

‘பான் இந்தியா’ படங்கள் என்றால் இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியாகும் படம் என்கிறார்கள். இந்தியா முழுவதும் செல்லுபடியாகக் கூடிய வருமானவரி அட்டையையும் இதனால்தான் ‘பான் கார்டு’ என்கிறார்களோ?’ என்று வெள்ளந்தியாகக் கேட்டார் ஒரு வாசகர்.
உணவு சமைக்கப் பயன்படுத்தப்படும் கைப்பிடியைக் கொண்ட உலோகக் கொள்கலனைத்தான் ‘pan’ என்பார்கள். இதன் பன்மைச் சொல் pans. ஆனால், ‘pan’ என்பது வினைச் சொல்லாகப் பயன்படும்போது வேறு பொருள் கொடுக்கும். ’In the climax scene, the camera pans slowly across the bridge’ என்றால் கேமரா மெதுவாக பாலத்தினைக் சுற்றி வருகிறது என்று பொருள்.
வாசகர் குறிப்பிடும் ‘பான் இந்தியா’, ‘பான் அட்டை’ ஆகிய இரண்டிலும் உள்ள ’பான்’ என்பதை ‘PAN’ என்று பெரிய எழுத்துக்களில்தான் குறிப்பிட வேண்டும். காரணம் இரண்டுமே ‘acronyms’. அதாவது, சில வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தி உருவானவை. (‘United Nations’ என்பதை ‘UN’; ‘As soon as possible’ என்பதை ‘ASAP’ என்பது போல்).
‘பான் இந்தியா’ படங்கள் என்பதில் உள்ள ‘PAN’ என்பதன் விரிவாக்கம், ‘Presence Across Nation’. இந்தியா முழுவதும் (மொழித் தடையைத் தாண்டி) வெளியாகும் படங்கள். முன்பெல்லாம் ‘PAN India’ என்பது நாட்டின் பல பகுதிகளில் இயங்கும் நிறுவனங்களைக் குறிக்கவே பயன்பட்டது. வருமான வரி தொடர்பான ‘பான்’ (அட்டையின்) என்பதன் விரிவாக்கம் ‘Permanent Account Number’.
இப்போது செய்தி வாக்கியம். Key socio-political outfits in Ladakh reject Centre’s plan.
‘Key’ என்றால் திறவுகோல்; சாவி என்பது தெரியும். ‘Have you seen my room key anywhere?’
ஒரு செயல் நிறைவேற்றம் அல்லது ஒன்றைப் புரிந்துகொள்வதற்கு உதவியாக உள்ள ஒன்றையும் ‘key’ என்ற வார்த்தையின் மூலம் குறிப்பிடுவதுண்டு : துணை, வழிகாட்டி.
‘Adjective’ (அதாவது ’noun’ஐ விளக்கும் சொல்) எனும் விதத்தில் ‘key’ என்ற சொல் மிக முக்கியமான; இன்றியமையாத என்ற பொருளை அளிக்கிறது. ‘Tourism is a key industry in Sri Lanka’. தீர்வு என்ற பொருளிலும் இந்தச் சொல் வழங்கப்படுகிறது. ‘This is the key to Wren and Martin grammar book’ என்றால் அந்த இலக்கண நூலில் உள்ள கேள்விகளுக்கான பதில்கள் அடங்கிய தொகுப்பு என்று பொருள்.
‘Main’, ‘primary’, ‘predominant’, ‘foremost’ ஆகியவற்றை ‘key’ என்பதற்கான சம வார்த்தைகளாகக் கூறலாம்.
‘Outfit’ என்பது ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டில் இறங்கும்போதும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வின்போது அணியப்படும் உடையைக் குறிக்கிறது. ‘I’m going to wear this outfit for the Inaugural function’.
செய்தி வாக்கியம் உணர்த்துவது இதைத்தான். லடாக்கில் உள்ள முக்கியமான சமூக அரசியல் அமைப்புகள் மத்திய அரசின் திட்டத்தை நிராகரித்து விட்டன.
(தொடரும் - தொடரின் முழு வடிவத்தை ‘இந்து தமிழ்’ இணையதளத்தில் வாசிக்கலாம்.)
- ஜி.எஸ்.எஸ். aruncharanya@gmail.com