

சதுப்புநிலம்-நீர்நிலைகள் என்பவை இயற்கை நமக்குத் தந்திருக்கும் கொடை. கடலோர சதுப்புநிலம், உள்ளடங்கிய நிலப்பரப்புகளில் அமைந்துள்ள சதுப்புநிலம் என்று இவை இரு வகைப்படும். தெற்காசியாவிலேயே அதிகமான ராம்சர் தளங்கள் இந்தியாவில்தான் உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஈரநில வகைகளின் பரப்பளவு மதிப்பீடுகள், நீர்ப்பரவல், தாவரங்கள் நிலை ஆகியவை புவியியல் தகவல் அமைப்பு முறையைப் பயன்படுத்திக் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 24,684 சதுப்புநிலங்கள் வரைபடமாக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள ஈரநிலங்களின் மொத்தப் பரப்பளவு 9,02,534 ஹெக்டேர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் பரப்பில் 6.92 சதவீதம். திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமான சதுப்புநிலங்கள் இருக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் சதுப்புநிலங்கள் மிகவும் குறைவு.
தமிழ்நாட்டில் 14 சதுப்புநிலப் பகுதிகள்-நீர்நிலைகள் ராம்சர் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. சித்திரங்குடி பறவை சரணாலயம், சுசீந்திரம் தேரூர் ஈரநிலப்பகுதி, வடுவூர் பறவை சரணாலயம், கரிக்கிலி பறவை சரணாலயம், பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி, பிச்சாவரம் அலையாத்திக்காடு ஆகியவை புதிதாக ராம்சர் அங்கீகாரம் பெற்றிருக்கும் பகுதிகள்.
பிச்சாவரம் அலையாத்திக் காடு: தமிழ்நாட்டின் சிறப்புமிக்க அலையாத்திக் காடு இது. சிதம்பரம் அருகே பிச்சாவரம் அமைந்துள்ளது. இந்த சதுப்பு நிலம் வெள்ளாறு முகத்துவாரம், கொள்ளிடம் முகத்துவாரம் ஆகிய முக்கியமான இரண்டு கழிமுகங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. 1,100 ஹெக்டேர் பரப்பளவில் இது நீண்டுள்ளது.
இதன் மொத்தப் பரப்பில் 40 சதவீதம் நீர்வழித் தடங்களாலும் 50 சதவீதம் காடுகளாலும், மீதமுள்ளவை மண் அடுக்குகள், மணல், உப்பு மண் ஆகியவற்றாலும் சூழப்பட்டுள்ளன. ஏராளமான சிற்றோடைகளும், கால்வாய்களும் இங்கே கலக்கின்றன. இந்தியாவில் உள்ள அரிய அலை யாத்திக் காடுகளில் பிச்சாவரமும் ஒன்று. நீரின் உப்புத்தன்மையைத் தாங்கி வளரும் அலையாத்தித் தாவர வகைகளும் இங்கு உள்ளன. இங்கு வாழும் நண்டுகள், புழுக்கள், இறால்கள், சிறிய மீன்கள் போன்றவை இங்கு வாழும் 60க்கும் மேற்பட்ட பெரிய வகை மீன்களுக்கு இரையாகின்றன.
சென்னை ஈரநிலங்களின் இழப்பு: 1893இல் சென்னையில் 12.6 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலிருந்த ஏரிகள் நகரமயமாதலின் காரணமாக, 2017இல் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பகுதி குறைந்து, 3.2 ச.கி,மீ அளவுக்குக் குறுக்கப்பட்டுவிட்டன. 1893ஆம் ஆண்டின் சென்னை வரைபடத்தை வைத்து ஆராய்ந்தால், அப்போது சென்னையில் ஏறத்தாழ 60 பெரிய நீர்நிலைகள் இருந்திருக்கின்றன என்பது தெரியவருகிறது. இவற்றில் 28 நீர்நிலைகள் மட்டுமே 2017இல் எஞ்சியுள்ளன.
சென்னையில் 1960களுக்குப் பிறகு பெருத்த மாற்றங்கள் விரைவாக நடந்துள்ளன என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. தற்போது இருக்கும் சிஐடி நகர், தேனாம்பேட்டை தொடங்கி, அண்ணா மேம்பாலம் வரையிலும் அண்ணாசாலை நெடுகிலும் சென்று, நுங்கம்பாக்கம் வரை பரந்துபட்டதாகப் பிறை நிலவின் வடிவத்தில் ஒரு பெரிய நீர்ப்பரப்பு அப்போது இருந்திருக்கிறது.
மயிலாப்பூர் குளம், நுங்கம்பாக்கம் குளம், வியாசர்பாடி குளம், குளத்தூர் குளம், பெரம்பூர் குளம், ஸ்பர்டாங்க் குளம், மேடவாக்கம் குளம் போன்றவை மிகப் பெரிய நீர்நிலைகளாக அப்போது இருந்திருக்கின்றன. 1970களில் ஐஸ் ஹவுஸ் பகுதியிலும்கூட குளம் இருந்திருக்கிறது.
