

ரசாயன உரம், பூச்சிக் கொல்லி என்று மண்ணில் நஞ்சை விதைத்து நஞ்சையே அறுவடை செய்து நம் குழந்தைகளுக்குப் பாசத்துடன் புகட்டிக் கொண்டிருக்கிறோம்.
நம்முடைய வேளாண் பாரம்பரியம் நஞ்சில்லாததுதான். ஆனால் நவீனத்தின் பெயரில் நஞ்சு கலந்த உணவைப் புசித்துக் கெட்டபிறகே, தலைமுறைகள் தாண்டி அந்த உண்மை நமக்கு உறைத்திருக்கிறது. தொலைந்துவிட்ட வேர்களைத் தேடிக் கண்டடைவது கடினம். இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதும் நினைத்ததும் நடந்து விடக்கூடியதல்ல. நவீனத்தின் பெயரில் மண்ணை மலடாக்குபவர்களுக்குக் கிடைக்கும் ஒருங்கிணைப்பும் ஆதரவும் இயற்கை வேளாண் ஆர்வலர்களுக்குச் சிறிய அளவில்கூடக் கிடைப்பதில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக நமது வேளாண் மரபை மீட்டெடுக்கச் செயல்படும் வேளாண் ஆர்வலர்கள், ‘தமிழ்க்காடு' என்ற குடையின் கீழ் ‘வட்டார உழவர்களின் பட்டறிவு பகிர்தல்’ என்ற கூடல் நிகழ்வைச் சமீபத்தில் அரங்கேற்றினார்கள்.
பகிர்தலே பலம்
கடலூர் மாவட்டத்தின் கடைக்கோடி ஊரான ராம நத்தத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. கிளிகள் கொஞ்சும் தென்னந்தோப்பு, இடைவேளையில் கொறிப் பதற்குக் காய்கனி, மதிய உணவாகக் கம்பு, கேழ்வரகு கூழ் வகைகள் தரப்பட்டன. அங்கக (இயற்கை) வேளாண் விளை பொருள்கள், பரிசோதனை முயற்சியின் மாதிரிகள், அரிய புத்தக வரிசைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு மத்தியில் இயற்கை விவசாய முன்னோடிகள், ஆர்வம் கொண்ட புதியவர்கள், அங்கக வேளாண் உற்பத்தி பொருட்களைச் சந்தைப்படுத்தும் விற்பன்னர்கள், சூழலியல் ஆர்வலர்கள், மாற்று மருத்துவப் பழகுநர்கள், கல்லூரி மாணவர்கள் திரண்டிருந்தனர்.
பட்டறிவின் உன்னதம்
வாகையூரிலிருந்து வந்திருந்த ஆண்டாள் அம்மாவுக்கு வயது 74. இன்னமும் நவீன நச்சு விவசாயச் சுழலில் சிக்காது, பாரம்பரிய விவசாயத்தைத் தொடர்கிறார். தன்னுடைய விளைபொருளை மகன் உதவியுடன் சந்தைப்படுத்தி உள்ளூரில் வரவேற்பையும் பெற்றிருக்கிறார். கடனில் மூழ்க இருந்த தன் வாழ்க்கையை இயற்கை விவசாயம் மீட்ட கதையைச் சேவூர் செல்வராஜ் விவரித்தார்.
அடரி களத்தூர் வசந்தராஜ், ‘கையோடு உயிர் நீர்' என்ற பெயரில் தனது மழைநீர் சேகரிப் பைச் சுமந்து வந்திருந்தார். வீட்டுக் கூரையில் பொழியும் மழை நீரைச் சேகரித்து ஒரு வருடத்துக்குக் கெடாது பாதுகாத்து, குடும்பத்தினர் தாகம் தணித்து வருவதைச் சுவைபட விவரித்தார். சுகாதாரமான குடிநீருக்காக மாதாந்திர பட்ஜெட்டில் இடம் ஒதுக்கும் காலத்தில், அவர் தந்த ஆலோசனைகள் அத்தனையும் வரம்.
இப்படி ஒவ்வொருவரும், தங்கள் பாணியில் இயற்கை யையும் இயற்கை வேளாண் வழிமுறைகளையும் நேசித்துப் பின்பற்றுபவர்கள். ஆனால், தனித்தனியாக உழன்று கொண்டிருக்கிறார்கள். தன்னைப் போல இயங்கும் இயற்கை நேயர்களை ஒத்த அலைவரிசையில் அடையாளம் கண்டதும், அவர்களுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி. இந்தக் கூடல் நிகழ்வை ஒருங்கிணைத்த ரமேசு கருப்பையாவின் நோக்கமும் அதுதான். சூழலியல் செயல்பாட்டாளரான இவர், தனது மனைவி தமிழாசிரியை செங்கொடியுடன் சேர்ந்து நிகழ்வைச் செதுக்கியிருந்தார்.
தன்னிறைவு தரும் தற்சார்பு
“இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பரிசோதனை முயற்சிகளை ஆராய்ந்து, திருத்தங்கள் செய்து ஜெயித்துக்காட்டியவர்கள். ஆளுக்கொரு திசையில் இயங்கிவரும் இவர்கள் கைகோத்தால், இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு புதியவர்கள் பெருகுவார்கள். இதனால் அவர்களது பகுதியில் நஞ்சில்லாத, பாதுகாப்பான உணவு கிடைக்கும். உணவுப் பொருள் தயாரிக்கும் இடத்தி லேயே, தேவையைப் பூர்த்தி செய்வதால் புவியைச் சூடாக்கும் கரிம எரிபொருளை வெளியிட்டுப் பயணிக்க வேண்டியதில்லை.
இப்படித் தற்சார்புடைய வேளாண்மை, நஞ்சில்லாத உணவு தன்னிறைவு, செல வில்லாத உழவு முறை என்று ஒட்டுமொத்த விவசாயமும் மாற ஆரம்பிக்கும்போது, நமது மரபும் துளிர்க்க வாய்ப்பு கிடைக்கும். நமது தவறுகளுக்கு வாழும் காலத்திலேயே பிராயச் சித்தம் தேடிக் கொள்ளலாம். எதிர்காலச் சந்ததியினருக்கும் நலமான வாழ்வை விட்டுச் செல்லலாம்” என்றார் ரமேசு கருப்பையா.
தமிழ்க் காடு தொடர்புக்கு: Rehabramesh5678@yahoo.com