

தமிழ் ஒரு சூழலியல் மொழி,
நக்கீரன், காடோடி வெளியீடு,
தொடர்புக்கு: 80727 30977 (வாட்ஸ்அப் தகவல் மட்டும்)
நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ் மொழி, எந்த வகைகளில் எல்லாம் சூழலியலுக்கு நெருக்கமாகவும் சூழலியலின் பிரதிபிம்பமாகவும் உள்ளது என்பதை விரிவாக விளக்கும் நூல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றையும் இலக்கியத்தையும் கொண்டது தமிழ். சங்கத் தமிழ் இலக்கியங்கள் திணைக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவானவை. இப்படி ஆழமான அறிவியல் பின்புலமும், இயற்கை அறிவும் நிறைந்த தமிழ் எப்படிச் சுற்றுச்சூழல் சொல்லாடலுக்கு ஏற்ற ஒரு மொழியாக இருக்கிறது என்பதை விவரித்திருக்கிறார்.
கடலோடு உறவாடு
நாராயணி சுப்ரமணியன்
புக்ஸ் ஃபார் சில்ரன்
தொடர்புக்கு: 044 24332924
கடற்கரை நகரங்களில் வாழும் பெரும்பாலோர் வாரம் ஒரு முறையோ, மாதம் ஒரு முறையோ கடற்கரைக்குச் சென்று திரும்புகிறோம். கடல் என்பது அலைகளும் கரை மணற்பரப்பும் மட்டுமே கொண்ட பெரும் நீர்ப்பரப்பு என்று தவறாக நினைத்துவிடக் கூடாது. உலகின் மிக அதிக எண்ணிக்கையிலான, அதிக வகையிலான உயிரினங்கள் கடலிலேயே வாழ்ந்துவருகின்றன. கடலில் நிறைந்துள்ள ஆச்சரியங்களை இந்த நூலில் அறிவியல்பூர்வமாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.
தமிழகச் சுற்றுச்சூழல் நேற்று இன்று நாளை
ஜே. பால்பாஸ்கர்
பரிசல் புத்தக நிலையம்
தொடர்புக்கு: 93828 53646
தமிழ்நாட்டுச் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே பேசிவந்தவர் திண்டுக்கல் அமைதி அறக்கட்டளையைத் தொடங்கி நடத்திவந்த (மறைந்த) ஜே.பால் பாஸ்கர். சுற்றுச்சூழல் அக்கறை பெரிதாக உருவாகாத அந்தக் காலத்திலேயே, தொடர்ச்சியாகப் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் சார்ந்து விழிப்புணர்வு செயல்பாடுகளையும் போராட்டங்களையும் அவர் முன்னெடுத்து வந்தார். ‘சுற்றுச்சூழல் புதியகல்வி‘ என்கிற இதழை நடத்திவந்த அவர், சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றி எழுதியும் வந்தார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
பெருந்தொற்றுப் பேரிடர்
க.சுபகுணம்
உயிர் பதிப்பகம்
தொடர்புக்கு: 98403 64783
கரோனா பெருந்தொற்று உலகைப் புரட்டிப் போட்டது. அது தாக்கத் தொடங்கியதற்குப் பிந்தைய இந்த மூன்று ஆண்டுகளில், அந்த நோயிலிருந்து விடுபட்டுவிட்டோம். ஆனால், கரோனா பெருந்தொற்று மனிதர்களைத் தாக்கியதற்கான காரணங்கள் இன்னும் சீர்செய்யப்படவில்லை. சுற்றுச்சூழலைக் கட்டுமீறி அழித்துக்கொண்டிருக்கும் மனித இனம், அதன் எதிர் விளைவாகவே கரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டது. இந்தப் பிரச்சினையின் ஆழ, அகலங்களை இந்த நூல் அலசியுள்ளது.
