மனித அன்பால் வளர்ப்புப் பிராணிகளை வெல்லலாம்!

மேனகா சஞ்சய் காந்தி
மேனகா சஞ்சய் காந்தி
Updated on
4 min read

இருபத்தைந்து ஆயிரம் ஆண்டுகளாக நாய்களுடன் ஒன்றாய் இருந்து, பாதுகாப்பு, உணர்வுபூர்வமான ஆதரவு, தோழமை ஆகியவற்றிற்காக அவற்றைப் பயன்படுத்தி, அவற்றின் விசுவாசம், நட்பு, புத்திசாலித்தனத்தை நாம் போற்றிப் பாதுகாத்து வருகிறோம்.

ஆனால், இந்த அழகான பந்தத்தின் சிதைவை இப்போது கண்கூடாகப் பார்க்கிறோம். நாய்கள் மட்டுமல்ல, பூனைகள், பசுக்கள், பறவைகள் என நமது மின்னணு சார்ந்த வாழ்க்கைக்கு ஆச்சரியத்தையும் அரவணைப்பையும் சேர்க்கக்கூடிய ஒவ்வொரு கவர்ச்சிகரமான உயிரினம் மீதும் சகிப்புத்தன்மை இல்லாமையை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

நண்பர்கள், குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர், சகஊழியர்கள், சகபயணிகள், அந்நியர்கள் ஆகியோரிடமும் அதே சகிப்புத் தன்மை இல்லாமையைத்தான் நாம் தொடர்ந்து காட்டிக்கொண்டுவருகிறோம்.

ஒரு மனிதன் விலங்குகளை இழிவாக நடத்தும்போது, அவன் தனது சொந்த இனத்தையும் கீழ்த்தரமாக நடத்து வான் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நாய்க்குச் சத்தமில்லாமல் உணவளிக்கும் நபரைவிட, அன்னமிடும் பெண்கள் மீது கும்பல் தாக்குதல் நடத்துபவர்கள் மனிதச் சமுதாயத்திற்கு மிகமிக ஆபத்தானவர்கள்.

பெரும்பாலும் காலனிகளிலிருக்கும் குடியிருப் போர் நலச் சங்கங்கள்தான் பிரச்சினையைத் தூண்டிவிடுகின்றன. காரணம் மிக எளிமையானது; இந்த நிகழ்வு பலமுறை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இச்சங்கங்களின் தேர்தலில் நிற்கும் நபருக்கு உண்மையான அதிகாரம் இல்லை என்பது அவருக்கே தெரியும்; பராமரிப்பு, மின்சாரம், கட்டிடம், விற்பனை, வாடகை அல்லது தண்ணீர் ஆகிய வற்றில் எந்தக் கட்டுப்பாடும் அவருக்கு இல்லை.

வாயில்களில் காவலாளிகளைத் தேர்ந்தெடுப்பது, நாய்களை உள்ளே அனுமதிப்பதா அல்லது வெளியே வீசுவதா, பூங்காக்களிலா அல்லது மின் ஏணிகளிலா, எந்தெந்த பகுதிகளில் உணவளிக்கும் இடங்கள் இருக்கலாம் என்பது போன்ற விசயங்களில் முடிவெடுப்பதற்கு மட்டுமே அவருக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த அதிகாரம் எதிரியை அடையாளம் காண வைக்கிறது. எனவே அமைதியாக வாழும் நாய்கள் இலக்காகின்றன, தொடர்ந்து சீண்டுவதன் மூலம் அவற்றை நாம் பதற்றமடையச் செய்கிறோம்.

ஹைதராபாத்தில் கடித்துக் கொல்லப்பட்ட குழந்தை, மூன்று நாய்களைத் தொடர்ந்து அடித்ததாகவும் அவற்றைச் சீண்டியதாகவும், இது சம்பந்தமாகக் குடியிருப்புவாசிகள் குழந்தையின் தந்தையைப் பலமுறை எச்சரித்ததாகவும் காவல்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். இதெல்லாவற்றையும்விட, காவலாளியாக இருக்கும் அந்தத் தந்தை மூன்று நாட்களாக நாய்களுக்கு உணவளிக்க யாரையும் அனுமதிக்க மறுத்திருக்கிறார். பசியும் எரிச்சலும் கொண்ட இந்தச் சாதுவான நாய்கள் மீண்டும் சீண்டப்பட்டன.

