

‘ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது’ என்பர். வீட்டுக்குள் ஆமை நுழைவது கெடுதல் என்கிற மூடநம்பிக்கை நம்மிடையே உண்டு. உலகின் பல நாட்டு மக்கள் ஆமையை வீடுகளில் வளர்ப்பு விலங்காக வைத்துள்ளனர். அவர்கள் வளமாகவே வாழ்கின்றனர்.
ஒருவர் பொருளாதாரத்தில் நொடித்து, அவருடைய வீடு நீதிமன்றத்தால் ஏலம் விடப்படுவதை அறிவிக்க, ‘அமீனா’ என்னும் நீதிமன்ற ஊழியர் அவ்வீட்டுக்கு வருவார். அதிலிருந்தே அமீனா புகுந்த வீடு உருப்படாது என்ற வழக்கு மொழி தோன்றியது. ஆனால், பிற்காலத்தில் அக்குடும்பத்தைச் சார்ந்தவர் பொருளாதார நிலையில் முன்னேறி அதே சொத்தை மீட்டெடுத்த கதையையும் நாம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆக, ஆமை புகுந்த வீடும் உருப்பட்டுவிடும்; அமீனா புகுந்த வீடும் உருப்பட்டுவிடும். ஆனால், உலகவங்கி புகுந்த நாடும், ஐஎம்எஃப் புகுந்த நாடும் உருப்படவே உருப்படாது. உருப்பட்டதாக வரலாறும் கிடையாது.
யாருடைய வங்கி? - “உலக வங்கி என்பது உண்மையில் உலக வங்கியே அல்ல. அது ஐக்கிய அமெரிக்க வங்கி. அதன் நெருங்கிய அமைப்பான சர்வதேச நிதியமும் (IMF) அப்படியே. உலக வங்கியில் 16% வாக்குகளையும், ஐஎம்எஃபில் 17% வாக்குகளையும் அது கட்டுப்படுத்துகிறது. மேலும், அமெரிக்க அதிபரே உலக வங்கியின் தலைவரை நியமிப்பார்” என்கிறார் ‘பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ நூலை எழுதிய ஜான் பெர்கின்ஸ்.
பல்வேறு திட்டங்களுக்கு உலக வங்கி கடன் வழங்க ஒப்புக்கொண்டதை அரசு பெருமிதத்துடன் அறிவிப்பதைப் பார்த்திருப்போம். உலக வங்கி, ஐஎம்எஃப் போன்றவை ஏதோ ‘வாரி வழங்கும் வள்ளல்கள்’ போன்ற தோற்றத்தை மக்களிடையே இது உருவாக்கி வைத்துள்ளது. உண்மையில் அவை உலகின் மாபெரும் கந்துவட்டி நிறுவனங்களே.
கடன் வாங்கும் நாடுகள் அதிக இயற்கை வளங்களைக் கட்டாயம் ஏற்றுமதி செய்தாக வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறார் எழுத்தாளர் ஆனி லியோனார்ட். எனவே, அவை கார்ப்பரேட் நிறுவனங்களின் முகவர்கள் என்பதே சரி. அதனால்தான், “மூன்றாம் உலக நாடுகளை வாட்டி வதைக்கும் கடன்களின் பெரும்பகுதி வணிக ஒப்பந்தங்கள் மூலமாக அமெரிக்காவுக்கே திரும்பி வந்துவிடும்” என்கிறார் பெர்கின்ஸ்.
சிக்கினால் சின்னாபின்னம்: சூழலியல் குறித்துப் பேசும் இடத்தில் உலக நிதி நிறுவனங்களை ஏன் திட்ட வேண்டும் என்று கேட்கத் தோன்றலாம். உலக நிதி நிறுவனங்கள் வழங்கும் கடனுக்கும், மூன்றாம் உலக நாடுகளின் சூழலியல் அழிவுக்கும் தொடர்புகள் உள்ளன என்கிறார் அரசியல் பொருளாதார வல்லுநர் சூசன் ஜார்ஜ்.
“சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்தும் திட்டங்களுக்கே நிதியுதவி வழங்கப்படும். பிறகு, அக்கடனை வட்டியுடன் அடைக்க, தொடர்ந்து இயற்கை வளங்கள் சூறையாடப்படும். இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை” என்னும் அவர், அவ்வாறு கடன் வலையில் சிக்கி சின்னா பின்னமான பல நாடுகளின் வரலாற்றை எழுதியுள்ளார்.
நாம் பலமுறை செய்திகளில், ‘புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது’ என்று கேட்டிருப் போம். அது என்ன புரிந்துணர்வு ஒப்பந்தம்? இதுவரை அது பொதுமக்கள் எவருக்கேனும் புரிந்திருக்கிறதா? அரசுக்கும் நிறுவனங்களுக்கும் மட்டுமே புரியக்கூடிய அந்த ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனால், நிறுவனங்கள் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கிய பிறகு ஏற்படும் சுற்றுச்சூழல் சீரழிவு அது என்ன என்பதை நமக்குப் புரிய வைத்துவிடும். இந்த அரசியல் எல்லாம் புரியாமல் சுற்றுச்சூழலைப் பற்றிப் பேசுவதில் ஒரு பயனுமில்லை.
நேரடி சாட்சியங்கள்: மூன்றாம் உலக நாடுகளுக்கு உலக நிதி நிறுவனங்கள் அளிக்கும் கடன்கள், இன்று குழந்தைகளாக இருப்பவர்கள் முதல் அவர்களின் பேரக்குழந்தைகள் வரை தலைமுறை தலைமுறையாக அந்நாட்டவர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கவே உதவுகின்றன.
கடன்களைத் திருப்பித் தருவதற்காக அந்நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளை நிறுத்திவைக்க உலக நிதி நிறுவனங்கள் உத்தரவிடும். ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்கக் கண்டங்களின் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் இந்த உண்மை எளிதில் விளங்கும்.
ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஸாம்பியா அவ்வாறே அழிந்தது. அது குறித்து நிதி நிறுவன அதிகாரி ஒருவர் வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளரிடம் பேசுகையில், “ஜாம்பியாவில் நடைபெற்றதை நாங்கள் தடுத்திருக்கலாம். அதே நேரம், அந்நாட்டைத் தரைமட்டமாக்கிய பெருமை எங்களையே சாரும்” என்று அகந்தையுடன் குறிப்பிட்டார்.
ஆனால், “ஐஎம்எஃப் கோரிக்கைகளுக்கு இடம் கொடுக்க மறுத்த நாடுகளின் பொருளாதாரம் சிறப்பாக இருந்தது என்பதை ஆய்வுகள் உறுதிசெய்கின்றன” என்கிறார் பெர்கின்ஸ். கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் சுற்றுச்சூழல் சீரழிவுக்கு உலக நிதி நிறுவனங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும் என்று கேட்கலாம். அதற்கும் விடை இருக்கிறது. அடுத்த வாரம் பார்ப்போம்.
- கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்; vee.nakkeeran@gmail.com