காக்கைச் சிறகினிலே
வ.கோகுலா
கிழக்கு பதிப்பகம்
தொடர்புக்கு: 044 4200 9603
பறவை நோக்குதல் தமிழ்நாட்டில் பரவலாகி யுள்ளது. ஆனால், பறவைகளை அதே அளவுக்கு அறிவியல்பூர்வமாகப் புரிந்து கொண்டி ருக்கிறோமா? பறவையியலை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ளத் தமிழிலேயே இந்த நூல் வழிகாட்டுகிறது. பிரபஞ்சம், உயிர்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி ஆகியவற்றின் பின்னணியில் பறவைகளைப் பற்றியும் பறவையியல் வளர்ச்சியையும் விவரிக்கிறது இந்த நூல். பறவையியலைப் பற்றித் தமிழில் அறிவதற்கு இந்த நூல் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
ஐ பாம்பு
விஸ்வா நாகலட்சுமி
காக்கைக் கூடு
தொடர்புக்கு: 9043605144
அதிகம் வெறுக்கப்படும் உயிரினங்களில் ஒன்று பாம்பு. பாம்புகளைப் பற்றிப் புரிந்துகொள்ள அவற்றின் தோற்றம், இயற்கையில் அவற்றின் இருப்பு, வாழும் இயல்பு, மனிதர்களுக்கும் பாம்புகளுக்கும் இடையிலான தொடர்பு ஆகியவற்றை அறிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் இந்தப் புத்தகத்தில் மனிதக் குடியிருப்புகளுக்கு அருகே தென்படும் பாம்புகளைப் பற்றிய விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
தண்ணீர்
தொகுப்பு: மதுமிதா
ஸ்நேகா, தொடர்புக்கு: 9840969757
தண்ணீரைப் பற்றி 60 எழுத்தாளர்கள், பிரபலங்கள் எழுதிய கட்டுரைகள், அனுபவப்பதிவுகளின் தொகுப்பு இது. நீரலைகளும் நினைவலைகளும் என்கிற துணைத் தலைப்புடன் வெளியாகியுள்ள இந்தத் தொகுப்பு, அதற்கு ஏற்ப பல்வேறுபட்ட மனிதர்களின் நினைவலைகளை எழுத்து வழியாகப் பதிவுசெய்து தொகுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் கட்டுரைகள்
சுப்ரபாரதிமணியன்
என்.சி.பி.எச்.,
தொடர்புக்கு:044 26359906
சுற்றுச்சூழல் சீரழிவுப் பின்னணியில் படைப்புகளை எழுதி யுள்ள சுப்ரபாரதி மணியன், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் சார்ந்து தொடர்ந்து கட்டுரை களையும் எழுதிவருகிறார். காலநிலை மாற்றம், உயிரினப் பன்மை உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் சார்ந்து அவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
இயற்கை அறிந்து செயல்
தமிழில்: அருண் நெடுஞ்செழியன்
ஆதி பதிப்பகம்
தொடர்புக்கு: 99948 80005
காட்டுயிர் ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்களது நேர்காணல்களின் தமிழ் மொழிபெயர்ப்பு இந்நூல். காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் ஸ்டீவ் வின்டர், இயற்கை குறித்து காட்சிவழி பிரபலப்படுத்திய டேவிட் அட்டன்பரோ, தமிழ்நாட்டில் குடியேறிய அமெரிக்க ஊர்வன அறிஞரான ரோமுலஸ் விட்டேகர், தொலைக்காட்சி வழியே காட்டுயிர் கையாளுதலைப் பிரபலப்படுத்திய ஸ்டீவ் இர்வின் ஆகியோரின் நேர்காணல்களின் தொகுப்பே இந்நூல்.
டெர்சு உஸாலா
விளாதிமிர் கே. ஆர்சென்யேவ்
தமிழில்: அவை நாயகன்,
ஓசை பதிப்பகம், தொடர்புக்கு: 9443022655
விளாதிமிர் கே. ஆர்சென்யேவ் எழுதிய டெர்சு உஸாலா நூலின் அடிப்படையிலேயே ஜப்பானியத் திரை மேதை அகிரா குரோசவா அதே தலைப்பில் அமைந்த புகழ்பெற்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். நகரத்தில் வசிக்கும் ஒருவர், கிழக்கு சைபீரியக் காட்டில் தனித்துத் திரியும் ஒரு பழங்குடி என இருவருக்கும் இடையிலான நட்பில் இயற்கையின் ரகசியங்கள் விரிகின்றன. இயற்கையோடு மனிதர் கொண்டுள்ள உறவைப் புதுப் பரிமாணத்தில் பார்க்க வைக்கும் அந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு இது.