பின்னர் விலங்குகளைச் சீண்டி விளையாடுவது சலித்துப்போனதால், சங்கத் தலைவர் / செயலாளர் தன்வரம்பை விரிவுபடுத்திக் கொள்கிறார். நாய்களுக்கு உணவளித்துக் குடியிருப்பு வாசிகளைப் பாதுகாப்பாக வைப்பவர்களின் மீது அவர் பாய்கிறார். அப்போது கும்பல்கள் வருகின்றன; சங்கத்தின் குழு அரட்டைகளில் நீண்டகாலமாக இடம்பெறும் வன்முறை சார்ந்த அறிக்கைகளால், அந்தக் கும்பல்கள் தூண்டப்படுகின்றன.

குடியிருப்போர் நலச் சங்கங்களின் இரண்டு குழுக்கள் சங்கத் தேர்தலில் நிற்கும்போது, விலங்குகளை எவ்வளவு தூரம் தங்களால் கொடுமைப்படுத்த முடியும் என்பதை மையமாக வைத்துக்கொண்டு அந்த இரண்டு கோஷ்டிகளும் தேர்தலில் போட்டி போடுகின்றன. நாய்கள் இல்லாதபோது, அப்பாவிப் பூனைகள் அல்லது புறாக்கள்கூட பிரச்சினைக்கு உள்ளாகின்றன. அதிகாரம் என்பது வெறுப்பு சார்ந்து போஷாக்கையும், ஊட்டச்சத்தையும் பெறுகிறது. இதற்கான நிரூபணங்கள்தான் குடியிருப்போர் நலச் சங்கங்கள்.

பெரும்பாலும் மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான மோதல்கள் பற்றிய விவாதங்கள் முக்கியமான ஒரு பிரச்சினையைத் தவறவிடுகின்றன. அத்தகைய மோதல்கள் உண்மையான பிரச்சினையின் அறிகுறிகள் மட்டுமே. நாய்கள் அல்லது எந்தவொரு உயிரினமும் உடல்நிலை சரியில்லாமல் அல்லது பட்டினிக் கிடந்தால், வலுக்கட்டாயமாகப் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டால் அல்லது துஷ்பிரயோகம் செய்யப்பட்டால், புறக்கணிக்கப்பட்டால், அச்சுறுத்தப் படும்போது தாக்குதலிலிருந்து தங்களை அல்லது தங்கள் குட்டிகளைப் பாதுகாக்க அவை மூர்க்கமாக, ஆக்ரோஷமாக மாறிவிடும்.

விலங்குகளிடம் கருணையோடு நடந்துகொள்வதன் மூலம்; தேசிய, மாநில அரசுகள் மற்றும் பல்வேறு நீதிமன்றங்கள் தெளிவாக வரையறுத்துத் தந்திருக்கும் மேலாண்மை விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பிரச்சினையை எளிதில் சரிசெய்து விடலாம்.

ஏகாதிபத்தியக் காலனித்துவக் காலத்தில் நாய்களும் இந்தியர்களும் சிறப்புரிமைப் பகுதி களுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை, நாய்களும் இந்தியர்களும் பரிகசிக்கப்பட்டனர். வன்முறைக்கு ஆளாகினர். தெருநாய்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக அவை ஆயிரக்கணக்கில் கொல்லப்படுவது வாடிக்கையாகி இருந்தது. ஆனால், அந்தக் கொடுமை அப்போது பலனளிக்கவில்லை. இப்போதும் பலனளிக்காது.

