தமிழ்நாட்டில் புலி

தமிழ்நாட்டில் புலி
Updated on
1 min read

பண்டைக் காலத்தில் புலிக்கு வியக்கரம், தீவி, சார்தூளம், வரி, உழுவை, வயமா, மிருகாதி, வல்லியம், சித்திரகாயம், தரக்கு எனப் பல பெயர்கள் வழங்கின என்று உரிமச்சொல் நிகண்டு காட்டுகிறது.

அண்மைக் காலத்தில் புலி என்ற சொல் மற்றப் பெரும்பூனைகளையும் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது - சிறுத்தைப்புலி, சிவிங்கிப்புலி, வரிப்புலி என. வேங்கை என்ற சொல் வரிப்புலியை மட்டுமே குறிக்கும். காட்டில் வாழும் சில பழங்குடியினர் வேங்கையைக் கடுவன் என்றும், பெருநரி என்றும் குறிப்பிடுகின்றனர்.

சங்க இலக்கியத்தில் வேங்கை பற்றி பல குறிப்புகள் உண்டு. அதன் உறைவிடத்தைச் சில அகநானூற்று பாடல்கள் வர்ணிக்கின்றன: ‘பனியிருஞ்சோலை' (அகம் 112), ‘தேக்கமல் சோலை' (அகம் 251). இதில் சோலை என்ற சொல் மழைக்காட்டைக் குறிக்கிறது.

இதிலிருந்து உருவான Shola என்ற ஆங்கிலச் சொல் இன்று ஆக்ஸ்போர்டு அகராதியில் இடம்பெற்றுள்ளது. புலிக்கான இரைவிலங்குகளைப் பற்றியும் சில பாடல்கள் குறிப்பிடுகின்றன. இப்படி நாலடியார் பாடல் 300-ல் "கடமா தொலைச்சிய கானுறை வேங்கை" (கடமா - மிளா) என்ற மான் வகை பற்றி குறிப்பிடுகிறது.

வேங்கை மரத்தின் கீழ் அதன் மஞ்சள் வண்ண மலர்கள் தரையில் உதிர்ந்து கிடப்பதைப் பார்த்து, புலியென அஞ்சிக் குரங்குகள் ஓடின என்று ஒரு பாடல் சொல்கிறது. மற்றொரு பாடல் வேங்கை, கானகத்தின் ஒரு பகுதியைத் தனதெனக் கொள்வதைப் பற்றி கூறுகிறது: "புலிக்குத் தன் காடும் பிறகாடும் ஒக்கும்" என. ஆட்கொல்லிப் புலிகளைப் பற்றிக்கூடச் சில பாடல்கள் சொல்கின்றன.

புலியுடன் பொருதி மாண்ட சில வீரர்களின் நினைவைப் போற்ற எழுப்பப்பட்ட வீரக்கற்கள் சிலவற்றைத் தமிழ்நாட்டில் இன்றும் காணலாம்.

2010-ம் ஆண்டு நடத்திய கணிப்பின்படி தமிழ்நாட்டில் 163 புலிகள் உள்ளன. இந்தியாவிலுள்ள 47 புலி பாதுகாப்பு திட்டச் சரணாலயங்களில் தமிழ்நாட்டில் 4 உள்ளன: களக்காடு - முண்டந்துறை, இந்திரா காந்தி தேசியப் பூங்கா (ஆனைமலை), முதுமலை சரணாலயம், சத்திய மங்கலம் காட்டுப் பகுதி. மேகமலை போன்ற வேறு சில இடங்களிலும் சில புலிகள் வாழலாம்.

1978-ல் சேலம் அருகே ஒரு வேங்கையைப் போலீசார் சுட்டுக்கொன்றது பதிவாகியிருக்கிறது. பிரித்தானியர் காலத்தில் நீலகிரியிலும் குற்றாலத்திலும் நாங்குனேரிக்கு அருகிலும் வேட்டை என்ற பெயரால் பல புலிகள் சுட்டு கொல்லப்பட்டிருக்கின்றன.

நன்றி: கானுறை வேங்கை - இயற்கை வரலாறும் பராமரிப்பும், கே. உல்லாஸ் கரந்த், தமிழில்: சு. தியடோர் பாஸ்கரன், காலச்சுவடு பதிப்பகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in