ரிப்பன் இல்லத்தின் பின்புறம் முன்பு இருந்த உயிரியல் பூங்காவின் உள்பகுதியில் மிகப்பெரிய நீர்ப்பரப்பு இருந்திருக்கிறது. கோடம்பாக்கம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையங்கள் குளங்களைத் தூர்த்தும், சென்ட்ரல் ரயில் நிலையத்தின் கணிசமான பகுதிகள் பக்கிங்ஹாம் கால்வாயின் மீதும் அமைக்கப்பட்டன.
கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகள் குளங்களின் மீது உருவானவையே. தலைநகரம் மட்டுமின்றி, மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் பேருந்து நிலை யங்கள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் போன்ற புதிய கட்டிடங்கள் நீர்நிலைகளின் மீதே உருவாக்கப்பட்டிருக்கின்றன.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம்: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சென்னை நகருக்கு அருகில் அமைந்துள்ளது. நன்னீரும், ஓரளவு உவர் நீரும் நிறைந்திருக்கும் இந்த ஈரநிலம் சென்னை, செங்கல்பட்டு மாவட்டப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் பாதுகாத்து நீர்த்தாங்கியாகச் செயல்படுகிறது. சுமார் 115 பறவை இனங்கள், 10 பாலூட்டி இனங்கள், 21 ஊர்வன இனங்கள், 10 நீர்நில வாழ்விகள், 46 வகை மீன்கள், ஒன்பது வகை மெல்லுடலிகள், ஐந்து வகை ஓட்டுடலிகள், ஏழு வகை வண்ணத்துப்பூச்சி இனங்கள் இங்கு உள்ளன.
ஆக்கிரமிப்பு, கழிவுநீர் சேர்தல், நகர்ப்புறக் கழிவுகள், வறட்சி ஆகியவற்றால் இந்தப் பகுதி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. ஒரு காலத்தில் 5,000 ஹெக்டேர் பரப்பளவுக்கு விரிந்திருந்த பள்ளிக் கரணை சதுப்புநிலப் பகுதி 40 வருடங்களில் 500 ஹெக்டேர் அளவுக்குச் சுருக்கப்பட்டுவிட்டது.
மறைந்துவிட்ட ஈரநிலங்கள்: உலகெங்கிலும் இருந்த ஈரநிலங்களில் 64 சதவீதம் நிலங்கள் இப்போது மறைந்துவிட்டன. உலகின் பல பகுதிகளில் மனிதக் குலத்திற்கு அவை அளித்து வந்த விலைமதிப்பற்ற பயன்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. இந்தியாவிலும் தொழில் பெருக்கம், நகரமயமாதல், ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு காரணங்களினால் 1991 –2001க்கு இடைப்பட்ட 10 ஆண்டுகளில் மட்டும் 38 சதவீதம் சதுப்புநிலப் பகுதிகள் இழக்கப்பட்டுள்ளன.
ஈரநிலங்களின் பயன்கள்: பெருமழை பொழியும்போது சதுப்புநிலங்கள் பெரும் நீர்உறிஞ்சியைப்போலச் செயல்பட்டு மழைநீரை உள்வாங்கி தேக்கிவைத்துக்கொள்கின்றன. தட்பவெப்பநிலையை ஒழுங்கு படுத்துதல், கார்பனை உறிஞ்சிக் கொள்ளுதல், நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதுகாத்தல், மண் அரி மானத்தைத் தடுத்தல், எண்ணற்ற தாவர - விலங்கின வகைகளின் வாழ்விடமாக இருத்தல், வெள்ளப் பெருக்கினைத் தடுத்தல் ஆகிய பல நன்மைகளை இவை வழங்குகின்றன.
நீர்ப்பாசனம், நீர் வழங்கல், மீன் வளம், காட்டு மரங்கள், பல்லுயிர்ச் சூழலைப் பேணுதல் போன்ற பயன்களையும் இவை நல்குகின்றன. குளம், குட்டை, ஏரி, நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றின் மூலம் வேளாண்மைக்கும், பிற தேவைகளுக்கும் நீர் கிடைக்கிறது.
ஈரநிலத் தாவரங்களில் இருப்பதைக் காட்டிலும் 200 மடங்கு அதிகமான கார்பன் ஈரநில நீர்ப்பரப்புகளில் கரைந்துள்ளன. இந்தியாவில் 61 விழுக்காட்டிற்கும் அதிகமான மீன் உற்பத்தி உள்நாட்டு நீர்நிலைகளிலிருந்துதான் கிடைக்கிறது. இவற்றை ஒன்றுக்கும் உதவாத பாழ்நிலம் என்று கருதிவிடக் கூடாது.
பருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் ஒரு மீட்டர் உயருமானால், இந்தியாவில் கடலோரங்களில் உள்ள ஈர நிலங்களில் 84 சதவீதம், உப்புநீர் ஈரநிலங்களில் 13 சதவீதம் அழிந்து போய்விடும் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. ஈரநிலங்களைப் பாதுகாப்பதும் கைவிடுவதும் நம் கையில்தான் இருக்கிறது.
- த.சித்தார்த்தன்; tsiddharth030@gmail.com