இயற்கை, விலங்குகளை அதிகச் சந்ததிகளைப் பெற்றெடுக்க அனுமதிக்கிறது. சுற்றுச்சூழலில் அதற்கான ஒரு வெளி இருக்கிறது. ஒருவேளை அங்கே ஒரு வெற்றிடம் இருந்தால், அது இயற்கையாகவே எலிகள், கீரிப்பிள்ளைகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் போன்ற மிகவும் அசௌகரியமான பிற உயிரினங்களால் ஆக்கிரமிக்கப்படும்.

கி.பி. 1665இல் ஏற்பட்ட லண்டன் பிளேக், 2,50,000 நாய்கள் மற்றும் பூனைகளைக் கொன்றதால் ஏற்பட்ட விளைவாகும்; அப்போது எலிகளின் எண்ணிக்கை அதிகரித்தது; மக்கள்தொகையில் 70 சதவீதம் ’கறுப்பு மரணம்’ என்று அழைக்கப்பட்ட பேரிடரில் அழிக்கப்பட்டது. சமீப வரலாற்றில் சூரத் நகரில் இதே போன்று ஒரு நிகழ்வு ஏற்பட்டது, நாய்களை அகற்றியதன் விளைவாக பிளேக் பீதி அங்கே ஏற்பட்டது.

உண்மையில் தெருக்களில் நாய்களின் பெருக்கம் குறைக்கப்படத்தான் வேண்டும். அதற்கென்று ஒரு சட்டம் உள்ளது. நாய்களின் எண்ணிக்கை, வெறிநாய்க்கடி, நாய்களின் ஆக்ரோஷம் ஆகியவற்றைக் குறைக்கும் ஒரே வழிமுறையாக, உலக சுகாதார அமைப்பும், விலங்கு சுகாதாரத்திற்கான உலக அமைப்பும் விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகள் - 2001-ஐ பரிந்துரைத்துள்ளன.

பல சட்டங்கள், பல நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், தெரு நாய்களின் எண்ணிக்கையைப் போதுமான அளவுக்கும் விஞ்ஞான ரீதியாகவும் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை உள்ளூர் அதிகாரிகள் எடுக்கவில்லை.

நிதி மற்றும் உள்கட்டமைப்பு இல்லாமை, ஊழல், திறனற்ற நடைமுறைகள், வெளிப்படைத்தன்மை இல்லாமை, கண்காணிப்பின்மை ஆகியவை இரண்டு தசாப்தங்களாகவே இருக்கின்ற சவால்களாகும். இந்த இடைவெளிகளை நிரப்பும் புதிய விதிகளை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது.

நிஜத்தன்மை சரிபார்க்கப்படாத சமீபத்திய செய்திகளுக்கு (அவற்றில் பெரும்பாலும் உண்மையல்ல என்று தெரிய வருகிறது) பீதியும் அச்சமும் கலந்த ஓர் எதிர்வினையாக நாய்களை அகற்ற முற்படுவதற்குப் பதிலாக, புதிய விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகள் 2023இன்படி விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டுத் திட்டத்தினைக் கொண்டுவரும்படி நகராட்சி அமைப்புகளிடம் குடிமக்கள் கோரிக்கை வைப்பதே பொறுப்பான, பயனுள்ள உத்தியாக இருக்கும்.

இந்திய நாய்களைத் தத்தெடுப்பதை ஊக்கு விப்பது ஒரு தன்முனைப்பான அணுகுமுறையாகும். நூற்றுக்கு ஒருவர் தெருவிலிருந்து ஒரு நாயைத் தத்தெடுத்தால், சாலைகளில் நாய்களே இருக்காது. வெளிநாட்டு நாய்கள் மீதான மோகத்தால்தான், கொடூரமான நாய்க்குட்டிப் பண்ணைகளிலும், சந்து பொந்திலிருக்கும் செல்லப்பிராணிக் கடைகளிலும் படுஜோராக வியாபாரம் நடக்கிறது.

