

சரியாகப் பறக்கப் பழகாத குயில் குஞ்சு ஒன்றைக் காகங்கள் சூழ்ந்து கொத்தி விரட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். தத்தித் தத்தி சருகுகளுக்கு உள்ளும் மரப்பட்டைகளின் கீழும் சென்று அந்தக் குயில் குஞ்சு பதுங்கியது. குயில் குஞ்சை காகங்கள் அலகினால் வேகமாக ஓரிருமுறை கொத்தினால் அது காயமடைந்து இறந்துவிடச் சாத்தியம் உண்டு. ஆனால், காகங்கள் அப்படிச் செய்யாதது வியப்பளித்தது!
தத்தித்தத்தி ஓடி ஒளியும் குயில் குஞ்சினைச் சுற்றி அவை கத்திக் கூச்சலிட்டனவே தவிர, அதை அடைகாத்து வளர்த்த பாசத்தாலோ என்னவோ விரட்டியடிக்கவே முயன்றன.
ஏன் இப்படி? - பெரும்பாலும் மே மாத இறுதியிலும் ஜூன் மாதத் தொடக்கத்திலும்தான் இப்பறவைகளிடையேயான வாழ்க்கைப் போராட்டங்கள் நடக்கின்றன. தப்பிக்க வும் முடியாமல் பறக்கவும் இயலாமல் தத்தளித்த அந்தப் பறவையை காகங்களின் எதிர்ப்பையும் தாண்டி எடுத்து வந்து வளர்த்தேன். இந்தக் காகங்கள் ஏன் இப்படிக் கொத்தி விரட்டுகின்றன?! இதை அறிந்துகொள்ளும் முனைப்பில் தொடர்ந்து இவற்றின் செயல்பாடுகளைக் கவனித்தேன்.
பார்ப்பதற்கு காகத்தின் சாயலிலேயே இருக்கும் ஆசியக் குயில்கள் இவை. குக்குலஸ் (Cuculus) என்கிற பேரினத்தைச் சேர்ந்த இந்தக் குயிலினத்துக்குக் கூடுகட்டத் தெரிவதில்லை. இந்தக் குறையை வெற்றிகரமாகச் சமாளித்து வாழும் பரிணாம வளர்ச்சியை அவை சிறப்பாகப் பெற்றுள்ளன. காகங்களின் கூடுகளில் முட்டையிடுகின்றன. காகங்கள் அதை அறியாமல் தங்களது முட்டைகளோடு சேர்த்து அடைகாத்துப் பொரிக்க வைக்கின்றன.
தங்களது இனப்பெருக்கக் காலத்திற்குச் சமக் காலகட்டத்தில் இனப்பெருக்கம் செய்யும் பறவைகளின் கூடுகளில், அவற்றின் எதிர்ப்பைத் தாண்டி முட்டைகளை இடுகின்றன. பெரும்பாலும் ஆசியக் குயில்கள் தோற்றத்தில் தங்களைப் போன்றே இருக்கும் காகங்களின் கூடுகளில் தான் முட்டையிடுகின்றன. ஆனால், அப்படி முட்டையிடுவது லேசான காரியமல்ல. குயில்களின் வாழ்க்கை சவால்களுள் மிகவும் கடினமான செயலது.
ஒரு போராட்டம்! - இனப்பெருக்கக் காலத்தில் இக்குயில்கள், காகங்களின் கூடுகள் அமைக்கப்பட்டிருக்கும் மரங்களையே சுற்றிச் சுற்றிப் பறந்து அலைகின்றன. எப்படியும் அந்தக் கூடுகளில்தாம் தாங்கள் முட்டையிட்டாக வேண்டும் என்கிற முனைப்போடு! காகங்களுக்கும் குயில்களின் நோக்கம் தெரியும். எனவே, குயில்களைக் கூடுகளுக்கு அருகில் அண்டவிடாமல் துரத்தியடிப்பதில் கவனமாக இருக்கின்றன.
காதல் களியாட்டங்களில் நேரம் செலவிடும் இக்காலகட்டத்தில் குயில்களின் நடமாட்டம் காகங்களுக்கு ஒருவிதப் பதற்றமான மன நிலையை ஏற்படுத்துகிறது. ஆனால், குயில்களோ விடாப்பிடியாக காகங்கள் குடியிருக்கும் மரங் களில் ஜோடியாகச் சுற்றித் திரிவதும் கூடுகளைக் கவனிப்பதுமாகவே சிறகடித்து அலைகின்றன!
