

மார்ச் 12 அன்று 95ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்றது. ஆஸ்கர் இறுதிப் பட்டியலில், ‘ஆர்ஆர்ஆர்’, ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ , ‘ஆல் தட் பிரீத்ஸ்' ஆகிய மூன்று இந்தியப் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. நெடிய ஆவணப்படப் பிரிவில் இடம்பெற்றிருந்த ‘ஆல் தட் பிரீத்ஸ்' விருது வெல்லும் வாய்ப்பை இழந்தது.
பிரான்ஸின் கான் நகரில் நடைபெற்ற 75ஆவது சர்வதேசத் திரைப்பட விழாவில்கூட இந்த ஆவணப்படத்துக்குக் கடந்த மே மாதம் தங்கக் கண் விருது கிடைத்திருந்தது. இயற்கையின் உன்னதத்தையும், சக உயிரினங்களோடு இயைந்து வாழ வேண்டிய அவசியத்தையும் மென்சோகத்துடன் உணர்த்துகிறது இந்த ஆவணப்படம்.
உயர்ந்த நோக்கம்: ஓர் உயர்ந்த நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்தப் படைப்பை ஷெளனக் சென் தயாரித்து, இயக்கியிருந்தார். வெளிப்பார்வைக்கு இரண்டு சகோதரர்களுக்கும் பருந்துகளுக்கும் இடையிலான நேசத்தின் பதிவுபோல் இது இருக்கிறது.
சற்று கூர்ந்து கவனித்தால் அதில் பொதிந்திருக்கும் பல அடுக்குகள் நமக்குப் புரிபடும். அதன் ஒவ்வோர் அடுக்கும் இயற்கையின் பல்வேறு நியதிகளை நமக்கு உணர்த்துகிறது. அந்த நியதிகள் வாழ்க்கையை நாம் அணுகும் போக்கையே மாற்றியமைக்கும் திறன்கொண்டவை.
நகரம் என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல; எலி, பன்றி, மாடு, பறவைகள், பூச்சிகள் உள்ளிட்ட அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது என்பதை நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல் இந்த ஆவணப்படம் காட்சிப்படுத்தி இருக்கிறது. பறவைகளின் மூலம் சுற்றுச்சூழல் ஆபத்துகளைக் கவனப்படுத்தும் இந்தப் படைப்பு, அந்தச் சகோதரர்களின் அன்றாட வாழ்க்கையின் மூலம் சமகால வெறுப்பு அரசியலின் கோர முகத்தையும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறது.
டெல்லியின் மறுமுகம்: உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் டெல்லியும் ஒன்று. பெருநகருக்கே உரிய வேலையின்மை, பொருளாதார அழுத்தம், இயலாமை, வசிப்பிட அவஸ்தை, தண்ணீர்ப் பற்றாக்குறை, இயலாமை, விரக்தி போன்றவை அங்கே வசிக்கும் சாமானியர்கள் நித்தமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்.
இவை போதாது என்று சமகால வெறுப்பு அரசியலால் அவ்வப்போது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள்; அவற்றால் நேரும் உயிரிழப்புகள், அச்சுறுத்தல்கள் வேறு. இந்தப் பிரச்சினைகளை மீறியே, பல்வேறு மாநிலங்களை, பல்வேறு மதங்களைச் சேர்ந்த சாமானிய மக்கள் வேற்றுமையை மறந்து ஒற்றுமையுடன் வாழப் போராடி வருகின்றனர்.
இப்படி மனிதர்களின் வாழ்வே கேள்விக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அந்நகரில் வசிக்கும் பிற உயிரினங்களின் வாழ்க்கை நிலையைப் பற்றி தனியாகச் சொல்ல வேண்டிய தில்லை. ஷெளனக் சென் இயக்கியிருக்கும் ‘ஆல் தட் பிரீத்ஸ்' டெல்லி நகரத்தின் அறியப்படாத இந்த முகத்தைத் தத்ரூபமாக ஆவணப்படுத்தியுள்ளது.
மனிதர்களின் சுயநலத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், மனிதர்களையும் இவ்வுலகில் வாழும் பிற உயிர்களையும், ஒட்டுமொத்த இயற்கையையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை இதன் எளிய காட்சிகள் தெளிவாக உணர்த்துகின்றன.
கதைக்களம்: டெல்லியில் வசிக்கும் நதீம், சவூத் எனும் இரண்டு இஸ்லாமியச் சகோதரர்கள் ஒரு கரும்பருந்தை நேசிக்கிறார்கள். அதன் காரணமாக அவர்கள் ‘பருந்து சகோதரர்கள்' என அழைக்கப்படுகிறார்கள். கரும்பருந்தின் மீதான நேசம் மற்ற பறவைகளின் மீதான ஒன்றாகவும் மாறுகிறது.
