

சுற்றுச்சூழலும் பொருளாதார வளர்ச்சியும் அந்தக் காலத்து எம்ஜியாரும் நம்பியாரும் போல எதிரிகள் அல்ல. அப்படியான தவறான புனைவு நம் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது. எனவேதான், சுற்றுச் சூழலைப் பற்றிப் பேசுபவர்களை உடனே பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானவர்களாக நிறுத்தும் தந்திரம் இங்கே தொடர்ந்து கையாளப்படுகிறது.
சுற்றுச்சூழலியலாளர் என்றாலே அவர் செருப்புக்குப் பதிலாகப் பாதக்குறடு அணிய வேண்டும். ஆடைக்குப் பதிலாக மரவுரி தரிக்க வேண்டும். அவர் காட்டிலோ, குகையிலோ, மரக்கிளையிலோ வசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. சிறிதளவாவது பொருளாதார வரலாறு தெரிந்தவர்கள் இப்படிப் பேச மாட்டார்கள்.
தொடக்கத்தில் பண்டமாற்று முறை மட்டுமே இருந்தது. அதாவது பொருளைக் கொடுத்துப் பொருளை வாங்கினோம். பிறகு பணம் நுழைந்ததும் அது, ‘பண்டம் – பணம் – பண்டம்’ என்ற வடிவத்துக்கு மாறியது. பிறகு தலைகீழாக, ‘பணம் – பண்டம் – பணம்’ என்று அது உருமாறியதும் சிக்கல் தொடங்கியது. அதன் துணை விளைவாக உபரி செல்வம் உருவாக, அதுவே முதலீட்டியத்தைத் தொடங்கி வைத்தது என்பது மார்க்சியக் கொள்கையின் சாரம்.
மதிப்பு தெரியாதவர்கள்
தேவைக்கு மேல் கிடைத்த உபரியே பண்டைய மெசபடோமியாவின் சிக்குரக் கோயில்கள், சீனப் பெருஞ்சுவர்கள், எகிப்து பிரமிடுகள், உலகின் அரண்மனைகளாக மாறின என்பார் டி.டி.கோசம்பி. உபரி பெருகவும் பேராசையும் பெருகியது. மேன்மேலும் செல்வம் குவிக்க இயற்கைவளம் அளவின்றி சுரண்டப்பட்டது. விளைவு சுற்றுச்சூழல் சீரழிவும் பெருகியது.
ஆனால், சுரண்டப்பட்ட இயற்கையின் மதிப்பு என்றும் பொருளின் விலையில் சேர்க்கப்படுவதே கிடையாது. பாமாயில் கதையை எடுத்துக்கொள்வோம்.
ஒரு மழைக்காட்டை அழித்தே செம்பனை (எண்ணெய்ப் பனை) பயிரிடப்படுகிறது. பாமாயில் இதர எண்ணெய்யைவிட அதிக விளைச்சல் தருவதாகச் சமாதானம் சொல்லப்படுகிறது. ஹெக்டேருக்கு நிலக்கடலையிலிருந்து 600 கிலோ கடலை எண்ணெய் கிடைக்கிறது. அதேசமயம், செம்பனையில் 5,000 கிலோ பாமாயில் கிடைக்கிறது என்கிறார்கள்.
கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நிலக்கடலை ஏற்கெனவே உள்ள விளைநிலத்தில்தான் பயிரிடப்படும். ஆனால், செம்பனை பயிரிட அழிக்கப்படும் மழைக்காடுகளின் மதிப்பு என்ன? அதன் பல்லுயிரிய இழப்புக்கு விலை வைக்க முடியுமா? மழைக்காடு உருவாக்கித் தரும் மழையை, எண்ணெய் விற்ற காசால் பெய்ய வைக்க முடியுமா?
அடிப்படையைச் சிதைக்கிறோம்
“பொருளாதார வளர்ச்சிக்காகப் புவியின் நசிவை நாம் கருத்தில் கொள்ளாமல் இருப்பதற்கு, நம்மால் உற்பத்தி செய்யவே முடியாத இயற்கை வளங்களை மதிப்பற்றதாக நாம் கருதுவதே காரணம்” என்கிறார் ஷூமாக்கர். மக்களுக்கு மலிவு விலையில் பொருளை வழங்குவதே அதன் நோக்கம் எனக் கூறித் தப்பிவிட முடியாது. ஒரு பொருள் அடக்க விலையைவிட எத்தனை மடங்கு லாபம் வைத்து விற்கப்படுகிறது என்பது இங்கு வெளிப்படை.
ஒரு நல்ல முதலாளி தனது தொழிலில் மூலதனம் தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதைக் காண்கையில், நிறுவனம் நல்ல முறையில்தான் நடக்கிறது என்பதை ஒப்புக்கொள்வாரா? மாட்டார். புவியின் புதுப்பிக்க இயலாத 19 இயற்கை வளங்களும் அப்படித்தானே குறைந்துவருகின்றன? அது முடிந்துவிட்டால் மூலப்பொருளை எங்கிருந்து கொணர்வீர்கள் என்னும் இ.எஃப்.ஷூமாக்கரின் கேள்வி பொருள் பொதிந்தது.
மாற்றுப் பொருளாதாரம்
ஓர் உண்மையை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். “மனிதர் என்பவர் உற்பத்தியாளர் அல்ல. ஒரு பொருளை ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றத் தெரிந்தவர் மட்டுமே மனிதர்” என்கிறார் அவர். “இயற்கை வளத்தை ஒரு சிறப்பு நிதியாக மனிதக்குலம் சேமித்து வைத்திருக்க வேண்டும். அதை, வருமானமாகக் கருதாமல், மூலதனமாகக் கருதியிருக்க வேண்டும். குறைந்த அளவிலேயே அதைச் சார்ந்திருக்கும்படி வாழ்ந்திருக்க வேண்டும்” என்பார் அவர். அதற்காக ‘மெட்டா எகனாமிக்ஸ்’ என்கிற கருதுகோளை அவர் முன்வைக்கிறார்.
மெட்டா எகனாமிக்ஸ் என்பது மனிதரின் சுற்றுச்சூழலுடன் கூடிய பொருளாதாரம். அது இரண்டு நிலைகளைக் கொண்டது. ஒன்று மனிதரைப் பற்றியது. மற்றொன்று, சுற்றுச்சூழலைப் பற்றியது. அதாவது, பொருளாதாரம் பற்றிய ஆய்வில் மனிதக் குல முன்னேற்றத்தை நோக்கமாகக் கொள்ளும்போது, கூடவே இயற்கையையும் அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழல் சீரழிவு ஒன்றும் மனிதக் குலத்துக்குப் புதிதல்ல. மெசபடோமியா, மாயன் நாகரிகத்தின் அழிவு சுற்றுச்சூழல் தாக்கத்தால்தான் நிகழ்ந்தது என்று நம்பப்படுகிறது. ஆனால், நாம் இன்னும் பாடம் கற்கவில்லை. அன்று பேரரசுகள் அழிந்தன என்றால், அந்த இடத்தில் இன்று கார்ப்பரேட் நிறுவனங்கள் இருக்கின்றன. இதற்குத் தீர்வுதான் என்ன? ஷூமாக்கரே சொல்கிறார்:
“பொருளாதார வல்லுநர்களுக்குச் சுற்றுச்சூழலைக் கட்டாய பாடமாக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் சிறிதளவேனும் இயற்கை சமநிலை காப்பாற்றப்படும்.”
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்