ஆபத்தாகும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள்

சக்கர்மவுத் மீன்
சக்கர்மவுத் மீன்
Updated on
3 min read

டிசம்பர் 2022ல், கனடாவில் உள்ள மான்ட்ரியல் நகரில் 15வது உயிரினப் பன்மை உச்சி மாநாடு (COP-15-Convention on Biodiversity) நடைபெற்றது. அந்த மாநாட்டின் முடிவில் 23 இலக்குகள் பட்டியலிடப்பட்டன. இதில் அயல் உயிரினங்கள் - ஆக்கிரமிப்பு உயி ரினங்களை அழித்தல், கட்டுப்படுத்துதல் ஆறாவது இலக்காக உள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில் ஆக்கிரமிப்பு உயிரினங்கள் ஏற்படுத்திய அழிவு, பொருளாதாரப் பிரச்சினை, விவசாய உற்பத்தி பாதிப்பு போன்றவை மிகப் பரவலாக உலக அளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

அயல் இனங்கள்: அயல் உயிரினங்கள் என்பவை இயற்கை யாக அது காணப்படும் சூழலியல் தொகுதிகள் அல்லது நிலப்பரப்புகளுக்கு மாறாக, தொடர்பே இல்லாத ஓர் இடத்தில் காணப்படும் உயிர்கள். அந்த உயிரினங்கள் ஒரு புதிய நிலப்பரப்பை அடைவதற்கு இயற்கைச் சீற்றமோ, மனிதர்களோ காரணமாக விளங்குகின்றனர்.

மனிதர்கள் பன்னெடுங்காலமாகப் பல ஆயிரம் உயிரினங்களைப் புதிய பகுதிகளில் அறிமுகம் செய்துவந்துள்ளனர். பொதுவாக விவசாயம், அழகு உயிரினம், உணவு விலங்குகள், செல்லப் பிராணிகள் போன்ற வகைகளில் இந்த அயல் இனங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இன்று நாம் அதிக அளவில் பயன்படுத்தும் தக்காளி, முட்டைக்கோஸ், கேரட், உருளை, காலிபிளவர், பீட்ரூட் போன்றவை அறிமுகப் படுத்தப்பட்ட அயல் காய்கறிகளே. அறிமுகப் படுத்தப்படும் அனைத்து அயல் உயிரினங்களும் பெரும் தீங்கை இழைப்பதில்லை. 5 முதல் 20 சதவீதம் அயல் உயிரினங்களே ஆக்கிரமிப்பு இனங்களாக மாறுகின்றன.

1800களில் கொல்கத்தா தாவரவியல் பூங்காவில் அறிமுகப் படுத்தப்பட்ட ஆகாயத்தாமரை, இன்று இந்தியா முழுவதிலும் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து பெரும் சேதம் விளைவித்துவருகிறது. அது போலவே, சீமைக்கருவேலம், உண்ணிச்செடி, ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன்கள், டேங்க் கிளீனர் என்று அறியப்படும் சக்கர்மவுத் மீன்கள் போன்றவை ஆபத்தானவை எனலாம்.

ஆக்கிரமிப்பு இனங்கள்: ஆக்கிரமிப்பு இனங்கள் (Invasive alian species) பற்றிய புரிதல் 1958க்குப் பிறகே பரவலானது. சார்லஸ் எல்டன் என்ற ஆராய்ச்சியாளரின் ‘ஆக்கிரமிப்புத் தாவரம், விலங்கினங்களின் சூழலியல்’ என்ற கட்டுரையே இதற்கு முக்கியக் காரணம். சூழலியல், பல்லுயிர் மண்டலம், விவசாய உற்பத்தி, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை ஆக்கிரமிப்பு உயிரினங்கள் எவ்வாறு சிதைக்கின்றன என்பது அதன் பிறகே அறிவியல்பூர்வமாக உணரப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள 56.7 சதவீத உயிரினங்கள், நேரடியாகவோ மறைமுகமாகவோ அழிவதற்கு ஆக்கிரமிப்பு உயிரினங்கள் காரணமாக இருக்கின்றன.

1940 - 52 காலகட்டத்தில் தென் பசிபிக் கடல் பகுதியில் உள்ள குவாம் (Guam) தீவில், பபுவா நியூ கினி தீவுகளைப் பூர்விகமாகக் கொண்ட Boiga irregularis என்ற பழுப்பு நிறப் பாம்புகள் அமெரிக்க ராணுவத் தளவாட போக்குவரத்தின்போது தற்செயலாக அறிமுகப்படுத்தப்பட்டன.

அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தப் பாம்பு இனம் பல்கிப் பெருகி குவாம் தீவுகளில் உள்ள அபூர்வ பறவை இனங்களைத் தின்று தீர்த்தன. குவாம் தீவில் மட்டுமே காணப்படும் 10 பறவை இனங்கள் தற்போது முற்றிலும் அற்றுப்போய்விட்டன. இந்தப் பல்லுயிர் சிதைவிற்கு மூலகாரணம் இந்தப் பழுப்பு நிற மரப்பாம்புகள்தான்.