எப்போதுமே ஒருவித எச்சரிக்கை உணர்வோடு ஒரு பார்வையைக் கூட்டின் மீதும் மற்றொரு பார்வையைக் குயில்களின் மீதும்தான் காகங்கள் பதித்திருக்கின்றன. காகங்கள் முடிந்தவரைக் குயில்களைத் துரத்திச் செல்கின்றன. ஆனால், குயில்கள் அதையெல்லாம் பொருட்டாக எண்ணிப் பறந்து விடுவதில்லை!
மரங்களில் பழங்களைக் கொத்தி உண்பதும் தன் இணையுடன் இணைவில் மகிழ்வதுமாகவே காணப்படுகின்றன. காகங்களின் தீவிரமான எதிர்ப்பின்போது மட்டும் எழுந்து அருகில் உள்ள மரத்திற்குச் சென்று அமர்ந்துவிட்டு, சற்று நேரத்தில் மீண்டும் பழைய மரத்திற்கே வந்தமர்ந்து கொள்கின்றன.
துரத்தலும் முட்டையிடலும்: காகம் கூடு கட்டுவதற்குத் தேவையான கட்டுமானப் பொருள்களை எடுக்கச் செல்லும் போதோ, உணவு தேடச் செல்லும் போதோ, குயில்கள் கூட்டைத் தீண்டிவிடக் கூடாதென்ற அக்கறையில் இணையர்களுள் ஒன்று கூட்டின் அருகிலேயே காவல் காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், இவ்வளவு கவனத்தையும் மீறி குயில்கள் ஒரு கட்டத்தில் காகங்களின் கூட்டில் முட்டையிட்டு விடுவதுதான் ஆச்சரியம்!
காகங்கள் ஓரிரு முட்டைகளை இட்ட பிறகே, குயில்கள் அக்கூட்டில் முட்டையிட முயல்கின்றன. பெண் குயில், தான் முட்டையிடும் நேரம் நெருங்கும்போது இணைக்கு உணர்த்துகிறது. ஆண் குயில்களும் அதற்கான உதவிகளைச் செய்கின்றன. அதீத எச்சரிக்கை உணர்வு வாய்ந்த காகங்களைத் திசைதிருப்பிக் கருவுற்ற முட்டையைச் சுமந்துகொண்டிருக்கும் தனது இணையை முட்டையிட வைப்பதில் சிரத்தை எடுத்து உதவுகிறது ஆண் குயில்!
முதலில் காகத்தின் கூட்டருகே ஆண் குயில் பறக்கும்! காகங்களில் இணையர்களுள் ஒன்று முதலில் குயிலை விரட்டிச் செல்கின்றது. அந்நேரம் மற்றொன்று கூட்டில் முட்டைகளைப் பாதுகாத்தபடி அமர்ந்திருக்கும். அடுத்த கட்ட நடவடிக்கையாகக் கூட்டை நெருங்கி, காகத்தின் முட்டைகளைக் கொத்தும் பாவனைக்குக் குயில் செல்லும் போதுதான் காகங்கள் அதிவேகத் தாக்குதல்களை நடத்துகின்றன. குயிலை விடாப்பிடியாகத் தொடர்ந்து சென்று கொத்தித் துரத்துகின்றன. மறைந்திருந்து தக்க சமயத்திற்காகக் காத்திருக்கும் பெண் குயில் அக்கூட்டில் முட்டையிட்டுவிட்டு எழுந்து சென்றுவிடுகிறது.
சிறிது சிறிதாக வெளிப்படும்: குயிலின் முட்டை இளம் சாம்பல் பச்சை நிறம், காகத்தின் முட்டை இளநீலப் பச்சை நிறம். காகத்தின் முட்டையைவிடக் குயிலின் முட்டை சற்று சிறியதாக உள்ளது. இருப்பினும் இச்சிறிய வேறுபாடுகளைக் காகங்களால் அறிந்துகொள்ள இயலுவதில்லை. தனது முட்டையாகவே கருதி அடைகாக்கின்றன. குஞ்சு பருவத்தில் காகங்களுக்கும் குயில்களுக்கும் எவ்வித வேறுபாடும் தெரிவதில்லை. எனவே அவற்றைப் பாகுபாடின்றி காகங்கள் பராமரிக்கின்றன!
