

- ஒன்றின் மீது மற்றொன்றும் மற்றொன்றின் மீது
ஒவ்வொன்றும் வினைப்படுகின்றன -
பண்ணை வடிவமைப்பின் ஒருங்கமைப்பு முறைக்கு அடுத்ததாகப் பயிர்களின், உயிர்களின் இணக்கமும் பிணக்கமும், அவற்றை நடுவதும் கட்டுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். செயல்படும் வினைப்பாடுகளின் அடிப்படையில் பயிர்களையும் விலங்குகளையும் கோக்க வேண்டும். செயல்பாட்டின் அடிப்படையில் பயிர்களை அமைப்பதற்கு ‘இணக்கத் தொகுதி’ என்று பெயர். இவை ஒன்றுடன் ஒன்று உறவாடும் செயல்பாட்டின் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன.
ஒரு பயிர் மற்றொரு பயிருக்குப் பூச்சியைக் கட்டுப்படுத்த உதவலாம், மகரந்தச் சேர்க்கை நடப்பதற்கு உதவலாம், நன்மை செய்யும் நுண்ணுயிர்களைச் சேர்க்க உதவலாம். இப்படிப் பல்வேறு வகையில் ஒன்றுக்கொன்று உதவும் பாங்கை ‘தோழமைப் பயிர்கள்’ என்று கூறலாம்.
அதேநேரம் சில பயிர்கள் எந்தவிதமான உதவியும் செய்யாமல் தொல்லையும் செய்யாமல் வாளா இருக்கும் தன்மை கொண்டவை. சில பயிர்கள் அருகில் இருக்கும் பயிர்களுக்குத் தொல்லை தரவும் கூடும். எனவே, இவற்றின் தன்மைகளைக் கண்டறிந்து அவற்றை முறையாக நடவு செய்ய வேண்டும்.
பொதுவாக ஒரு வளமான சீரழிக்காத காட்டைக் கவனித்தால் அதில் எண்ணற்ற மரம், செடி, கொடிகள் காணப்படும். இதில் பெரிய மரங்கள் சிறு செடிகளை நம்பி இருக்கின்றன. சிறு செடிகளை அகற்றிவிட்டால் பெரிய மரங்கள்கூட இறந்துவிடும். ஒவ்வொரு சிற்றினத்துக்கும் அங்கு முக்கியத்துவம் உண்டு. காட்டில் பல அடுக்குகளில் உயிரினங்கள் வாழும். ஒவ்வொரு காலகட்டத்திலும் சில மடியும், மீண்டும் முளைக்கும். இப்படி மண்ணை உயிரோட்டமாக வைத்துக்கொள்வதில் ஒவ்வொன்றுக்கும் பங்கு உள்ளது.
கொய்யாச் செடி ஒன்றை நடவு செய்யும்போது அதைச் சுற்றி எந்த வகையான பயிர்களை வளர்க்க வேண்டும் என்ற கணிப்பு மிகவும் இன்றியமையாதது. கொய்யாவுடன் இணக்கமான பயிர்களும் உண்டு, பிணக்கான பயிர்களும் உண்டு. குறிப்பாக நரிப்பயறு எனப்படும் பயற்றங் குடும்பப் பயிர் கொய்யாத் தோப்பு முழுவதும் விதைக்கப்பட்டிருந்தாலும்கூட, அவை கொய்யாச் செடிக்கு நன்மை செய்கின்றன. அதாவது நைட்ரஜனைப் பிடித்துத் தருகின்றன. அதேநேரம் அருகம்புல் கொய்யாத் தோப்புக்குள் நிறைய இருந்தால், அவை கொய்யாவின் வேர்களை நன்கு வளரவிடாமல் தடை செய்கின்றன.
இப்படியாக ஒரு பயிர் இணக்கமாகவும், ஒரு பயிர் பிணக்கு கொண்டும் இருப்பதைக் கணக்கில்கொள்ள வேண்டும்.
அதனால் ஒரு பண்ணையில் வைக்கப்படும் செடிகள், மரங்கள், கால்நடைகள் ஆகியவற்றை, அவை மற்றவற்றுடன் எப்படியான உறவுகொள்ளக் கூடும் என்பதைத் தெரிந்துகொண்டு வரிசைப்படுத்த வேண்டும்.
தென்னை மரம், அதற்கடுத்தாற்போல ஒரு பயற்றங் குடும்பத் தாவரம் (அகத்தி), அடுத்தாற்போல் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் செண்டுப்பூ, நிழலில் வளரக்கூடிய காபி அல்லது கோகோ, நிறைய மட்கும் உயிர்க்கூளமும் தரக் கூடிய வாழை என்று முறையாக நடவு செய்தால் பண்ணையின் முரண்பாடு குறைக்கப்பட்டு, விளைச்சல் அதிகரிக்கும், வேலையும் குறையும்.
(அடுத்த வாரம்: இணக்கத்தைத் திட்டமிடுதல்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com