Published : 15 Jul 2014 17:10 pm

Updated : 15 Jul 2014 17:10 pm

 

Published : 15 Jul 2014 05:10 PM
Last Updated : 15 Jul 2014 05:10 PM

ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டிய சங்கமம்

ஞாயிற்றுக்கிழமை, அதிலும் மழை வேறு பிடித்திருந்தது. இந்த நிலையில் அண்ணா நகர் டவர் பூங்காவில் பெரிதாக யாரையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால், அன்றைக்குப் பாரம்பரியத் துடும்பாட்டத்துடன் அந்தப் பூங்கா களைகட்டியிருந்தது. ’பாதுகாப்பான இயற்கை உணவு திருவிழா’, அங்கே அரங்கேறிக் கொண்டிருந்ததுதான் காரணம்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு (Safe food alliance), இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.


இந்தத் திருவிழாவில் பருத்தி நூலால் இயற்கை சாயம் ஏற்றப்பட்ட சட்டைகள், சமைப்பதற்கு மண் பாண்டங்கள், இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கீரை வகைகள், சிறு தானியங்கள், விதைகள், மூலிகை சூப், பாரம்பரிய உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டன.

மண்பாண்டங்கள்

இயற்கை உணவுத் திருவிழாவில் வைக்கப்பட்டிருந்த மண் குவளை, வாழை இலை வடிவ மண் தட்டு, கலயம், ஜாடி, சிறிய கோப்பை முதலியவற்றை எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

"அந்தக் காலத்தில் அனைவரும் மண் பாண்டங்களைத்தான் பயன்படுத்தினார்கள். ஆனால் நாளடைவில் அலுமினியம், எவர்சில்வரில் ஆரம்பித்து டெஃப்லான், கலவை உலோகங்கள் முதலான பாத்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

மண் பாண்டங்களுக்குத் தனிச் சிறப்பு உண்டு. மண் பாண்டங்களில் சமைக்கும் உணவு சீக்கிரத்தில் கெட்டுப்போவதில்லை. மறுநாள்கூட வைத்துச் சாப்பிடலாம். குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உணவைப் பதப்படுத்தவும், பாதுகாக்கவும் மண் பாண்டங்களையே பயன்படுத்துகிறார்கள். அரிசி, பருப்பு காய்கறிகளை மண்பாண்டங்களில் சமைக்கும்போது எளிதில் வெந்துவிடுகிறது, அவற்றில் உள்ள சத்துகளும் அப்படியே கிடைக்கும்.

ஆரணி, பொன்னேரி, புதுச்சேரி போன்ற இடங்களில் தயாரிக்கப்படும் மண் பாண்டங்களை இது போன்ற விழிப்புணர்வு முகாம்களில் காட்சிப்படுத்தி மண் பாண்டங்களின் நன்மைகளையும், கலப்பு உலோகப் பாத்திரங்களின் பாதிப்புகளையும் எடுத்துரைக்கிறேன். குயவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் முயற்சி மேற்கொண்டு வருகிறேன்" என்று கூறும் அரசு, செராமிக் தொழில்நுட்பப் பட்டதாரி. தனியார் நிறுவன வேலையை விட்டுவிட்டு மண் பாண்டத் தொழில் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

துலா ஆடைகள்

இயற்கை சாயம் ஏற்றப்பட்டு, முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஆண்களுக்கான கைத்தறி குர்தாக்கள், சட்டைகள் பார்வை யாளர்களைக் கவர்ந்தன. நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளர்கள் அனைவரும் துலா பிராண்ட் கைத்தறி ஆடைகளையே அணிந்திருந்தனர்.

"பெண்களுக்கான துலா குர்திகள் தீர்ந்து போய்விட்டன. கையால் நெசவு செய்யப்படும் ஆடை என்பதால் தயாரிக்கப் பல நாட்கள் ஆகும். அது மட்டுமில்லாமல் எட்டு வண்ணங்களில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட துணி வகைகளும் உள்ளன. இதில் விருப்பப்பட்ட உடைகளைத் தைத்துக்கொள்ளலாம். இது குழந்தைகளின் சருமத்துக்கும் ஏற்றது.