குயில் குஞ்சுகளுக்கும் தாங்கள் வேற்றினத்தைச் சார்ந்தவை என்று தெரியாமலேயே வளர்ந்துகொண்டிருந்தாலும், அவற்றின் மரபணுக்கள் தாங்கள் யார் என்ற உணர்வை மெல்லமெல்ல உணர்த்தத் தொடங்குகின்றன. முதலில் குரல் நாண்கள் வளர்ச்சியடைந்து கரகரப்பான அவற்றின் குரல் மென்மையாகி மாறுபாட்டை அடைகிறது. பெண் குயில் என்றால் உடலில் சாம்பல் நிறப் புள்ளிகள் தெளிவாகத் தெரியத் தொடங்குகின்றது.
உணவு பெற வேண்டி காகங்கள் குஞ்சுகளை உணவு கிடைக்கும் தரைப் பகுதிக்கும் அழைத்துவரும். ஆனால், எக்காரணம் கொண்டும் குயில் குஞ்சுகள் மரங்களிலிருந்து தரை இறங்காது. அவை தங்களது உண்மையான பெற்றோரைப் போன்றே மரங்களுக்குள் அமர்ந்து கொண்டு உணவை எதிர்பார்க்கும்.
இவ்வாறாகக் குயில் குஞ்சுகள் தனது இயற்கை யான சுபாவத்தால் கட்டுண்டு தன்னையறியாமலே தான் யார் என்பதை காகத்திற்கு வெளிப்படுத்தி விடுகின்றன. ஆனாலும் காகங்கள் சந்தேகமின்றி அடைகாத்துப் பராமரித்த அக்குயில் குஞ்சுகளுக்குத் தாய்மை உணர்வுடன் உணவூட்டி வளர்க்கின்றன.
பெற்றோருடன் சேருதல்: இவற்றையெல்லாம் மிக நிதானமாகவும் நுட்பமாகவும் கவனித்தபடியே முட்டையிட்ட குயில்கள், தங்களது குஞ்சுகளின் வளர்ச்சியைக் கண்காணித்தபடி அவை நன்கு பறக்கப் பழகியதும் குரல் மாறுபாட்டைக் காகங்கள் கண்டுணர்ந்து கொள்ளும் முன் தங்களினத்தோடு சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற அக்கறையில் குயில்கள் ஆங்காங்கே அமர்ந்திருக்கின்றன. ஆனால், குயில் குஞ்சுகளோ தான் தாயாகக் கருதும் காகத்தின் வரவையே எதிர்நோக்கியிருக்கின்றன. ஒரு கட்டத்தில் தங்களை அறியாமலே குயில் குஞ்சுகளின் குரல் வெளிப்படும் போதுதான் காகங்கள் அவற்றைக் கொத்தி விரட்டுகின்றன.
துரத்தப்பட்டக் குயில் குஞ்சுகள் சற்றுத் தூரம் பறந்து பறந்து கீழே விழுகின்றன. தத்தித்தத்தி தரையில் மறைவான இடங்களுக்குள் சென்று மறைந்துகொள்ள முயல்கின்றன. காகங்கள் கூட்டமாகக் கூடி, சத்தமிட்டபடியே அவற்றைக் கொத்தித் துரத்தியடிக்கின்றன. திடீரென்று இப்படித் துரத்தப்படுவது ஏன் என்று அறியாமல், குயில் குஞ்சுகள் குரல்கொடுக்கின்றன.
அங்கு இவற்றையெல்லாம் நோட்டமிட்டபடியே சுற்றித்திரியும் குயில்கள் உன்னிப்பாகக் கவனித்து அவற்றைப் பின்தொடர்ந்து சென்று தங்கள் இனத்தோடு சேர்த்துக்கொள்கின்றன.
ஆனால், பறக்கும் நிலையில் இல்லாத குயில் குஞ்சுகள்தான் காகங்களின் தாக்குதலினால் நடப்பதறியாமல் பலியாகின்றன. ஓரளவு காயமடைந்து விழுந்து கிடக்கும் குஞ்சுகள் நாய், பூனை போன்ற உயிரினங்களால் உண்ணப்படுகின்றன. குயில்கள் பறவை இனத்தில் விசேஷத் தன்மையுடையன. அவற்றை இயற்கையின் சூழலில் பாதுகாப்பது அறிவார்ந்த நமது அனைவரது கடமையாகும்.
- jansy.emmima@gmail.com