இயற்கை 24X7 - 45: சுற்றுச்சூழல் நீதி

இயற்கை 24X7 - 45: சுற்றுச்சூழல் நீதி
Updated on
2 min read

லாரி சம்மர்ஸ் எனப்படும் லாரன்ஸ் சம்மர்ஸ் என்பவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தவர். இவர் அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனிடம் கருவூலச் செயலாளராகவும் பணியாற்றியவர்.

1991இல் இவர் உலக வங்கியின் முதன்மை பொருளாதார வல்லுநராக இருக்கையில், மற்றொரு அதிகாரிக்கு எழுதிய கடிதம் ஒன்று அவரது உதவியாளரால் வெளியே கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அது சமாளிக்கப்பட்டாலும், உண்மையை மறைக்க இயலவில்லை. அக்கடிதத்தின் சாரம் இதுதான்:

“மிகக் குறைந்த வருவாய் இழப்பு நேரிடும் ஒரு நாட்டிலே, மிகக் குறைந்த ஊதியங்கள் பெறுகின்ற மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டிலே, உடல்நலத்துக்குத் தீங்கு உண்டாக்கும் நச்சுக் கழிவுகள் கொட்டிப் புதைக்கப்பட வேண்டும். பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்ட இந்த வாதம் குறையற்றதாகும்; சரியானதாகும். இதைச் செயல் படுத்த நாம் தயங்கலாகாது.”

அதாவது, சுற்றுச்சூழல் சீரழிவுகளை உருவாக்கும் தொழிற்சாலைகளை வளரும் நாடுகளில் அமையுங்கள் என்பதே இதன் பொருள். இது, தமது குறிக்கோளுக்காக மற்றவர்களைப் பலி தருவதில் தவறில்லை என்னும் ‘எக்ஸ்பெண்டபிள் கோட்பாட்டின்’ (Expendable doctrine) சாரமாகும். ‘மேற்குலகில் நச்சுக்கழிவுகள் அனுமதிக்கப்பட மாட்டாது என்கிற சூழலில், அத்தகைய தொழில்கள் பலவற்றிற்கும் இந்திய அரசு உண்மையிலேயே நல்ல ஆதரவளிக்கிறது’ என்பார் மாதவ் காட்கில்.

சுற்றுச்சூழல் சமத்துவமின்மை: அமெரிக்கா போன்ற நாடுகளிலும் சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்கின்றனவே என்று கேட்கலாம். அதன் பின்னாலும் ஓர் அரசியல் உள்ளது. தரமான நிலம், நல்ல குடிநீர், தூய்மையான காற்று ஆகியவை அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானவை. மக்களுக்கும் அவை பொதுவானவையே. ஆனால், அவை ஏன் அனைத்து மக்களுக்கும் சமமாகக் கிடைப்பதில்லை? இதையே, ‘சுற்றுச்சூழல் சமத்துவமின்மை’ என்கிறோம்.

‘சுற்றுச்சூழல் கொள்கையை நடைமுறைப்படுத்துகையில் இனம், நிறம், நாடு, வருமான வேறுபாடின்றி அனைத்து மக்களையும் நியாயமாக நடத்திட வேண்டும்’ என்று அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (US EPA – Environmental Protection Agency) தெரிவிக்கிறது. இதுவே, ‘சுற்றுச்சூழல் நீதி’ எனப்படும். ஆனால், அமெரிக்காவிலேயே இது நடைமுறையில் இல்லை.

அங்கே சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஆலைகள் அல்லது குப்பைக் கிடங்குகள் போன்றவை வெள்ளை இனத்தவர் அதிகமாக வசிக்கும் பகுதியில் அமைவதில்லை. மாறாகக் கறுப்பர், செவ்விந்திய மக்கள் வசிக்கும் பகுதியிலேயே குவிக்கப்படுகின்றன. எனவே, சுற்றுச்சூழல் பாதிப்பும் அவர்களையே அதிகம் பாதிக்கிறது. அதாவது, ‘சுற்றுச்சூழல் அநீதி’ என்பது அங்கு இன அடிப்படையில் நிகழ்கிறது.

சுற்றுச்சூழல் பிரிவினை: அங்கு இனம் என்றால் இந்தியாவில் சாதி. இங்கும் விளிம்புநிலை மக்கள் வசிக்கும் பகுதியிலேயே சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஆலைகள் அமைகின்றன. அணு உலைகள் என்றும் தலைநகரில் அமையாது. தமிழ்நாட்டிலும் வடசென்னையில் அமையும் அனல் மின்நிலையங்கள், அடையாறு பகுதியில் அமையாது. அவற்றுக்கு உயர்தர வாழ்க்கை வாழும் மக்களையும் விளிம்பு நிலை மக்களையும் பிரித்து அடையாளம் காணத் தெரிந்திருக்கிறது.

வளங்குன்றா வளர்ச்சியைப் பற்றிப் பேசும் பலரும் சுற்றுச்சூழல் அநீதி குறித்து வாய் திறப்பதில்லை. 1987லேயே வளங்குன்றா வளர்ச்சிக்கு எது அவசியம் என்பதற்கான ஐ.நா.வின் அறிக்கை (Brundtland Report) வெளியாகியுள்ளது. அது மூன்று அடிப்படைகளைக் கூறுகிறது. அவை: 1. சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2. சமூகநீதிப் பாதுகாப்பு 3. பொருளாதார வளர்ச்சி. ஆனால், காலப்போக்கில் முதலிரண்டும் மறக்கடிக்கப்பட்டு கடைசி ஒன்று மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

யார் சுற்றுச்சூழலியலாளர்? - “யார் அதிகம் சேதம் விளைவிக்கிறார்களோ அவர்களே அதிகமாகப் பலனடைகின்றனர். தவிர, அவர்கள் எப்போதும் பசுமையாகவே காட்சியளிப்பார்கள்” என்பார் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் எடுவார்டோ கலியானோ. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடங்கிய பிறகு உலக நிதி நிறுவனங்களும் பசுமை வேடமிடுகின்றன. ஒருமுறை அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் ஜூனியர் இப்படிச் சொன்னார்: ‘நாங்களும் சுற்றுச்சூழலியலாளர்களே’.

அப்படியானால், யார்தான் உண்மையான சுற்றுச்சூழலியலாளர்? வெறுமனே தாவர, விலங்கினங்களுக்காக (Flora and Fauna) மட்டும் போராடினால் அவர் மரபுசார் சுற்றுச்சூழலியலாளர் (Traditional Environmentalist) மட்டுமே. ஆனால், தற்காலத்தில் தேவைப்படுவது மரபுசாரா சுற்றுச்சூழலியலாளரே (Non Traditional Environmentalist). அவர்தான் அழிந்துவரும் விளிம்புநிலை மக்களுக்காகவும் சேர்த்துப் போராடுபவராக விளங்குவார். இவர்களால் மட்டுமே சுற்றுச்சூழல் நீதி கிடைக்கும்.

நடப்பில் இந்த இரண்டு வகைச் சுற்றுச்சூழலியலாளராகவும் அல்லாமல் மற்றொரு புதிய வகை சுற்றுச்சூழலியலாளர்களே நாட்டில் பெருகி வருகின்றனர். அது சுற்றுச்சூழலுக்கே பெருங்கேடு.

- நக்கீரன் | கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்; vee.nakkeeran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in