

காட்டின் நாயகர்களான யானைகளுக்கும் காட்டுநாயகன் பழங்குடி தம்பதிகளுக்கும் இடையேயான கமுக்கமானதொரு உறவைச் சொல்லுகிறது ‘எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப் படம். மும்பையைச் சேர்ந்த கார்த்திகி கோன்சால்வஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 2023 ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலுக்கு இந்தப் படம் தேர்வாகியுள்ளது அறிந்ததே.
மின்சார வேலியில் சிக்குண்டு மாண்ட தாயைப் பிரிந்து தவிக்கும் இரண்டு யானைக் குட்டிகள் இப்படத்தின் கதை நாயக, நாயகியான பொம்மனிடமும் பெள்ளியிடமும் வந்துசேர்கின்றன. அவற்றை இவ்விருவரும் தங்களது குடும்ப உறுப்பினர்களாகக் கருதி வளர்ப்பதைப் பற்றிச் சொல்கிறது இப்படம்.
நேர்த்தியான ஒளி அமைப்பு, எளிய கதைப் பின்னணி. யானைகளைக் குடும்ப உறவினராகக் காட்டியது போன்றவை படத்தில் வரவேற்கப்பட வேண்டியவை. ‘நாமும்கூட இதுபோல ஒரு படம் எடுக்கலாம்’ என நிறையப் பேரைத் தூண்டும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
பொம்மனின் தனித்துவம்: இப்படத்தின் கதாநாயகரான பொம்மனை முதுமலைக் காட்டில் பார்த்திருக்கிறேன். யானைக்குத் தேவையான தீவனங்களைச் சேகரித்து அவற்றைக் கட்டாகக் கட்டி, அடுக்கி யானையின் தந்தங்களுக்கு இடையே வைத்து, அதைத் தூக்கியபடி யானை நடந்துவர அவர் யானையின் மீதேறி மிடுக்குடன் செல்வதைப் பார்த்து ரசித்திருக்கிறேன். இவர்கள் தனக்கு வழங்கப்பட்ட வேலையை ஏனோதானோவெனச் செய்வதில்லை. தங்கள் பணியில் அக்கறையும் அன்பும் அவர்களிடம் இருப்பதையும் உணர்ந்திருக்கிறேன்.
ஓர் ஓட்டுநர் எப்படித் தனது திறமையைப் பயன்படுத்தி வாகனத்தை ஓட்டுகிறாரோ, அதேபோல யானையை வளர்ப்பவர் தனது மொழியால் யானையை வசப்படுத்துகிறார், அதனைப் பராமரிக்கவும் செய்கிறார். ஆனால், பொதுவாக யானைப் பாகனின் தனித்துவமான திறமைகளுக்கு முக்கியத் துவமும் மரியாதையும் அங்கீகாரமும் தரப்படுவதில்லை. யானையை வசப் படுத்தும் பழங்குடியினரது அறிவு மதிக்கப்பட வேண்டும்.
தேவை என்ன? - அதே வேளையில் வாழ்விடம் தேடியும் உணவு தேடியும் அலையும் யானைகள் வாழ்வாங்கு வாழத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருபவர்களைக் கதை நாயகர்களாகக் கொண்டு படங்கள் வெளிவர வேண்டும். அதுதான் சிறப்பு; அதுதான் காட்டுயிர் வாழ்க்கை முறையை அறிவியல்பூர்வமாக மீட்டெடுக்கப் பயன்படும்.
மாறாகக் காட்டு விலங்குகளை வளர்ப்பவர்களையும் பாம்பு, முதலை, புலி உள்ளிட்ட விலங்குகளைப் பிடிப்பவர்களையும் முன்னிலைப்படுத்தும்போது காட்டுயிர்ப் பாதுகாப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. ஆனால், தீவினைப் பயனாக மக்கள் இவற்றை விரும்பிப் பார்க்கிறார்கள் என்பதால் பெரும்பாலான ஊடகங்கள் இதையே முதன்மைப்படுத்துகின்றன.
தாயைப் பிரிந்து வரும் எல்லாக் குட்டிகளையும் வளர்ப்பு யானைகளாக மாற்றுவது காட்டுயிர் அறிவியல் படி ஏற்புடையதல்ல. யானைகள் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை வாழ்பவை. யானைக் குடும்பங்களில் மனிதத் தலையீட்டால் இறப்புகள் நேரா வண்ணம் உரிய வழிவகை காண வேண்டும். அதுவே நிரந்தரத் தீர்வாக அமையும். மாறாக, இந்தப் படம் யானைக்குட்டி – மனிதர்களுக்கு இடையிலான உறவை ரொமான்டிசைஸ் செய்கிறது. பலருக்கும் இப்படம் பிடித்துப் போவதற்கு அதுவே காரணம்.
இப்படி யானைகளைப் பராமரிப்பில் வளர்க்கும்போது, சில விலங்கு நல அமைப்புகள் யானையைச் சரியாகப் பராமரிக்கவில்லை எனக் கூறி வழக்காடு மன்றம் மூலம் வழக்கு தொடுத்து, யானைகளைத் தனியார் சரணா லயங்களில் பராமரிக்கக் கொண்டுபோய் விட்டுவிட வேண்டும் என்று கூறும் ஆபத்தும் இருக்கிறது.
