

‘ஏழைகளின் தங்கம்’ என்று புகழப்படுகிறது கேழ்வரகு. ராகி, கேப்பை என்றும் இது அழைக்கப்படுகிறது. ஆப்பிரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் விளைவிக்கப்படும் இந்தச் சிறுதானியம், இந்தியாவில் கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, தமிழ்நாடு, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் முதன்மைப் பயிராகப் பயிரிடப்படுகிறது.
புரந்தரதாசர் போன்றவர்களால் பாராட்டப் பட்ட பெருமை கேழ்வரகுக்கு உண்டு. நமது பாரம்பரிய உணவான கேழ்வரகே, ஆடி மாத அம்மன் திருவிழாக்களில் கூழாகப் படைக்கப்பட்டு அனைவருக்கும் விநியோகிக்கப்படுகிறது. கேழ்வரகை ஆட்டி எடுக்கப்படும் பால், பச்சிளம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கக் கொடுக்கப்படுகிறது.
குறைந்த விலையில் கிடைக்கும் கேழ்வரகு தரும் மருத்துவப் பலன்கள் மிக அதிகம். புரதம், அமினோ அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பாஸ்பரஸ் போன்ற ஊட்டச் சத்துகள் இதில் அபரிமிதமாக உள்ளன. கேழ்வரகில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல், உயர் ரத்த அழுத்தம், குடல் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.
இதில் இரும்பு, கால்சியம், பாலிபீனால் சத்துகளும் இருப்பதால் சிறாருக்கான உணவுத் தயாரிப்பில் கேழ்வரகு பெரும் பங்காற்றுகிறது. கேழ்வரகில் அதிக அளவில் இருக்கும் கால்சியம் சத்து, முதியவர்களுக்கும் மாதவிடாய் நின்ற (மெனோபாஸ்) பெண்களுக்கும் ஏற்பட சாத்தியமுள்ள எலும்புத் தேய்மானத்தை (Osteoporosis) மட்டுப்படுத்துகிறது.
ரத்தத்தில் சர்க்கரை, குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு கேழ்வரகு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. இதில் உள்ள ட்ரிப்டோபான் எனும் அமினோ அமிலம் பசியைக் கட்டுப்படுத்தும் என்பதால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான உணவு.
நன்றி: பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு