வேட்டை இலக்கியமும் மொழிபெயர்ப்பின் சவால்களும்

வேட்டை இலக்கியமும் மொழிபெயர்ப்பின் சவால்களும்
Updated on
3 min read

ஆதி காலத்தில் வேட்டையாடுதலின் நோக்கம் உணவுக்கான தேவையாக மட்டுமே இருந்தது. காலவோட்டத்தில் அதன் நோக்கம் முற்றிலும் உருமாறிவிட்டது. அரசர்கள், ஜமீன்தார்கள், பெரும் செல்வந்தர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் வேட்டையாடுதலைத் தங்கள் செல்வாக்கையும் வீரத்தையும் நிலைநாட்டும் செயலாகக்கருதினர்.

சில நேரம் அதுவே அவர்களுக்குப் பிரதானப் பொழுதுபோக்காகவும் இருந்தது. குறிப்பாக, சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேயர்கள் கணக்கு வழக்கில்லாமல் வேட்டையாடி, நமது நாட்டினுடைய காட்டுயிர்களின் அபரிமிதமான அழிவுக்கு முக்கியக் காரணியாக இருந்துள்ளனர்.

காடுகள், காட்டுயிர்கள், பறவைகள் பற்றிய தகவல்களை அளிக்கும் வேட்டை நிகழ்வுகள் குறித்த விவரிப்புகள் மக்களால் விரும்பப்பட்டன. இருப்பினும், வேட்டை நிகழ்வுகள் குறித்து எழுதப்படாத நிலையே நீடித்துவந்தது. அந்த நிலையை மாற்றியமைத்தவர்கள் ஜிம் கார்பெட், கென்னத் ஆண்டர்சன் எனும் இரண்டு ஆங்கிலேயர்கள்.

வேட்டை நூல்கள்: ஜிம் கார்பெட், கென்னத் ஆண்டர்சன் ஆகிய இருவரும் சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையாடியவர்கள். அது மட்டுமின்றி, கால்நடையாக, இரவு பகல் பாராமல், 20, 25 மைல்கள் மலை மீதும், அடர்ந்த காட்டினூடேயும், பயணம் செய்து, பட்டினியுடன், இரவில் காட்டிலுள்ள மரங்களில் தங்கி, ஆட்கொல்லிப் புலிகளையும், சிறுத்தைகளையும், மத யானைகளையும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேட்டையாடியவர்கள்.

ஜிம் கார்பெட்டின் வேட்டை அனுபவங்கள், ஆறு புத்தகங்களாகவும் கென்னத் ஆண்டர்சனின் வேட்டை அனுபவங்கள் எட்டுப் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன. இவர்கள் இருவரும் காடுகளையும், இயற்கையையும், காட்டு உயிரினங்களையும் நேசித்தார்கள். பிற்காலத்தில் காட்டையும், காட்டுயிர் களையும் காக்க வேண்டும் எனத் தங்கள் எழுத்துக்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வையும் அவர்கள் ஏற்படுத்தினர்.

அவர்கள் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினால், நாமும் அவர்களுடன் இணைந்து வேட்டைக் குச் செல்வதுபோல் இருக்கும். அவர்கள் காட்டில் பதுங்கிச் செல்லும்போது, நாமும் அவர்களுடன் பதுங்கிச் செல்வோம்; அவர்கள் பரபரப்படையும்போது நாமும் பரபரப்படைவோம்; இறுதியில் ஆட்கொல்லிப் புலிகளையோ, மதயானைகளையோ சுடும்போது, நாமும் அந்த நிகழ்வில் பங்கு பெற்றதாக உணர்வோம்.

வேட்டை இலக்கியங்கள்: சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் நமது நாடு, இயற்கை வளங்கள், காடுகள், மலைகள், தாவரங்கள் ஆகியவை எப்படி இருந்தன என்பதை வேட்டை இலக்கியங்கள் நமக்கு உணர்த்துகின்றன. மலைகளிலும், காடுகளிலும் வாழ்ந்த எளிய மக்கள் ஆட்கொல்லிப் புலிகளாலும் மதயானைகளாலும் எப்படி இன்னலுக்கு ஆளாகிக் கொல்லப்பட்டனர் என்பதும் அவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காட்டு உயிரினங்களின் நடத்தை, குணம் சார்ந்த அறிவை இந்த வேட்டை இலக்கியங்கள் தந்துள்ளன. இவர்கள் காலமாகி சுமார் 65 ஆண்டுகள் ஆகப்போகிறது. அவர்களின் வேட்டை இலக்கியங்கள், ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கில் விற்பனை ஆகிக்கொண்டே இருக்கின்றன.

