

முன்னொரு காலத்தில் அம்மாவும் நானும் ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டுசென்றிருந்தோம். ஆடுகளெல்லாம் அங்குமிங்கும் ஓடின. அம்மா என்னை நிழலில் அமர வைத்துவிட்டு, அவற்றை விரட்டிக்கொண்டு இருந்தார். முதல் நாள் இரவு மழை பெய்திருந்த நிலையில், செடியெல்லாம் பச்சை நிற ஆடை உடுத்தி காற்றில் ஆனந்தமாய் ஆடியபடி இருந்தன. அன்றைக்கு நாங்கள் போன காட்டிற்கு மாடுகளும் மேய்ச்சலுக்கு வந்தன.
அங்கு மேய்ந்த மாடு களின் மேல் கறுப்பான சிறிய பறவை ஒன்று உட்கார்ந்தது. பிறகு கிளைடர் மாதிரி இறக்கை விரித்துப் பறந்து போய், பூமராங் மாதிரி திரும்பி அதே மாடு மேல் வந்து உட்கார்ந்துகொண்டிருந்தது. அந்தப் பறவை ரொம்ப நேரமாக இப்படியே பறந்துகொண்டு இருந்தது. நானும் அந்தப் பறவையின் செயல்பாடு புரியாமல், அதையே பார்த்துக்கொண்டு ஆடுகளைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன். நல்லவேளை, அம்மா எல்லா ஆடுகளையும் கட்டுப்படுத்திவிட்டு, என்னைப் புன்முறுவலுடன் பார்த்தார்.
“அம்மா, இங்கே வந்து பாரேன், ஒரு சின்ன கறுப்பு பறவை மாடு மேல உட்கார்ந்து அதைக் கொத்துது.. அப்புறம் பறக்குது.. திரும்பவும் அதே மாட்டிடம் வருது.. அந்தப் பறவை இடையிடையே பறக்காமல் அந்த மாட்டையே கொத்திக்கொண்டு இருக்கலாமே? ஏன் இப்படி செய்துன்னு இவ்ளோ நேரம் பார்த்துட்டு இருந்தேன்” என்று குழப்பத்துடன் அம்மாவிடம் சொன்னேன். “அந்தப் பறவை பெயர் என்னம்மா?” என்று கேட்டேன். “அது பேரு இரட்டைவால் குருவின்னு சொல்லுவாங்க” என்றார் அம்மா.
ஆண்டாள் பார்த்த பறவை: அப்போ அந்த பக்கம் மாடுகளுடன் வந்த ஒரு தாத்தா "வால் நீண்ட கருங்குருவி வலமிருந்து இடம் போனால் கால் விழுந்த கிழவியும் குமரி ஆவாளே" அப்படின்னு சொல்லிட்டே வந்து உட்கார்ந்தார். “என்ன தாத்தா கவிஞராகிட்டீங்கபோல, கவிதையெல்லாம் சொல்றீங்க” என்று சிரித்துக்கொண்டே கேட்டேன்.
“அட இது கவிதை இல்ல குட்டீசு. எங்க ஊரு பக்கம் இந்த பறவையை வச்சுத்தான் இந்த பழமொழியை சொல்லுவாங்க. உங்க ஊர்ல இதுக்கு பேரு ரெட்டைவால் குருவியா. எங்க ஊருப் பக்கம் கருங்குருவி, கரிச்சாங் குருவி, கருவாட்டு குருவி, கருவாட்டுவாலி, மாட்டுக்காரக் குருவி அப்படின்னு பல பேருலயும் சொல்லுவாங்க..”னு தாத்தா பல தகவல்களைக் கூறினார்.
“ம்ம் ..வெட்டுவலியான் குருவி, நீண்டவால் குருவி, வழியான் குருவி, ஆனைச் சாத்தான், கரிக் குருவினும் சொல்லுவாங்க பாப்பா” என்று என் அம்மாவும் பல பெயர்களைச் சொல்லி, வியப்பின் உச்சிக்கே இருவரும் என்னைக் கொண்டு போனார்கள்.
“ஆனைச்சாத்தான் அப்படிங்கற குருவிய பத்தி நானும் படிச்சிருக்கேன். எங்க டீச்சர் சொல்லி இருக்காங்க. திருப்பாவை என்னும் நூலில் ‘கீச்சு கீச்சு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து பேசின பேச்சரவும் கேட்டிலையோ பேய் பெண்ணே' அப்படின்னு இந்த பறவையோட குரலொலி பத்தி ஆண்டாள் சொல்லியிருக்காங்க.
ஆண்டாள் பார்த்த அந்த பறவையை நானும் பார்க்கணும்னு நினைச்சேன்.. இப்போ பார்த்துட்டேன்” என்று மகிழ்வின் உச்சத்துக்குப் போனேன். அதற்குள் தாத்தாவின் மாடுகள் தூரம் சென்றுவிட்டதால் தாத்தா விடைபெற்றார்.
