பழனி மலைத் தொடர் பறவைகள் காப்பாற்றப்படுமா?

பழனி மலைத் தொடர் பறவைகள் காப்பாற்றப்படுமா?
Updated on
3 min read

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலைப் பகுதி மேற்கு மலைத் தொடரின் ஒரு பகுதியாகும். இந்த மலைத் தொடரைக் கீழ் மலைப்பகுதி மேல் மலைப்பகுதி என இரண்டாகப் பிரிக்கலாம். கொடைக்கானல் நகரமும் மேலும் சில மலைக் கிராமங்களும் மேல் மலைப் பகுதியில் உள்ளன. இது மழைக்காடுகளாலும் சோலைக்காடுகளாலும் ஆனது. கீழ் மலைப் பகுதி என்பது இலையுதிர் காடுகளால் ஆனது.

பழனி மலைத் தொடரில் 250க்கும் மேற்பட்ட பறவையினங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றில் சில மேற்கு மலைத் தொடருக்கே உரித்தான ஓரிடவாழ்விகள். இந்த பகுதிக்குக் குளிர் காலத்தில் வலசைப் பறவைகளும் வருகை தருகின்றன. அவை இங்கே கூடு கட்டி இனப்பெருக்கம் செய்வதில்லை. பழனி மலைத் தொடர் ஒரு சிறந்த பல்லுயிர்ச் சூழல் நிறைந்த பகுதி.

ஆனால், கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் இந்த பகுதி அதிக சிதைவைச் சந்தித்துவிட்டது. குறிப்பாக ஆங்கிலேயர் வருகைக்கு பிறகே இந்த மலைத் தொடரின் இயற்கையான சூழல் அமைப்பு அதிக மாற்றங்களைச் சந்திக்கத் தொடங்கியது. ஆனால் இந்திய விடுதலைக்குப் பிறகும் இந்த தவறுகள் சரி செய்யப்படாமல், ஆங்கிலேயர்கள் முன்னெடுத்த அதே பாதையில் தொடர்ந்ததால் இன்னும் அதிகமான அழிவுகள் ஏற்பட்டன.

சோலை, புல்வெளிகளின் அழிவு

மேல் மலைப் பகுதி என்பது இயற்கையில் சோலைக் காடுகளாலும் புல்வெளிக் காடுகளாலும் ஆனது. ஆனால் ஆங்கிலேயர்கள் புல்வெளிகளை வீண் நிலங்கள் (Wasteland) என்றே கருதினர். எனவே தொழிற்சாலைகளும், காகித உற்பத்தியும் பயனடையும் வகையில் சீகை மரங்களை அறிமுகப்படுத்தினர். மேலும் தைலம், பைன் மரங்கள் அறிமுகத்திற்குப் பிறகு பெரும்பாலான புல்வெளிப் பகுதிகள் இந்த அயல் மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இந்த சூழலியல் தொகுதி முற்றிலும் பாதிக்கப்பட்டது. சமீபத்திய ஆய்வுகளின்படி 85 சதவீத புல்வெளிப் பகுதிகள் அயல் மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்த பகுதியில் வாழ்ந்த ஓரிடவாழ்விகளே.

பழனி மலைத் தொடருக்கே உரித்தான பழனி சிரிப்பான் (Palani LaughingThrush), சோலைச்சிட்டு (White Bellied Sholakilli) போன்ற பறவைகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துவிட்டது. சோலை பூச்சிபிடிப்பான் (Nilgiri Flycatcher), சோலைப் புறா (Nilgiri Wood Pigeon), சோலைப் பூஞ்சிட்டு (Nilgiri Flowerpecker), கறுப்பு-ஆரஞ்சு பூச்சிபிடிப்பான் (Black and Orange Flycatcher) போன்ற மேற்குத் தொடர்ச்சி மலையின் ஓரிட வாழ்விகளை கொடைக்கானல் நகரை ஒட்டிய சில சோலைகளில் இப்போதும் பார்க்க முடியும். கொடைக்கானல், பேரிஜம், தமிழக-கேரள எல்லைகளுக்கு இடைப்பட்ட பகுதி பெரும்பாலும் அயல் மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டாலும் மீதமிருக்கும் சில சோலைகளில் இந்த ஓரிடவாழ்விகளைக் காண முடிகிறது.

அயல் மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் பார்ப்பதற்குப் பசுமையாகக் கட்சி தந்தாலும் அங்கே இது போன்ற பறவைகள் எதையும் பார்க்க முடியாது. மேல் மலைப் பகுதியில் பாம்பே சோலை, மரியன் சோலை, பாம்பார் சோலை, வட்டக்கனல் சோலை, புலி சோலை, கரடி சோலை என நிறையச் சோலைக் காடுகளைப் பார்க்க முடியும். சோலை என்ற பெயர் இருந்தாலும் இன்று அவை சோலைக் காடுகளுக்கு உரியச் சூழலுடன் பொருந்தாமல் இருக்கின்றன.

