பழவேற்காடு ஏரி: மறுசீரமைக்கப்பட்டு காக்கப்படுமா?

பழவேற்காடு ஏரி: மறுசீரமைக்கப்பட்டு காக்கப்படுமா?
Updated on
2 min read

உலக சுற்றுச்சூழல் அமைப்புகளில் கடலோர ஏரிகளும் சதுப்புநிலங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை பல்வேறு வகையான தாவரங்களுக்கும் பல்லுயிர்களுக்கும் வாழ்விடத்தை வழங்குகின்றன. முக்கியமாக, பல உயிரினங்களின் வாழ்க்கைச் சுழற்சிக்கும் அவை உதவுகின்றன.

முறையற்ற மேலாண்மை, சதுப்புநிலங்களின் வள சுரண்டல் போன்றவற்றின் காரணமாக, உலகின் பல ஏரிகள் பாதிக்கப்படுகிறன. இந்த பாதிப்பு, அங்கிருக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் அவற்றைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கைக்கும் ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்துகிறது. சென்னைக்கு அருகிலுள்ள பழவேற்காடு ஏரியும் இத்தகைய பாதிப்பைச் சந்தித்துவருகிறது.

பழவேற்காடு ஏரி: பழவேற்காடு ஏரி இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தனித்துவமான ஏரி; இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரும் உவர்நீர் கழிமுக ஏரி. இந்த ஏரியின் வயது ஏறத்தாழ 600 ஆண்டுகளுக்கும் மேலே இருக்கும். ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களுக்கிடையே பரந்து விரிந்துள்ள கடல் கழிமுகமாக இது உள்ளது.

பழவேற்காடு ஏரிக்கும் ஆந்திர, தமிழ்நாட்டின் கலாச்சார பாரம்பரியம், சமூக-பொருளாதார நிலை ஆகியவற்றுக்கும் இடையே வலுவான தொடர்புண்டு. இந்த ஏரியின் குறிப்பிடத்தக்கப் பகுதி ஆந்திரப் பிரதேசத்திலும் (84%) மீதமுள்ள பகுதி (16%) தமிழ்நாட்டிலும் உள்ளது; மழைக்காலத்தில் ஏரியின் நீர்ப் பரப்பு 720 ச.கி.மீ.; நீளம் சுமார் 60 கி.மீ.; அகலம் 0.2 முதல் 17.5 கிமீ வரை மாறுபடுகிறது.

இயற்கை செழிப்புமிக்க இந்த ஏரி பல உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்கு கின்றது! ஐயுசிஎன் அமைப்பின் சிவப்பு பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அழிந்துவரும் உயிரி னங்களுக்கும், புலம்பெயர்ந்த பறவைகளுக்கும் பழவேற்காடு சதுப்புநில ஏரி சொர்க்கமாகத் திகழ்கிறது. இந்த ஏரிக்கு சுமார் 250 வகையான பறவைகள் பல ஆயிரம் கி.மீ. தாண்டி இரை தேடி வருகின்றன. அவற்றில் 50 பறவைகள் வெவ்வேறு கண்டங்களுக்கு இடையேயானவை.

அழிவுக்கு உள்ளாகும் ஏரி: வளமான மீன்வளத்தைக் கொண்டிருக்கும் இந்த ஏரி, அதைச் சுற்றியுள்ள 50,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வா தாரமாகத் திகழ்கிறது. இதைச் சுற்றியுள்ள 200 கிராமங்களில் சுமார் ஒரு லட்சம் மக்கள் இந்த ஏரியின் மீன்வளத்தை நம்பியே வாழ்கின்றனர்.

இருப்பினும், உள்ளூர் மக்கள் இன்னும் அதன் மதிப்பை உணரவில்லை. விளைவு, இந்த ஏரி தொடர்ந்து அழிவைச் சந்தித்துவருகிறது. 2010இல் குளோபல் நேச்சர் ஃபண்ட் பழவேற்காடு ஏரியை ‘அச்சுறுத்தலுக்கு உள்ளான ஏரி’ என்று அறிவித்தது.

இறால் பண்ணைகள், உயிரியல் வளங்களை அதிகமாகச் சுரண்டுதல், காடழிப்பு போன்ற மனித செயல்பாடுகள் இந்த ஏரியின் இருப்புக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவருகின்றன. ஆற்று நீர்வரத்து குறைவு, கடல் நீர் புகுதல், கால்வாய் அடைப்பு, உப்புத்தன்மை அளவில் வீழ்ச்சி, மாசுபாடு, ஆக்கிரமிப்பு, மீன் உற்பத்தி குறைதல், ஒட்டுமொத்த பல்லுயிர் இழப்பு போன்றவை பழவேற்காடு ஏரியைச் சார்ந்துள்ள உள்ளூர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மோசமாகப் பாதிக்கின்றன.

