் மிகவும் மகிழ்ந்தனர்.
செடிகளுக்கு நீர் பாய்ச்சும்போது வெளி யேறும் பூச்சிகளைப் பிடிக்கக் கொக்குகள் பல வந்துசேர்ந்தன. அவை அசைந்தாடிப் பூச்சிகளைப் பிடிப்பதே தனியழகுதான். வெயில் ஏற ஏறக் குழந்தைகள் களைத்து விட்டனர். இனி மாலையில் பார்க்கலாம் என வீடு திரும்பினர். வீட்டிற்கு அருகில் குருவிகளுக்கான நீர்த்தொட்டி இருந்தது. அங்கு அவர்களுக்கு நல்ல வேடிக்கை காத்திருந்தது.
பகல் வேளையில் குருவிகள் ஒவ்வொன்றாகத் தொட்டியில் தண்ணீர் குடிப்பதும், அதில் இறங்கிக் குளிப்பதுமாக இருந்தன. ஒவ்வொரு குருவியும் சில முறையேனும் தண்ணீரில் முங்கி எழுந்தது. குளிப்பதும் அதிலே, குடிப்பதும் அதையே! குளித்து முடித்ததும் அருகிலுள்ள மரத்தில் தவிட்டுக் குருவிகள் நெருக்கமாக அமர்ந்து தம் அலகுகளால் ஒன்றையொன்று அன்பாகக் கோதிக்கொடுத்தன. அவற்றைக் கடிக்கும் பூச்சிகளைப் பிடித்தன போலும்.
குருவிகள் எவ்வளவு ஒற்றுமையாக ஒன்றுக்கு இன்னொன்று உதவிக் கொள்கின்றன! தாமும் அதுபோல் இருக்க வேண்டும் எனக் குழந்தைகள் முடிவுசெய்தனர்.
இன்னும் பல பறவைகள்: அதற்குள் டக் டக்கென்னும் ஒலி கேட்டது. குழந்தைகள் யாரோ கதவைத் தட்டுகிறார்கள் என வெளியில் வந்து பார்த்தால் யாரையும் காணோம். தேடியதில் அருகிலுள்ள மரத்திலிருந்து ஒலி வருவதை உணர்ந்தனர். மரங்கொத்திதான் மரத்தைக் கொத்துகிறதோ எனத் தேடினர். அவர்கள் நினைத்தது சரிதான். அருகிலேயே ஓங்கி உயர்ந்த அரச மரத்தில் பூச்சிகளைப் பிடித்து மரங்கொத்தி மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தது.
மரங்களில் புதுத் தளிர்கள் காற்றிலாடிக் குழந்தைகளை வரவேற்றன. பல வண்ண மலர்கள் உதிர்ந்து மலர்ப் படுக்கை விரித்திருந்தன. மரங்களின் நிழல் அணைப்பில் குழந்தைகள் சற்று நேரத்தில் தூங்கிவிட்டனர். மாலையில் குருவிகள் தம் இருப்பிடம் செல்லத் திரும்பின. அப்போதும் குழந்தைகள் பல வகைப் பறவைகளைக் கண்டு களித்தனர்.
குண்டு கரிச்சானும் பச்சைச் சிட்டும் பல குரலிசையால் குழந்தை களைத் திகைப்பில் ஆழ்த்தின. இரவு தொடங்கும்முன் மின்கம்பியில் அமர்ந்த கரிக்குருவிகள் ஏவுகணைகளைப் போல் பாய்ந்து பூச்சிகளைப் பிடித்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. குழந்தைகளுக்கு நேரம் போனதே தெரியவில்லை.
இரவுப் பறவைகள்: இரவு தொடங்கியதும் ஆந்தைகளும் இராப்பாடியும் அழைத்தன. புள்ளி ஆந்தை, கொம்பன் ஆந்தை, பொரிப்புள்ளி ஆந்தை, வெண்ணாந்தை எனப் பலவும் அழைத்தன. அவை இரவு முழுக்க உழைத்து உழவருக்குத் தொல்லை தரும் எலி உள்ளிட்ட பலவற்றை உண்டு உதவும் என்பதைக் குழந்தைகள் அறிந்தனர்.