நிஜப் பிரச்சினை: எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் மறைமுகமாக நமக்கு உணர்த்தும் செய்தி இதுதான்: சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தந்தத்திற்காக யானைகள் வேட்டையாடப் படுவது பெரும் அச்சுறுத்தலாக இருந்தது; தற்போது ரயிலிலும் மின்சார வேலியிலும் சாலையிலும் அடிபட்டுச் சாவது, வேளாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கருதி மறைமுகமாக நஞ்சு வைத்துக் கொல்லப்படுவதும் யானைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. இதை நாம் எப்படிக் களையப் போகிறோம்?. மனித உயிரின எதிர்கொள்ளலைக் காரணமாக வைத்துப் புதிய புதிய விவசாயச் சங்கத் தலைவர்கள் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
பழங்குடியினர் பொதுவாகக் காட்டு யானைகளையும் பிற காட்டு விலங்கு களையும் தங்களுக்குத் தொந்தரவு எனப் பேசுவதில்லை. காட்டின் மொழி யையும் யானையின் மொழியையும் அறிந்து தங்களது வாழ்க்கையை அவர்கள் தகவமைத்துக்கொள்வதால், விலங்குகளை ஒரு தொந்தரவாக அவர்கள் பார்ப்பதில்லை.
வளர்ப்பு யானைகள் இறந்தால் அதைச் சாவுச் சடங்காக்கிப் புதைப்பதையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதனை நிறைய உயிர்கள் உண்ணும் வகையில் காட்டில் கொண்டுபோய் போட வேண்டும். கேரளத்தில் யானைகளுக்கு எனத் தனியே சுடுகாடு இருப்பதாக அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
ஓராயிரம் சிற்றுயிர்களுக்கும், பாறுக் கழுகு, பன்றி, கழுதைப் புலி ஆகியவற்றுக்கும் உணவுத் தேவையை ஈடுசெய்யும் பேருயிரியான யானையைப் புதைக்காமல் அப்படியே விடுவதற்கேற்பக் கொள்கை முடிவிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும்.
பழங்குடிகளின் தனித்துவப் பிரச்சினை: காட்டுநாயகன் பழங்குடியினர் நீலகிரி மலைக் காட்டை ஒட்டியே அதாவது நீலகிரி மாவட்டம் கூடலூர், கேரளத்தில் மலப்புரம், வயநாடு, கர்நாடகத்தில் சாம்ராஜ் நகர், குடகுப் பகுதிகளில் மட்டுமே வாழ்ந்துவருகின்றனர். ஆனால், சமவெளியில் வாழும் 21 வகையான இனக்குழுக்கள் காட்டு நாயகன் எனப் போலிப் பழங்குடி சான்று பெறுவதற்குப் போட்டி போடுகின்றனர்.
அதனால் கிடைக்கும் பயனையும் அவர்கள் துய்க்கின்றனர். இது குறித்தும் அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். போரிடுவதற்காகவும் கடினமான வேலைகளைச் செய்வதற்காகவும் கோயில்களில் வளர்ப்பதற்காகவும் நூற்றுக்கணக்கில் யானைகள் ஒரு காலத்தில் பிடிக்கப்பட்டன. அது போன்ற நிலை தற்போது இல்லை. பழங்குடிகளுக்கு வனத் துறையில் கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது.
காட்டு நாயகன் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆண்கள் பெருங் குடிகாரர்களாக மாறி குடிநோய்க்கு ஆளாகி வருகின்றனர். பெண்கள்தான் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இது குறித்தும் கவனம் கொள்ள வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதுமலையில் யானைப் பாகனை யானை நசுக்கிக் கொன்றது.
அதற்கு யானைப் பாகன்களின் அளவுக்கு அதிகமான குடியால் யானைகளுக்கு ஏற்படும் வாசனை ஒவ்வாமை, குடித்த பின் பாகன்கள் நடந்துகொள்ளும் முறை போன்றவை யானைகளின் இப்படிப்பட்ட எதிர்வினைக்குக் காரணமாக இருக்கலாம்.
யானைகள் கமுக்கமாகவும் உரத்தும் சொல்லும் சேதி இதுதான்: யானையைப் புனிதப்படுத்தியோ, சடங்கு மூலம் வழிபாடு நடத்தியோ, வளர்ப்பு யானையாக மாற்றியோ காப்பாற்றிவிட முடியாது. அத்துடன் அடிப்படையில் காட்டு யானைகள் ஒரு போராளி என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நம்மைவிட மூத்தவையான அவை தங்களின் இருப்பை நிலைநாட்டத் தொடர்ந்து போராடியபடியே இருக்கும். அவை வெற்றிபெற்றால் மனிதர்களான நமக்கு நல்லது. அவை தோல்வியுற்றால் மனிதர்களுக்கும் சேர்த்தே முடிவுரை எழுதப்படும்.
- சு. பாரதிதாசன் | கட்டுரையாளர், காட்டுயிர் செயல்பாட்டாளர் - எழுத்தாளர்; arulagamindia@gmail.com