இத்துடன், வளர்ச்சித் திட்டங்கள் எனும் பெயரிலும் பழவேற்காடு ஏரியின் பரந்துபட்ட பகுதி அழிக்கப்பட்டு வருகிறது. வளர்ச்சி திட்டங்கள் தேவைதான். ஆனால், விலைமதிப்பற்ற சதுப்புநிலமான பழவேற்காடு ஏரியை அழிக்கும் ஒன்றாக அவை இருப்பதை எப்படி ஏற்க முடியும்?

ஏரி மறுசீரமைப்பு: திறன்மிக்க நடைமுறைகளின் மூலம் பழவேற்காடு ஏரியின் சுற்றுச்சூழல் பண்புகளை மீட்டெடுக்க முடியும் என்பதற்கு ஒடிசாவின் ’சிலிகா ஏரி மேம்பாட்டு ஆணையம்’ எடுத்துக்காட்டாக உள்ளது. உள்ளூர் சமூகங் களின் தீவிரமான பங்கேற்பு, சர்வதேச நிறுவனங் களுடனான தொடர்பு, தீவிர கண்காணிப்பு ஆகியவற்றால் சாத்தியமான மறுசீரமைப்பு அது. அவற்றை இங்கேயும் பின்பற்ற முடியும்.

ஒடிசாவின் சிலிகா மேம்பாட்டு ஆணையத்தைப் போலவே பழவேற்காடு மேம்பாட்டு ஆணையம் எனும் அமைப்பை உருவாக்குவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. இத்தகைய முன்னெடுப்பு பழவேற்காடு ஏரியின் மீன் வளத்தை அதிகரிப்பதுடன், சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தும்; நன்னீர் ஆக்கிரமிப்பு இனங்களையும் குறைக்கும்.

பழவேற்காடு ஏரியின் மறுசீரமைப்புக்கான மேலாண்மைத் திட்டம், சதுப்புநிலத்தைப் பாதுகாத்தல், நீர்ப்பிடிப்பு மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பழவேற்காடு ஏரியின் சுண்ணாம்பு பாறைகள் வெட்டி எடுக்கப்படுவதைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

பழவேற்காடு ஏரியின் பல்லுயிர் பாதுகாப்பு உத்திகள், சுற்றுச்சூழல் சுற்றுலா மேம்பாடு, சமூகப் பங்கேற்பு, ஒருங்கிணைந்த நீர்நிலை மேலாண்மை, நீரியல் கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகளைத் தேசிய, சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஏரியின் மறுசீரமைப்பு திட்டத்தைத் தயாரிப்பதற்கு மீன்வள மேலாண்மை மையங்கள் (CIBA, CMFRI), நீரியல், அகழ்வாராய்ச்சி நிறுவனங்கள், நீர் வேதியியல் தரக் கண்காணிப்பு அமைப்புகள், புவித் தகவல் அமைப்பு (GIS), சுற்றுச்சூழல், உயிரியலாளர்கள் குழு போன்றவற்றை ஈடுபடுத்த வேண்டும். அப்போதுதான், அந்தத் திட்டத்தின் செயலாக்கம் நீண்ட காலப் பார்வையுடன் இருக்கும்; பழவேற்காடு ஏரி சுற்றுச்சூழல் பாதுகாப்பைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் உதவும்.

முன்மாதிரி: ஏரிகள், சதுப்புநிலங்களின் வெற்றிகரமான பாதுகாப்பு, அவற்றின் நீர் அளவை போதுமான வகையில் நிர்வகிப்பதைப் பொறுத்தே அமையும். இருப்பினும், அவற்றின் வளங்களைப் பயன்படுத்துவதில் முரண்பட்ட ஆர்வங்கள் உள்ளன என்பதால், ஏரிகள், கடலோர சதுப்புநிலங்களின் மறுசீரமைப்புக்கும், மேலாண்மைக்கும் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஈடுபடுத்துவது அவசியம்.

சதுப்புநில வளங்களின் நிலையான மேலாண்மைக்குத் தேவையான திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கு இந்த அணுகுமுறையே உதவும். இத்தகைய முன்னெடுப்புகளே அப்பகுதி மக்களின் நிலையான வாழ்க்கை முறைக்குப் பாதுகாப்பளிக்கும். முக்கியமாக, பழவேற்காடு ஏரியின் சுற்றுச்சூழலை மீட்டெடுக்க உதவும்.

பழவேற்காடு ஏரியைப் பாதுகாக்கும் பொறுப்பை அரசு ஏற்றால், பழவேற்காடு ஏரியின் சதுப்புநிலப் பாதுகாப்பின் எதிர்காலப் போக்கு ஆக்கபூர்வமாக முன்நகர்ந்து செல்லும். இத்திட்டம் வெற்றியடைந்தால், கடலோர சதுப்புநில மேம்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் அது ஒரு சர்வதேச முன்மாதிரியாக இருக்கும்.

- வைத்தியநாதன் கண்ணன் | கட்டுரையாளர், காட்டுயிர் உயிரியலாளர்; kannan.vaithianathan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in