

பிரேசில் காடுகளில் பொன்னிற சிங்க டாமரின்களை (Golden Lion Tamarin) 2000இல் ஆய்வு செய்துகொண்டிருந்தபொழுது பார்த்த காட்சி ஒன்று தன் மனதை விட்டு இன்னும் அகலவில்லை என்று குரங்கியலாளர் (Primatologist) லிசா ராபபோர்ட் குறிப்பிட்டுள்ளார். அப்படியென்ன காட்சி அது?
சிறிய, அடர்ந்த பொன்னிற மென்மயிர் தோலுடைய ஒரு தாய்க் குரங்கு, உடைந்த மரக்கிளை ஒன்றில் உணவைத் தேடுகிறது. அது கொழுத்த வண்டாகவோ அல்லது சிலந்தியாகவோ கூட இருக்கலாம். இரை தட்டுப்பட்டதும், உடனே வெளியே இழுத்துப் போடாமல் மெல்லிய சன்னமான குரலில் ஒரு அழுகையை வெளிப்படுத்தியது.
அது ‘உணவுப் பகிர்தலுக்கான அழைப்பு’. இந்த அழைப்பைக் கேட்டதும் அதன் ஏழு மாதக் குட்டி அருகில் வந்ததும், வழக்கத்திற்கு மாறாக அந்த இடத்தைவிட்டு தாய்க்குரங்கு தள்ளி நின்றது. பிறகு குட்டிக்குரங்கே அந்தக் காய்ந்த மரக்கிளைக்குள் புகுந்து இரையான தவளையை எடுத்து வெளியே போட்டது.
பிறகு அதுவும் வெற்றி சமிக்ஞையை ஒலித்த பிறகே, இரையை உண்டது. பொதுவாகக் குட்டிகளின் மேல் தனிக்கவனம் செலுத்திப் பராமரிக்கின்ற பாலூட்டிகளில், குறிப்பாகக் குரங்கினத்தில் (Primate) சுயகற்றலை ஊக்குவித்த டாமரின்களின் இப்பண்பு தமக்கு வியப்பை அளித்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
லிசா - பழமையான, தட்டையான, நம்பிக்கை அடிப்படையிலான கற்பித்தல் சூழலிலிருந்து தாம் வந்ததை எண்ணிப் பார்த்து, டாமரின்களின் இந்த சூழலைக் கண்டு வியக்கிறார். வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்திற்குள் சிந்திக்கப் பழகாத டாமரின்களின் சூழலைக் கண்டு தாம் வியந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கற்றல் - கற்பித்தல்: நம்மில் பலரும் நம்புவதுபோல மரபணு ரீதியில் நமக்கு மிகவும் நெருக்கமான சிம்பன்சிகளிடம் கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகளுக்கான தரவுகள் ஏதும் உள்ளனவா எனப் பார்த்தால், இன்றுவரை அதிகம் பதிவுசெய்யப்படவில்லை. ஆனால், 2006இல் விலங்கு நடத்தையிய லாளர்கள், உற்றுநோக்கிக் கண்டறிந்த உறுதியான தரவுகளின் அடிப்படையில் நான்கு விலங்குகளிடம் கற்றல் - கற்பித்தல் பணி செவ்வனே நடைபெறுவதைப் பதிவுசெய்துள்ளனர்.
அவை, பாலைவனக் கீரி (Meerkats), தெற்கத்திய கறுப்புவெள்ளை சிலம்பன் (Southern Pied Babblers), Superb fairywren எனும் ஆஸ்திரேலியப் பறவை, பாறை எறும்புகள் (Rock ant).
இவற்றைப் போலவே கற்பித்தல் நிகழ்வு நடைபெறும் ஆர்காக்கள் (Orcas), யானைகள் முதல் கோழிகள், தேனீக்கள் வரை இன்னும் சில விலங்குகளும் எதிர்காலத்தில் அங்கீகரிக்கப் படலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இம்முறையிலான ஆய்வு என்பது இன்னும் இளமைப் பருவத்திலேயே இருப்பதால் எதிர்காலத்தில் இன்னும் பல திறப்புகளும் புதிய பரிமாணங்களும் நமக்குக் கிடைக்கக்கூடும்.