“ஏட்டுல படிச்சதை இன்னைக்கு நேரிலேயே பார்த்திட்டியா.. சூப்பரு குட்டீசு.. அப்புறம் கறுப்பா இருக்குது எல்லாம் இரட்டைவால் குருவி இல்ல.. இளம் பறவைக்கு வயிற்றுப் பகுதில வெள்ளை திட்டு இருக்கும். பெரிய பறவைகளுக்கு அலகின் அருகில் வெள்ளைப் புள்ளியும் இருக்கும். அதோட வால் நீண்டு நுனி இரண்டாகப் பிளந்திருக்கும்.. இந்த குருவிய எளிதா கண்டுபிடிக்கணும்னா இதெல்லாம் கவனிச்சிப் பாக்கணும் சரியா?" என்று படிக்காத என் அம்மா ஒரு பறவையியலாளர் போல விளக்கினார்.
பருந்தை விரட்டும் கரிச்சான்: நாங்கள் பேசிக்கொண்டே இருந்தபொழுது அந்தப் பறவை ஒரு பருந்திடம் பறந்து பறந்து சண்டை போட்டது. “அம்மா.. அங்கே பாரேன்...பறவைக்கும் பறவைக்கும் சண்டை. அதை மத்தப் பறவை எல்லாம் வேடிக்கை பார்க்குது” என்று சிரித்துக்கொண்டே சொன்னேன். “எல்லாமே உனக்கு விளையாட்டுதான். அந்தப் பறவை உனக்கு ஒரு பாடத்தை சொல்லுது.
அதை புரிஞ்சுக்காம பேசிட்டு இருக்க. தனக்கு வரப் பிரச்சனை எவ்வளவு பெருசா இருந்தாலும் அதைப் பார்த்து பயந்துறாம எதிர்த்து போராடணும். எதிரி நம்மளவிட பலவானா இருந்தாலும், பயம் இல்லாம எதிர்க்க வேண்டும். வீரியமான எதிர்ப்பு எதிரிகளை பின்வாங்க வைக்கும். தைரியம் உருவத்தில் இல்ல, உள்ளத்துல இருந்தா போதும் வெற்றி பெறலாம் என்ற பாடத்தை இந்த பறவைக்கிட்ட இருந்து நாம கத்துக்கணும்” என்று போதி மரத்தடி புத்தர் போல அம்மா போதித்தார்.
“அது சரி அம்மா...ஆனா அந்தப் பறவை ஏன் பருந்துகூட சண்டை போட்டுச்சு?” என்று கேட்டேன். “அதுவா கரிச்சான்குருவி தன்னோட இனப்பெருக்க காலத்துல முட்டை, குஞ்சுகளோட பாதுகாப்பிற்காகக் கூடு இருக்கும் எல்லைக்குள் எந்தப் பெரிய பறவைகளையும் அண்ட விடாது. ஆண், பெண் கரிச்சான்கள் மாறிமாறி அடைகாத்து 15 நாளுக்குப் பிறகு குட்டிப் பறவை வெளில வரும். சுமார் 21 நாள் கழிச்சி இரண்டு சிறகுகளும் முழுவதும் வளர்ந்து, வால் பிளவுபட்ட தோற்றத்தைப் பெறும்” என்று விவரித்தார்.
ஏன் பறக்குது? - “அம்மா, இந்த பறவை மாடு மேல உக்காந்து கொத்துச்சுல அது ஏன்னு இன்னும் நீங்க சொல்லவே இல்ல?” என்று அசட்டுச் சிரிப்புடன், ஆரம்பித்த கேள்விக்கே வந்து சேர்ந்தேன். “ஆமா. அதை விட்டுவிட்டு நிறைய பேசிட்டோம்ல. நிலங்களில் மேயும் மாடுகளின் கால்கள் பட்டு செடிகளுக்குள் இருக்கும் வெட்டுக்கிளி போன்ற சிறிய பூச்சிகள் பறக்கும்.
அவை பறக்கும்பொழுது இந்தப் பறவை பறந்து சென்று காற்றில் பூச்சிகளைப் பிடித்துக்கொண்டு அதே வேகத்தில் மாட்டின் மேல் திரும்ப வந்து உட்கார்ந்து சாப்பிடும்” என்று தெளிவுபடுத்தினார்.
இது எப்போதும் மாட்டுக்கு ஒரு நண்பன்போல இருக்குதுல்ல? மாட்டுக்கு மட்டும் இல்ல, பூச்சிகளை எல்லாம் சாப்பிடுறதால உழவர்களுக்கும் நண்பன்தான்.. சரி.. சரி.. வா மணியாச்சு, உனக்கு பசிக்கலையா.. வீட்டுக்குப் போவோமா?” என்று புன்முறுவலுடன் கூறினார். ஆடுகளை ஓட்டிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.
- க.ஜெயலெட்சுமி | rkjayalakshmi456@gmail.com