இந்த ஆடைகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பருத்தி, கர்நாடக விவசாயிகளால் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆடைகளை அணிவதால் மற்ற ஆடைகளைப் போன்று சருமத்தில் பாதிப்புகள் ஏற்படாது என்பதுடன் இந்த ஆடைகளை வாங்குவதால் பருத்தி விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள் நேரடியாகப் பயனடைகிறார்கள்" என்கிறார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சுரேஷ்.

வீட்டிலேயே விவசாயம்

இயற்கை விவசாயம், இயற்கை உணவைக் குறித்த புத்தகங்களும், பாரம்பரிய விதைகளும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அங்கே சிங்கப்பூரில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்த நாச்சாள், வீட்டிலேயே இயற்கை விவசாயம் செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார்.

"இன்று நாம் உண்ணும் உணவில் சத்துகள் இல்லை. நாம் பயன்படுத்தும் காய்கறிகள், பழங்கள், கீரையில் விஷத்தன்மையுள்ள ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள் கலந்திருக்கின்றன. இந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதால் நமது ஆயுட்காலம் குறைவது மட்டுமில்லாமல் ’வாழும் வரை நோயே’ என்ற மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்.

நம்மாழ்வார் ஐயாவின் வாழ்க்கை முறையை முன்மாதிரியாகக் கொண்டு, ஐ.டி. தொழிலை உதறிவிட்டு இயற்கை விவசாயத்தில் களமிறங்கினேன். சென்னை போன்ற நகரங்களில் விவசாயம் செய்ய முடியாது, அதற்கான இடமும் இல்லை. இதற்குச் சஞ்சீவினி குடும்பத் தோட்டம் என்ற புதிய உத்தியை வலியுறுத்தி வருகிறேன்.

இதற்குச் சூரியஒளி படும் குறைந்த இடம் போதும். வராண்டா, பால்கனி, வீட்டு மாடி போன்ற இடங்கள் உகந்தவை. நான்கு அடியில் ஐம்பது செடிகள் வரை வளரவைக்கும் செங்குத்தான தோட்டம்தான் ’சஞ்சீவினி குடும்பத் தோட்டம்’.

நம் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை ரசாயன உரமின்றி இயற்கை முறையில் இதில் விளைவிக்கலாம். தினமும் பயன்படுத்திய காய்கறிகளில் இருந்து கிடைக்கும் கழிவை அதில் இட்டு மண்புழு உரமாக்கி, தாவரங்களை மேம்படுத்தலாம்" என்கிறார் நாச்சாள்.

மறக்க முடியாத ருசி

இப்படி இயற்கை உணவுத் திருவிழாவின் ஒவ்வொரு கடையிலும் அலைமோதிய கூட்டம் மழை பெய்தபோதும் குறைய வில்லை. மழையில் நனைந்துகொண்டே கீரை வகை களையும், சிறுதானியங்களையும், மண் பாண்டங்களையும் மக்கள் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

"இன்னைக்கு சாப்பாட்டுல ருசி இல்ல. அந்தக் காலத்துல இயற்கை விவசாயத்துல விளைஞ்ச அரிசி, காய்கறில சமைச்ச உணவோட ருசியே தனி. அந்த ருசியையும் மணத்தையும் மறக்க முடியல. பேப்பர்ல இந்த நிகழ்ச்சி பத்தி வந்திருந்ததைப் பாத்து தாம்பரத்துல இருந்து வந்திருக்கோம். இந்தக் காலத்துல நல்ல பொருட்கள இப்படித் தேடி வந்து வாங்கினத்தான் உண்டு" என்கிறார் எழுபது வயதைத் தாண்டிய சுலோச்சனா.

இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் மனநிறைவையும் தருகிறது. அதற்காக வெயில், மழையைப் பொருட் படுத்தாத மக்கள், பொருட்களைத் தேடி வந்து வாங்கிச் செல்லவும் தயங்குவதில்லை என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்தியது.


தவறவிடாதீர்!

    உணவு பொருள்கள்பூச்சிக்கொல்லிகள்விஷத்தன்மையுள்ள ரசாயன உரம்நம்மாழ்வார் ஐயாசாப்பாடு

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author