சில முறைகள்: பாறை எறும்புகளை எடுத்துக்கொள்வோமே. அவை பிற எறும்புகளைப் போலத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள பெரமோன் (Pheromone) வேதிப்பொருள்களைப் பயன்படுத்திக் கொள்வதில்லை. மாறாக, தாம் இரையைத் தேடிச் செல்லும் பாதையை ஒரு வரைபடமாக நினைவில் நிறுத்திக்கொள்கின்றன. இதன் மூலம் எறும்புக் குடியிருப்புக்கு, பல்வேறு பகுதிகளுக்கு, நான்கு திசைகளிலும் இரைக்கான வாய்ப்பும் வழித்தடமும் அவற்றுக்குக் கிடைத்துவிடுகிறது. இதைக் கற்பிக்கும் வேலையில் இக்கூட்டத்தின் சில சாரணிய எறும்புகள் (Scout Ants) ஈடுபடுகின்றன.
பாலைவனக் கீரி எனப்படும் மீர்கட்களில் வேறு மாதிரி கற்றல் உள்ளது. 40 விலங்குகள் வரை ஒரே சமூகமாக வசிக்கும் இயல்புடையவை இவை. மூன்று மாதம் வளர்ந்த மீர்கட்கள்தான் இங்கே பயிற்சியாளர்கள், பயிற்சி பெறுபவையோ பிறந்த குட்டிகள். என்ன வகையான பயிற்சி? கடும் நஞ்சு நிறைந்த தேள்கள்தான் இவற்றின் முதன்மை உணவு. தேள்களில் நஞ்சு நிறைந்த கொடுக்குகளைத் தனியே பிரித்தெடுத்து, ஊனை மட்டும் தனித்து உண்ணப் பயிற்றுவிக்கும் ஆபத்து நிறைந்த பயிற்சிக்கு என தனிப்பயிற்சி யாளர்களும், பிரத்யேக ஒலி அழைப்புகளும் உண்டு.
பரிணாமத் தேவை: காலாஹாரி (Kalahari) பாலைவனப் பறவையான கறுப்புவெள்ளைச் சிலம்பனின் (Pied - babblers) கற்பித்தல் செயல்பாடு இவை இரண்டிலிருந்தும் வேறுபட்டது. வளர்ந்தவை தமது கூட்டிலுள்ள குஞ்சுகளிடம் தொடர்புகொள்ள ‘Purr’ எனும் சத்தத்தைப் பயன்படுத்துகின்றன. இப்படி வளர்ந்தவை எழுப்பிய ஒலிக்கான எதிர்வினை, ஒலி வடிவில் கூட்டிலிருந்து கிடைத்தால்தான் இரையைக் கொடுக்கக் கூட்டிற்கு அருகிலேயே செல்லுமாம். அது போலவே குஞ்சுகள் தம் தேவையை வளர்ந்தவற்றிடம் தெரிவிக்கவும் இதே ஒலியைத்தான் பயன்படுத்துகின்றனவாம்.
இதைப் போலவே ‘காட்டு மனிதன்’ எனும் ஒராங்ஊத்தன்களின் தொடர்புகொள்ளும் முறையும், தம் குட்டிகளுக்கு இரையைப் பிடிக்கச் சொல்லித் தரும் சிவிங்கிப்புலி (cheetah), நாம் நினைப்பதைவிட அசாத்திய பண்புகளைக் கொண்டிருக்கும் வண்ணத்துப்பூச்சிகள், சிம்பன்சிகள் தமது இனக் குழுவினுள்ளே பின்பற்றுகிற சடங்குகள் - பழக்கவழக்கங்கள் என ஆசிரியர்களும் பெற்றோர்களும் அவதானித்து உள்வாங்கவேண்டிய நிறைய அம்சங்கள் விலங்குலகில் குவிந்து கிடக்கின்றன.
இப்படி விலங்குலக ஆசிரியர்கள் மூலம் நாம் அறிந்துகொள்வது என்ன?
கற்பிக்கும் திறன்கள் என்பவை அவற்றின் வாழிடம் சார்ந்தும், சுதந்திரமான சூழலில் அவை பரிணமித்து வளர்ந்து வந்ததன் அடிப்படை யிலேயே நிகழ்கிற ஒன்றாக இருக்கின்றது. ஓரினம் முற்றிலும் அற்றுப்போகாத வண்ணம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தேவையான முக்கியமான அறிதலையும், தகவலையும் கடத்துவதற்கு ஆசிரியர்கள் உதவுவதையும் நாம் புரிந்துகொள்ளலாம்.
- செ.கா; chekarthi.world@gmail.com