டெல்லியின் காற்று மாசுபாட்டால், பகலிலேயே வானம் இருளடைவதும், அதன் காரணமாகப் பறவைகள் ஆயிரக்கணக்கில் கீழே விழுவதும் அங்கே தொடர்கதை. அவ்வாறு விழும் பறவைகளை மீட்டெடுத்து, அவற்றுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கில், தாங்கள் வசிக்கும் வீட்டின் சிறிய அடித்தளத்தில் ஒரு தற்காலிகப் பறவை மருத்துவமனையை அவர்கள் நிறுவியுள்ளனர். அதன் மூலம் காற்று மாசுபாட்டின் கொடிய நச்சில் அகப்பட்டு கீழே விழும் பறவைகளைக் காப்பாற்ற முயல்கின்றனர்.
தற்போது பெருகிவரும் வெறுப்பு அரசியலுக்கு இணையாகப் பன்மடங்கு தீவிரமானது சுற்றுச்சூழல் மாசுபாடு. வெறுப்பு அரசியலால் பாதிக்கப்படும் சகோதரர்களுக்கும், காற்று மாசுபாட்டால் புறக்கணிப்புக்கு உள்ளாகும் பறவைகளுக்கும் இடையிலான ஆத்மார்த்தமான உறவின் மூலம் அது உணர்த்தப்படுகிறது.
ஆஸ்கர் ஏன் கிடைக்கவில்லை? - இது ஓர் ஆவணப்படம் என்கிறபோதும், இதன் ஆக்க நேர்த்தி ஒரு திரைப்படத்துக்கு இணை யான தரத்தைக் கொண்டிருக்கிறது. நகர்ப்புற வாழ்க்கை முறையை அதே பரபரப்புடன் இந்த ஆவணப்படம் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் வியப்பில் ஆழ்த்துகிறது.
எலிகளைப் பின்தொடர்ந்து செல்வது, மாடுகளையும் பன்றிகளையும் சுற்றிவருவது, நீரில் வாழும் நுண்ணிய உயிரினங்களை உற்றுக் கவனிப்பது என டெல்லியில் வாழும் அனைத்து உயிரினங் களையும் அதன் போக்கில் இந்த ஆவணப்படம் ஆராய்ந்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தீவிரமாகப் பேசும் ஆவணப்படங்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுவது இல்லை என்கிற விமர்சனம் நீண்ட நாளாக இருந்துவருகிறது. ‘ஆல் தட் பிரீத்ஸ்’ ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படாதது அந்த விமர்சனத்தை வலுப்படுத்தியிருக்கிறது.
ஆஸ்கரின் நெடிய ஆவணப்படப் பிரிவில் இந்த ஆண்டு கடுமையான போட்டி நிலவியது. நேஷனல் ஜியாகிரஃபிக்கின் ‘ஃபயர் ஆஃப் லவ்', ஹெச்பிஓவின் ‘நவால்னி' ஆகிய இரண்டு படைப்புகள் தீவிரப் போட்டியில் இருந்தன.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சர்வதேச அரசியல் களமும் ‘ஆல் தட் பிரீத்ஸ்’ ஆவணப்படத்துக்குச் சாதகமாக இல்லை. உக்ரைன் மீதான போர் காரணமாக, மேற்கத்திய நாடுகளிடையே ரஷ்யா எதிர்ப்பு மனநிலை மேலோங்கி இருக்கும் காலகட்டம் இது. இந்தச் சூழலில், ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரும் புடின் விமர்சகருமான அலெக்ஸி நவால்னி என்பவரைக் குறித்த ஹெச்பிஓவின் ’நவால்னி’ ஆஸ்கர் வென்றிருப்பதில் ஆச்சர்யமில்லை!
புதிய உரையாடல்: ‘ஆல் தட் பிரீத்ஸ்’ ஆஸ்கர் விருதைப் பெற வில்லை என்கிறபோதும், அதன் இயக்குநர் ஷெளனக் சென் எளிதில் மறக்கப்பட மாட்டார். சர்வதேச ஆவணப்பட வரைபடத்தில் இந்தியாவின் இருப்பை அவர் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார்.
வரும் ஆண்டுகளில் இதன் பலனை இந்தியாவில் உருவாக்கப்படும் ஆவணப்படங்கள் அறுவடை செய்யக்கூடும். முக்கியமாக, மனிதர்களுக்கான சமூகநீதி குறித்து விவாதிக்கப்படும் இன்றைய சூழலில், புவியில் வாழும் அனைத்து உயிர்களுக்கான பொதுநீதி குறித்த உரையாடலை ‘ஆல் தட் பிரீத்ஸ்' தொடங்கி வைத்திருக்கிறது.
- mohamed.hushain@hindutamil.co.in