அதிகரிக்கும் நெருக்கடி

அயல் மரங்களை அப்புறப்படுத்தி அதற்கு மாற்றாகச் சோலை மரங்களையும், புல்வெளிப் பகுதிகளையும் மீட்டெடுக்கப் பழனி மலைப் பாதுகாப்புக் கழகமும் (Palni Hills Conservation Council), வட்டக்கனல் பாதுகாப்பு அறக்கட்டளையும் (Vattakanal Conservation Trust) 10 ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சி எடுத்துவருகின்றன. சோலை மரங்கள் மற்ற மரங்களைப் போல வேகமாக வளரும் இயல்புடையவை அல்ல. மிகவும் மெதுவாக வளரும் இந்த மரங்களைக் காட்டிலும் அயல் மரங்கள் வேகமாக வளரும். ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் எல்லா அயல் மரங்களை அப்புறப்படுத்துவதும் ஆபத்தாக முடியலாம். தற்போது அயல் மரங்களை அப்புறப்படுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், ஒரே நேரத்தில் அவற்றை அப்புறப் படுத்துவதால் நிலச் சரிவுகள் ஏற்படும் சாத்தியம் உள்ளது.

மேற்கு மலைத் தொடர் ஓரிடவாழ்வியான நீலகிரி நெட்டைக்காலி (Nilgiri Pipit) மிகவும் அரிதாகிவிட்டது. மீதமிருக்கும் புல்வெளிப் பகுதிகளும் சிறுசிறு தீவுகள்போல தொடர்பற்று இருப்பதால், இந்த பறவையினங்களின் வாழிட சூழல் மட்டுமில்லாமல் இனப்பெருக்கமும் பாதிப்படைகிறது. பழனி மலைத் தொடரில் உள்ள கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 1.6 கோடி. இவ்வளவு மக்களை இந்த மலைப்பகுதி தாங்குமா? ஒவ்வொரு வருடமும் கூடிக்கொண்டே போகும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் விடுதிகளின் எண்ணிக் கையும், உணவகங்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகின்றன. புதிய சுற்றுலாத் தலங்களும் உருவாக்கப்படுகின்றன.

இவ்வாறு செயற்கையாக உருவாக்கப்படும் சுற்றுலாத் தலங்களால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஏற்கனவே மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் கொடைக்கானல் கட்டுப்பாடின்றி அனுமதிக்கப்படும் வாகனங்களால் மேலும் பாதிப்படைகிறது. புதிய சாலைகளை அமைப்பதும், சாலைகளை விரிவுபடுத்துவதும் தொடர்ந்து நடக்கிறது. வாகனங்களில் அடிபட்டு காட்டுயிர்கள் பலியாவதும் தொடர்கிறது. சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்களால் தூக்கி எறியப்படும் ஞெகிழிக் குப்பை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

உயிர்க்கொல்லிகள்

சாலையோரங்களில் வளரும் தாவரங்களை அப்புறப்படுத்தக் களைக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது மிகப்பெரிய ஆபத்தாக முடியும். சாலைகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் பயன்படுத்தப்படும் இந்த களைக்கொல்லிகள் பறவையினங்களுக்கும் பூச்சியினங்களுக்கும் உயிர்க்கொல்லியாக அதிக வாய்ப்பிருக்கிறது. இவற்றை முற்றிலுமாக தடை செய்யவேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சாலை ஓரங்களில் எளிதாகப் பார்க்க முடிந்த பழனி சிரிப்பான்கள் தற்போது பார்ப்பதற்கு அரிதாக இருக்கின்றன.

அதேபோல் வேளாண் நிலங்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் பல்லுயிர்ச் சூழலைச் சிதைக்கின்றன. மழைப் பொழிவால் இந்த பூச்சிக்கொல்லிகள் ஓடைகளில், ஆறுகளில் கலந்து அணைகளுக்கு வந்து சேர்க்கின்றன.

சோலைக்காடுகளின் உயிர்நாடியாக விளங்கும் பெரிய இருவாச்சி (Great Hornbill) கூட இங்கே அற்றுப் போயிருக்கலாம். கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பறவை எங்கும் பதிவு செய்யப்படவில்லை. சமீப நாட்களாகக் கொடைக்கானலில் மயில்கள் காணப்படுவது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. மலைகளின் மேல் பகுதிக்கு மயில் இதற்கு முன் வந்ததில்லை என்கிறார்கள் உள்ளூர் மக்கள். அவை ஏன் வருகின்றன என்பதை ஆராய வேண்டும். மயில்களின் வருகை ஏற்கெனவே இங்கு வாழும் உயிரினங்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த மலைத் தொடரின் இயற்கையான சூழலியல் அமைப்பை மீட்டெடுப்பதன் மூலம் பறவையினங்களின் வாழிடச் சூழல் மேம்படுவதோடு சூழலியல் சமநிலையும் பாதுகாக்கப்படும்.

தமிழில் இயற்கையைப் பற்றி எழுத விருப்பம் உள்ளவர்கள் இப்படிவத்தைப் பூர்த்தி செய்யவும் - http://bit.ly/naturewriters

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in