வாழிட அழிவுக்கு அடுத்து அதிக அளவு உயிரினங்கள் அழிந்துபோவதற்கு ஆக்கிரமிப்பு உயிரினங்கள் முக்கியக் காரணமாக உள்ளன. 2020ஆம் ஆண்டு வெளிவந்து ஓர் ஆராய்ச்சி குறிப்பின்படி, உலகின் 25 சதவீத தாவர இனங்கள், 35 சதவீத விலங்கினங்களின் அழிவிற்கு ஆக்கிரமிப்பு இனங்களே முதன்மைக் காரணம்.

விவசாயத்தைப் பொறுத்தவரை ஆக்கிரமிப்பு உயிரினங்கள் ஏற்படுத்தும் சேதம் என்பது மிகப்பெரிய அளவில் உள்ளது. 2016ஆம் ஆண்டின் கணக்குப்படி, ஒவ்வொரு வருடமும் சராசரியாக 54,000 கோடி இழப்பை ஆக்கிரமிப்பு உயிரினங்களால் உலகம் சந்திக்கிறது. உதாரணமாக, 2018ம் ஆண்டு தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பயிரிடப்பட்டு இருந்த சோளம் Fall armyworm என்று அறியப்படுகின்ற படைப்புழு தாக்குதலுக்கு உள்ளானது.

உண்ணிச் செடி
உண்ணிச் செடி

தற்போதைய நிலவரம்: உலகமயமாக்கல் - போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டு வரும் அதிவேக மாற்றம் காரணமாக, அயல் உயிரினங்கள் புதிய இடங்களுக்கு அதிவேகமாகப் பரவுகின்றன. குறிப்பாக, உலகின் ஆறு சதவீத நிலப்பரப்பு புதிய அயல் உயிரினங்கள் - ஆக்கிரமிப்பு உயிரினங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று ஆராய்ச்சி குறிப்புகள் கூறுகின்றன. வளரும் நாடுகளே இதனால் அதிக அளவு பாதிக்கப்படும். அனைத்திற்கும் மேலாகப் பருவநிலை மாற்றம் காரணமாக இதுவரை தீங்கு இழைக்காத பல அயல் உயிரினங்கள், ஆக்கிரமிப்பு இனங்களாக மாற நேரிடலாம்.

இந்திய நிலவரம்: ஆக்கிரமிப்பு இனங்கள் பற்றிய ஆராய்ச்சி - புரிதல் போதுமான அளவில் இல்லை. 2018ஆம் ஆண்டுதான் இந்தியாவில் இருக்கும் மொத்த ஆக்கிரமிப்பு இனங்கள் பற்றிய பட்டியல் தயாரிக்கப்பட்டது. கேரளம் கடந்த 7 ஆண்டுகளில் பல வகைகளில் இது சார்ந்த ஆராய்ச்சி பங்களிப்பைக் கொடுத்துவருகிறது. கேரள மாநில பல்லுயிர் வாரியம் சிறப்பான வகையில் செயல்பட்டுவருகிறது.

சென்னையில் உள்ள தேசிய உயிர்ப்பன்மை ஆணையத்தின் மூலம் ஆக்கிரமிப்பு இனங்கள் சார்ந்த பணிகளைச் செவ்வனே செய்யலாம். இந்த ஆணையம் அனைத்து மாநிலங்களில் உள்ள மாநில உயிர்ப்பன்மை வாரியத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதால் மாநில வாரியான ஆராய்ச்சிப் பதிவுகள், கட்டுரைகள், புதிய அந்நிய உயிரினங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொள்ள முடியும்.

தமிழ்நாடு செய்ய வேண்டியது: தமிழகத்தில் சீமைக்கருவேலம் மட்டு மல்லாமல் ஆகாயத்தாமரை, ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன்கள், டேங்க் கிளீனர், உண்ணிச் செடி, பார்த்தீனியம், சில கடல் பாசிகளும் பெரும் தாக்கத்தையும், பொருளாதாரச் சிக்கல் களையும் ஏற்படுத்தி வருகின்றன.

ஆனால், இதுவரையிலும் தமிழக அரசு, முக்கியமான அமைச்சகங்கள் இது பற்றி எந்தவித, சிறப்புக் கொள்கை முடிவுகளையும் எடுக்கவில்லை என்பது வருத்தமான விஷயம். இது சார்ந்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் தனிச்சிறப்பு வாய்ந்த மாநில உயிரின வகைகள் பலவற்றைத் தமிழகம் இழக்க நேரிடும்.

- ச.சாண்டில்யன் கட்டுரையாளர், ஆக்கிரமிப்பு இனங்கள் சார்ந்த ஆராய்ச்சியாளர்; ssandilyan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in