இராப்பாடியின் அழைப்பைத் தவளையின் அழைப்பென குழந்தைகள் முதலில் தவறாகப் புரிந்துகொண்டனர். பின்னர் கூகுளின் உதவியால் தெளிவு பெற்றனர். பின்னர் வெளியில் எரிந்த விளக்கொளிக்கு வௌவால் வந்தது. பூச்சிகளைப் பிடிக்கத் தவளைகள் வந்தன. அவை குதித்துக் குதித்துப் பூச்சிகளைப் பிடித்து வேடிக்கை காட்டின.
இரவில் குழந்தைகள் அதுவரை தாங்கள் பார்த்த பறவைகளின் பெயர்களைப் பட்டியலிட்டனர். கதிர்ச்சிட்டுகள் சில வகை, மாம்பழச் சிட்டில் இரண்டு வகை, பச்சைச் சிட்டு, மின்சிட்டு, மாங்குயில், கீச்சான், குயில் கீச்சான், குயில், காடை, கௌதாரி, செவ்வாயன், சுடலைக்குயில், உழவாரன், தகைவிலான், கொண்டை உழவாரன், சாம்பல் தகைவிலான், கிளி, வல்லூறு, தேன்பருந்து, கருந்தோள் பருந்து, ஆள்காட்டி, ஆந்தைகளில் சில வகை எனப் பட்டியல் 90 வகைகளுக்கு மேல் நீண்டதில் குழந்தைகளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.
இனிமேல் ஒவ்வொரு விடுமுறையையும் காட்டிலேயே கழிப்பதென முடிவுசெய்தனர். இன்னும் பல உயிரினங்களைப் பற்றியும் அறிந்துகொள்ளும் ஆவல் அவர்களுக்கு மிகுந்தது. பறவைகளால் வேளாண்மை எப்படி மேம்படும் என்றும் அவர்கள் உணர்ந்தனர். பல்லுயிர்ச் செழிப்பே நல்வாழ்வுக்குத் துணை என்பதை நன்றாகப் புரிந்துகொண்டனர். பறவைகளாலும் அவற்றைப் பார்க்க வந்த குழந்தைகளாலும் காடும் வீடும் நிறைந்தன.
‘அழகு அழகு எத்தனை அழகு
இயற்கையின் படைப்பில் எல்லாம் அழகு!'
எனப் பாடிக்கொண்டே குழந்தைகள் தூக்கத்தில் ஆழ்ந்தனர்.
| மே 13: ஓரிட வாழ் பறவைகள் நாள் இந்தியாவில் ’ஓரிட வாழ் பறவைகள் நாள்’ மே 13 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் பறவை ஆர்வலர்கள் இந்தியாவில் மட்டும் வாழும் பறவைகளைக் கண்டறிந்து பதிவுசெய்வர். இந்த மாபெரும் முயற்சியில் உலகம் முழுவதும் உள்ள பறவை ஆர்வலர்களுடன் நீங்களும் பங்கேற்கலாம். |
| எப்படிப் பங்கேற்பது? மே13 அன்று உங்கள் வீட்டைச் சுற்றியோ, அருகிலுள்ள பூங்காவிலோ, பறவைகள் அதிகம் கூடக்கூடிய இடங்களிலோ குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்குப் பறவைகளைப் பார்த்து, அவற்றின் அழைப்பொலிகளைக் கேட்டு, அடையாளம் கண்டு, பறவைப் பட்டியலைத் தயார்செய்ய வேண்டும். பிறகு அந்தப் பட்டியலை www.ebird.org/indiaவில் பதிவேற்ற வேண்டும். மேலும் விவரங்களுக்கு: https://bit.ly/41jijmB |
| தமிழில் இயற்கையைப் பற்றி எழுத விருப்பம் உள்ளவர்கள் இப்படிவத்தைப் பூர்த்தி செய்யவும் - bit.ly/naturewriters |
- கட்டுரையாளர் - பாவலர், பறவை ஆர்வலர்; ara.selvamani@gmail.com