

‘மஞ்சள் முகப் பாறு’ எனப்படும் ‘Egyptian vulture’ கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டிப் பகுதியில் பாறைப் பொந்தில் பத்தாண்டுகளுக்கு முன்னர் வசித்துவந்த செய்தியை வன அலுவலர் ஆனந்த், ஓய்வுபெற்ற வனப் பாதுகாவலர் கணேசன் ஆகியோர் என்னிடம் பகிர்ந்துகொண்டனர்.
தமிழகத்தில் இல்லாத நிலைக்குச் சென்றுவிட்ட மஞ்சள் முகப் பாறு, தற்போதும் அங்கு வாழ்கிறதா என்று பார்த்துவரவேண்டும் என்ற ஆவல் சில ஆண்டுகளாகவே இருந்தது. கரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால், அங்கே செல்வதற்கான வாய்ப்பு தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. ஒரு வழியாக அது அண்மையில் நிறைவேறியது.
வன அலுவலர் கார்த்திகேயனின் வழி காட்டுதலுடன் வன மருத்துவர் பிரகாசு தலைமையில் சென்றோம். தேன் பருந்து (Honey buzzard), சிவப்பு வல்லூறு (Kestrel), பாறைக் கழுகு (Bonellis eagle), கருங்கழுகு (Black eagle), ஓணான் கொத்திக் கழுகு (Short-toed Snake Eagle) ஆகியனவற்றைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. காட்டை ஊடறுத்துச் சென்ற பெண்ணாகரம் ஒகனேக்கல் சாலையின் வழியில் நரி ஒன்று தாவி ஓடியது. பல்லாண்டு இடை வெளிக்குப் பின்னர் நரி ஒன்றைப் பார்த்தது மகிழ்ச்சியைத் தந்தது.
ஏமாற்றம்! - பெரியதொரு பாறைக்கு முன் எங்களது வாகனம் நின்றது. பாறையில் அமையப் பெற்ற பொந்தைக் காண்பித்து அங்குதான் மஞ்சள் முகப்பாறுகள் வாழ்ந்து வந்தன என உடன் வந்த வனக் காப்பாளர் கூறினார். தற்போது அவை அங்கு இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
வெண்மை நிறப்படிவாகத் தென்படும் பறவையின் எச்சம் கூடத் தென்படவில்லை. அந்த இடத்தைப் புறா (Blue Rock Pigeon) வசப் படுத்தியிருந்தது. சாலரி - குங்கிலி - Shorea roxburghii எனப்படும் மரக்கூட்டம் வழியாகப் பயணித்துப் பாறையின் மறுபக்கத்தை அடைந்தோம்.
உயரமான பாறையிலிருந்து நோக்கிய போது பெங்களூரு நகரம் காட்டை நெருக்கித் திமிறி எழுந்து ஆக்கிரமித்து வருவதை அவதானிக்க முடிந்தது. ஆங்காங்கே நகர வளர்ச்சிக்காக மலைகளும் தகர்க்கப்பட்டு வருவதையும் பார்க்க முடிந்தது. தலைக்கு மேலே வெண்தோள் பருந்து (Booted eagle) ஒன்று இரை தேடிக் காற்றில் சறுக்கியபடி பறந்து சென்றது. கூடவே நான்கு கரும்பருந்துகளும் (Black kite) வானில் வட்டமடித்தபடி பறந்தன. திரும்பி வரும்போது கொம்பன் ஆந்தை (Eurasian eagle owl) ஒன்றைப் பார்த்தபடிக் கீழே இறங்கி வந்தோம்.
கீழே முனீஸ்வரன் கோயிலில் வேலை மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது. கோயில் பூசாரி பசவராஜிடம் (54) உரையாடிய போது, நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை இங்கு மஞ்சள் முகப் பாறு இருந்தது என்றார். எனக்கு மூளையில் சிறு பொறி தட்டியது. இங்கு இரை ஏதும் இல்லாததால் தற்போது அவை பெங்களூரு அருகிலிருக்கும் ராமதேவர் பெட்டாவுக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என்று தோன்றியது.
அந்த இடத்தில் இவற்றின் உறவினர்கள் வசித்துவருவதை நான்கு ஆண்டுகளுக்கு முன் அங்கே சென்றிருந்தபோது பார்த்திருக்கிறேன். இங்கிருந்து வான்வழியாகச் சென்றால் அந்த இடம் 30 கி.மீ. தூரம்தான் இருக்கும். இந்தத் தொலைவு பாறுவைப் பொறுத்தவரைக் கூப்பிடு தூரம்தான்.
நிறுத்தப்பட்ட உயிர்சுழற்சி - இயற்கையாக இறக்கும் காட்டுயிரினங் கள் புதைக்கப்படுவதும் எரிக்கப்படுவதும் தொடர்கதையாக இருக்கும்வரை, பாறுக்களின் எண்ணிக்கை மீண்டு வரும் என்பது கானல் நீர்தான். உணவில்லாத இடத்தில் அவற்றுக்கு என்ன வேலை? அப்பகுதியில் யானை ஒன்று இறந்துவிட்ட செய்தியை அறிந்தோம்.