இந்தச் செல்லப்பிராணி கடைகளில் உள்ள பெரும்பாலான வெளிநாட்டு நாய்களை, விலங்குகளைக் குறிவைக்கும் தீநுண்மிகள் தாக்குகின்றன. ஆனால், நாய் விற்பனை அனைத்தும் ரொக்கம் சார்ந்து நடைபெறுவதால், சில வாரங்களுக்குள் விலங்குகள் இறக்கும்போது வாங்கியவர்களுக்குப் பணம் திரும்பக் கிடைக்காது.

2016இல் வெளிநாட்டுப் பாரம்பரிய நாய்களை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. 2017இல் நாய் வளர்ப்பவர்களைத் தீவிரமாக ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை அரசு அறிவித்தது. 2018இல் இந்தியச் சட்ட ஆணையத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து, பாரம்பரிய நாய்களின் வர்த்தகத்தைத் தடுக்கச் செல்லப்பிராணிக் கடைகளுக்கான விதிகள் அறிவிக்கப்பட்டன. பல அழகான, புத்திசாலித்தனமான நாட்டு நாய்கள் வீடற்று வீதியில் அலைந்து திரிகின்றன. அவற்றிற்குச் சிறந்த நோயெதிர்ப்பாற்றல் உண்டு. அவை சிறந்த செல்லப்பிராணிகளாகவும் உருவெடுக்கக் கூடியவை.

ஒவ்வொரு குடும்பமும் ஒரு நாட்டு நாயைத் தத்தெடுத்தால் அல்லது பராமரிப்பாளர்கள் சமூக நாய்களுக்கு உண வளித்தால் அது முழுச் சமூகத்திற்கும் செய்யும் சேவையாகும். மேலும் நாட்டு நாய்களின் ஆக்ரோஷம் மட்டுப்படும்.

தெருக்களில் நாட்டு நாய்களைப் பராமரிக்கும் நபர்களின் முக்கியத்துவத்தைப் பல்வேறு நீதிமன்றங்கள் அங்கீகரித்துள்ளன. முக்கியமாக, டாக்டர் மாயா டி சப்லானி எதிர் ராதா மிட்டல் மற்றும் பிறர் வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இந்த அங்கீகாரத்தைத் தந்திருக்கிறது. புதிய விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகளில் சமூகத்தில் இருக்கும் நாய் பராமரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தலிலிருந்து பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது.

நாய்கள் மக்களைத் தாக்குகின்றன என்று சொல்லும் நகர்ப்புறத் தொன்மங்கள் ஆதாரத்தின் அடிப்படையில் பரிசோதிக்கப்பட வேண்டும். சமீபத்தில், புதுடெல்லியில் வசந்த் குஞ்ச் பகுதியில் இரண்டு குழந்தைகள் நாய்களால் கொல்லப்பட்டதாகப் பல செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதில் பிரேதப் பரிசோதனை அறிக்கைகூட கிடைக்கவில்லை என்றும், நாய்களால் அந்தக் குழந்தைகள் கொல்லப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்றும் டெல்லி மாநகராட்சி மேயர் பின்னர் தெளிவுபடுத்த வேண்டியிருந்தது. மூர்க்கத்தனமான ஊகங்கள் சரிபார்க்கப்பட்ட உண்மைகள் என்பதுபோல பரவலாக்கப்பட்டன. ஆனால், அதிகாரிகளின் விளக்கத்தை யாரும் கேட்கத் தயாராக இல்லை.

நாம் நம்மை ஆறறிவு படைத்த உயர்ந்த இனம் என்று கூறிக்கொண்டால், பொறுப்புடனும், விஞ்ஞான ரீதியாகவும், மனிதாபிமானத்துடனும் நாம் செயல்பட வேண்டும். வேறு மாதிரி செயல்பட்டால், அது அனைத்து உயிரினங் களுக்கும் குழப்பத்தையும் துன்பத்தையும் உண்டாக்கவே வழிவகுக்கும்.

தமிழில்: வே.மாரியப்பன்

மேனகா சஞ்சய் காந்தி | முன்னாள் மத்திய அமைச்சர்; gandhim@nic.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in