

சென்னை 46ஆவது புத்தகக் காட்சியை ஒட்டி பல்வேறு சுற்றுச்சூழல் புத்தகங்கள் வெளியாகியுள்ளன.
எழுத்தாளர் நக்கீரன், ‘தமிழ் ஒரு சூழலியல் மொழி’ (காடோடி பதிப்பகம்) எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். நெடிய வரலாறு கொண்ட தமிழ் மொழி எப்படி சுற்றுச்சூழல் அறிவுடனும் உணர்வுடனும் திகழ்கிறது என்பதை ஆதாரபூர்வமாக இந்நூலில் விளக்கியுள்ளார்.
பாறுக் கழுகு பாதுகாப்புக்காகப் பணிபுரிந்துவரும் சு. பாரதிதாசன் ‘பாறுக் கழுகுகளைத் தேடி’ (கலம்க்ரியா) எனும் விரிவான வண்ணப் புத்தகத்தை எழுதியுள்ளார். அதேபோல் பறவைகளைப் பற்றி பூ. இரத்தினசபாபதியின் ‘ஆந்தைகள் ஓர் அறிமுகம்’ (காக்கைக்கூடு), பறவையியலாளர் வ. கோகுலாவின் ‘காக்கைச் சிறகினிலே’ (கிழக்கு பதிப்பகம்), கிருபா நந்தினியின் ‘புள்ளினங்காள்’ (பாரதி புத்தகாலயம்) ஆகியவை வெளியாகியுள்ளன. கா.சு. வேலாயுதனின் ‘யானைகளின் வருகை பாகம் 3’ (கதை வட்டம்), சுரேஷ்வரனின் ‘காடின்றி அமையாது உலகு’ (நிழல் வெளியீடு) ஆகியவையும் உயிரினங்களைப் பற்றிய படைப்புகளே.
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் ஸ்டீவ் வின்டர், டேவிட் அட்டன்பரோ, ஸ்டீவ் இர்வின், ரோமுலஸ் விட்டேகர் ஆகியோரின் பேட்டிகளின் தொகுப்பான ‘இயற்கை அறிந்து செயல்’ (ஆதி பதிப்பகம்) அருண் நெடுஞ்செழியன் எழுதியது.
தேசிய அளவில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்துவந்த மறைந்த ஜே. பால்பாஸ்கரின் இரண்டு சுற்றுச்சூழல் புத்தகங்களைப் பரிசல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது: ‘தமிழக சுற்றுச்சூழல்: நேற்று, இன்று, நாளை’, ‘தண்ணீர் யாருக்குச் சொந்தம்’.
மொழிபெயர்ப்புகள்: மறைந்த எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் வெ. ஜீவானந்தத்தின் மொழிபெயர்ப்பில் பீட்டர் வோல்பெனின் ‘மரங்கள் பேசும் மௌன மொழி’ (காலச்சுவடு), அகிரா குரோசாவாவின் புகழ்பெற்ற திரைப்படமான டெர்சு உஸாலாவின் (விலாதிமிர் கே. ஆர்சென்யேவ், ஓசை பதிப்பகம்) எழுத்து வடிவத்தை அவை நாயகனும், ஜெய்தீப் ஹர்திகரின் எழுத்தில் ராம்ராவ்: ‘வாழ்வெனும் மரணம்- இந்திய விவசாயியின் நிலை நூலை’ (தடாகம்) பூங்குழலியும் மொழிபெயர்த்துள்ளனர்.
சுற்றுச்சூழல் புனைவு: ஆயிஷா இரா. நடராசன் எழுதிய ‘காலநிலை அகதிகள்’ (இளையோர் இலக்கியம், பாரதி புத்தகாலயம்), இராஜ மதிவாணன் எழுத்தில் யானைகள் குறித்த ‘பூமன்’ (அரும்புகள்) ஆகிய சுற்றுச்சூழல் புனைவு நூல்கள் வெளியாகியுள்ளன.