இறந்த யானையை அப்படியே விட்டுவிடுவதை உறுதிப்படுத்திக் கொண்டோம். அங்கே சென்று பார்த்தால் இறந்த சடலத்தை உண்ண ஏதாவது வருவதற்கு வாய்ப்பிருக்கலாம் என்ற நப்பாசை மேலிட்டது. அடுத்த நாள் அங்கே சென்று பார்க்க லாம் என முடிவெடுத்தோம்.
மறுநாள் அதிகாலையில் புறப்பட்டு யானையைக் கிடத்திய இடத்தை அறிந்து சென்று பார்த்த போது, சோகமே மிஞ்சியது. ஆம். எரியூட்டப்பட்டுப் பாதி எரிந்துகொண்டிருந்த சிதையைப் பார்த்து வருத்தம்தான் மேலிட்டது. யானையின் சடலத்தைப் பயன்படுத்தித் தனது இனத்தைப் பெருக்க நினைத்து ஈக்களும் புழுக்களும் அந்தத் தீயில் எரிந்து சாம்பலாயின.
ஒரு மிகப்பெரிய உயிர்ச் சுழற்சியைத் தீயிலிட்டுக் கருக்கிவிட்டனர். இந்த அவலப்போக்கை மாற்ற வனத்துறையும் மக்களும் முழு மனத்தோடு ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் உயிர்ச்சுழற்சியை மீட்க முடியும்.
யாரேனும் விஷம் வைத்துவிடுவார்கள், கெட்ட நாற்றமெடுக்கிறது, யானையின் எலும்பை யாராவது திருடிச் சென்று விடுவார்கள், நோய் பரவும் என்பன போன்ற காரணங்கள் தீவைத்து எரிப்பதை நியாயப்படுத்துவதற்காக அடுக்கப்படு கின்றன. இவற்றை மறுக்கவில்லை. ஆனால், முழுப் பூசணிக்காயையும் சோற்றில் மறைப்பதுபோல இறந்த யானையைப் புதைப்பதோ எரிப்பதோ வன்முறை என்றே தோன்றுகிறது.
செல்ல வேண்டிய தூரம்: அடுத்ததாக பிதிரெட்டி எனும் ஊரை நோக்கிச் சென்றோம். காரணம், அங்கு ஆசியாவிலேயே பெரியதொரு ஆலமரம் இருப்பதுதான். சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் வியாபித்திருந்தது அந்த ஆலமரம். தனது தோட்டத்தை அம்மரத்தின் வளர்ச்சிக்கு ஒதுக்கிய விவசாயியை மனதாரப் பாராட்ட வேண்டும். புள்ளி ஆந்தைகளும் (Spotted owlet), சாம்பல் இருவாச்சிப் பறவைகளும் (Indian grey hornbill) கண்ணில்பட்டன.
அருகிலிருந்த புளியமரத்தில் குரங்குக் கூட்டம் இருந்தது. அவற்றைப் பார்த்துக்கொண்டே நகர்கையில் சற்றுத் தொலைவில் ஒரு மின்கம்பத்தில் கருகி ஒரு குரங்கு செத்துத் தொங்கியபடி உயிரை விட்டிருந்தது. இதே போலக் காடுகளுக்குள் ஊடறுத்துச் செல்லும் மின்கம்பங்களில் மாட்டி எத்தனை எத்தனை விலங்குகள் இறக்குமோ.
தெரியாது. நம் கவனத்திற்கும் வராது. இருக்கின்ற மின்கம்பங்களை விலங்குகளின் மீது மின்சாரம் தாக்கா வண்ணம் வடிவமைக்க வேண்டும். ஆறறிவு படைத்த மனிதர்கள் செயல்பட வேண்டும். இதற்குப் பொருளாதாரக் கணக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது.
இந்த நினைப்பு மேலோங்கிட வானத்தைப் பார்த்தேன். அந்திமாலைப் பொழுது மயங்கிக்கொண்டிருந்தது. பறவைகள் தங்குமிடத்தை நோக்கித் திரும்பிக்கொண் டிருந்தன. வௌவால்கள் இரை தேடிப் பறக்க ஆரம்பித்திருந்தன. நிலவொளியில் அவற்றைப் பார்த்தபோது, உயிரினங்கள் பாதுகாப்பில் நாம் பயணிக்கவேண்டியது நீண்ட நெடுந்தொலைவு உள்ளது என்பதை அந்தக் காட்சி உணர்த்தியது.
- சு. பாரதிதாசன் கட்டுரையாளர், தமிழ்நாடு அரசு காட்டுயிர் வாரிய உறுப்பினர், arulagamindia@gmail.com