

இயற்கை விவசாயிகளின் ஆண்டு மலர் மதுரையில் செயல்பட்டு வரும் ‘வையை இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு', ‘வையை' என்கிற பெயரில் 2022ஆம் ஆண்டுக்கான இயற்கை விவசாயிகள் ஆண்டு மலரை வெளியிட்டிருக்கிறது.
இந்த மலரில் உள்ள கட்டுரைகள் இயற்கை விவசாயத்தைப் புரிந்துகொள்ள உதவுகின்றன: நாம் அறவே மறந்துவிட்ட மிளகி (அழகி), செம்மிளகி, வையகுண்டா, தில்லைநாயகம், அரைச்சம்பா, சீங்கினிக்கார், கல்லுருண்டை, புழுதிக்கார், பூங்கார், உவர்குண்டா, குறுவைக்களையான், வரப்புக்குடைஞ்சான் உள்ளிட்ட பலபாரம்பரிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்துகிறது.
குறிப்பாக, பாமயனின் ‘மண்வளம்’, காட்சனின் ‘பனை கூறும் நல்லுலகம்’, ஜே.ஜோஸ்லினின்’உணவே மருந்து, இயற்கை உணவே மருந்து!', ஏர் மகராசனின் ‘தமிழ் மரபின் நெல்லும் சொல்லும்' ஆகிய கட்டுரைகள் இயற்கை விவசாயம் குறித்த புரிதலை நம்மிடம் அதிகரிக்கின்றன; அது சார்ந்த அறிவை பெருக்குகின்றன. அ.சரவணகுமாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியாகியிருக்கும் இந்த மலரில் பெரி. கபிலன், இராமர் கமுதின் உள்ளிட்ட வர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
- ஹுசைன்