மொழிபெயர்ப்பாளர் என்பவர் யார்? - மொழிபெயர்ப்பாளர் என்பவர் மொழிக்கும், வாசகர்களுக்கும் ஆக்கம் சேர்ப்பவராக இருத்தல் வேண்டும். குறிப்பாக மூலநூல் ஆசிரியரின் கருவைச் சிதைக்காமல், மொழிபெயர்த்தல் மிக மிக முக்கியம். "மூலக் கருத்தை மாற்றியும், சிதைத்தும் சில பகுதிகளை நீக்கியும், சில பகுதிகளை இணைத்தும் செய்யப்படும் மொழிபெயர்ப்புகள், மூலநூல் ஆசிரியருக்கு நாம் செய்யும் மரியாதைக் கேடு" என்று ஆங்கில நாவலாசிரியர் டிரைடன் கூறியுள்ளார்.

சில ஆங்கிலச் சொற்றொடர்களை வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம் செய்வது, அதன் பொருளையே மாற்றிவிடும் என இயற்கை ஆர்வலர், எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் குறிப்பிட்டுள்ளார்.

நல்ல நோக்கம் போதுமா? - வேட்டை இலக்கியங்கள் குறைவாகவே உள்ளன. அவையும் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கப்பெறுகின்றன. இந்த நிலையில், ஜிம் கார்பெட், கென்னத் ஆண்டர்சன் ஆகியோரின் சில வேட்டை இலக்கியங்களை ஆர்வமுள்ள சில எழுத்தாளர்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.

பலர் மூல நூலுக்கு மிக நெருக்கமாக மொழிபெயர்த்துள்ளனர். ஆனால், அனுபவமுள்ள எழுத்தாளர்களாக இருந்தபோதும், ஆர்வத்துடன் உழைத்து மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள் என்றபோதும், ஒரு சிலர் வேட்டை இலக்கியத்தின் முக்கிய கருவான காடுகள், தாவரங்கள், காட்டுயிரினங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள், ஓடைகள், நதிகள் போன்றவற்றை மொழிபெயர்க்கும்போது பொருத்தமான வார்த்தைகளை விடுத்து வேறு சொற்றொடர்களை உபயோகப்படுத்தி உள்ளனர். இதனால் மூலநூலைப் படித்துவிட்டு, மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.

குறிப்பாக வேட்டைக்காரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் எல்லாமே துப்பாக்கி என்றே மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. மூலநூலைப் படித்தவர்களுக்கும், ஆயுதங்களில் பரிச்சயம் உள்ளவர்களுக்கும் இந்த மாதிரி மொழிபெயர்ப்புகள் அதிர்ச்சியளிக்கின்றன. பொருளில் எவ்வளவு வேறுபாடு என்பதற்கு ஓர் உதாரணம், ‘பூப்பந்து மட்டையால் கிரிக்கெட் விளையாடி சிக்சர் சிக்சராக அடித்து ரன் எடுத்தார் அந்த வீரர்’ என்று சொல்வதற்கு ஒப்பாகும்.

எப்படி மேம்படுத்தலாம்? - தற்போது கலைக்களஞ்சியம் பெரிய நூலகங்களில் கிடைக்கிறது; நல்ல ஆங்கில-தமிழ் அகராதிகளில் பொருள் தெரிந்து மொழிபெயர்க்கலாம்; அந்தத் துறையில் சிறந்த, அனுபவம் வாய்ந்த வல்லுநர்களுடன் கலந்து பேசி சரியான பொருளைப் பதிவுசெய்யலாம்.

அது போலவே ஆயுதங்களைக் கையாண்ட முன்னாள் வேட்டைக்காரர்களைத் தொடர்பு கொண்டு மூலநூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆயுதங்களின் சரியான தமிழ்ப் பெயரைக் கேட்டுப் பதிவிடலாம். அல்லது பெரிய நகரங்களில் துப்பாக்கி விற்பனைக்கடைகள் உள்ளன. தொலைப்பேசி மூலமாகக்கூட விவரங்களைப் பெறலாம்.

இப்படி நிறைய வாய்ப்புகள் உள்ள போதும், தேடுதலும் அர்ப்பணிப்பும் இன்றி, ஆர்வத்தின் காரணமாகச் சம்பந்தமில்லா சொற்றொடர்களை நிரப்பி, மூல நூலின் மையக் கருவிலிருந்து விலகிச் செல்வதால், வாசகர்களின் வெறுப்பைத்தான் மொழிபெயர்ப்பாளர் சம்பாதித்துக் கொள்கிறார்.

இதுவே மொழிபெயர்ப்பாக அல்லாமல், நாவலாகவோ கவிதையாகவோ இருந்தால், நம் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு விருப்பம்போல் வார்த்தை ஜாலங்களைக் கையாளலாம். மாறாக இவை மொழிபெயர்ப்பாக இருப்பதால், மூலநூலுக்கு அவை நியாயமாக இருந்தாக வேண்டியிருக்கிறது.

- பா. கிருஷ்ணராஜ் | கட்டுரையாளர், கானுயிர் ஆர்வலர்; krishnarajp70@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in