வாசல் கதவைத் தட்டும் பேராபத்து
நமக்கும் புவி வெப்பமடைதல் - பருவநிலை மாற்றத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அது ஏதோ வெளிநாட்டில் நடக்கும் பிரச்சினை, விஞ்ஞானிகள், உலகத் தலைவர்கள் கூடிப் பேசிக் கலைவதற்கான புதுச் சாக்குப்போக்கு என்ற தோற்றம் நம் நாட்டில் இருக்கிறது.
ஆனால், இந்த நூற்றாண்டில் மனிதக் குலம் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினை புவி வெப்பமடைதல். உலகிலுள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அனைத்தும் ஒரு மையப்புள்ளியில் குவிவதாக வைத்துக்கொண்டால், அது புவிவெப்பமடைதல் என்று சொல்லலாம். மற்றச் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் போலவே, புவி வெப்பமடைதலுக்கும் அடிப்படைக் காரணம் கட்டுமீறிய நுகர்வுமயமும் பொருட்களை வாங்கிக் குவிப்பதும்தான். ஒவ்வொரு நவீன பொருளின் உற்பத்தியிலும் சூழலையும் உலகையும் சீர்குலைக்கும் ஏதோ ஒரு அம்சம் முகமூடி போட்டு உட்கார்ந்திருக்கிறது.
பருவநிலை மாற்றம் ஏற்கெனவே பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது. அதன் நேரடித் தொடர்பைச் சொல்லும் உடனடி அறிவியல் நிரூபணங்கள் இப்போதைக்கு இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். தமிழில் புவி வெப்பமடைதல் குறித்து விரல்விட்டு எண்ணக் கூடிய புத்தகங்களே வந்துள்ளன. அவை பெரிதும் அறிமுகப் புத்தகங்கள். தமிழ் ஊடகங்களிலும் புவி வெப்பமடைதல் குறித்துத் தொடர்ச்சியான செய்திகளோ, விவாதமோ இல்லை.
தமிழகக் கவனம்
இந்தப் பின்னணியில்தான் மூத்த பத்திரிகையாளர் பொன்.தனசேகரன் எழுதியுள்ள 'நிகழ்காலம் - தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றம்' என்ற நூல் வந்துள்ளது.
தமிழகத்தில் புவி வெப்பமடைதல் எந்த மாதிரியான பாதிப்புகளை நிகழ்த்த ஆரம்பித்திருக்கிறது என்பதைப் பற்றி விரிவாகவும், எதிர்காலத்தில் அது எப்படிப்பட்ட வடிவங்களை எடுக்கக்கூடும் என்பதைக் குறிப்பாகவும் இந்த நூல் உணர்த்துகிறது.
ஒவ்வொரு கட்டுரையையும் வித்தியாசமான, சுவாரசியமான ஒரு விஷயத்தைக் கொண்டு தொடங்கியிருப்பதன் மூலம் வாசகரை எளிதாகத் தன் கட்டுரைக்குள் இழுத்துவிடுகிறார். அலையாத்திக் காடுகள் பற்றி அண்ணா எழுதியுள்ள குறிப்பு இதற்குச் சிறந்த உதாரணம்.
10 கட்டுரைகள். ஒவ்வொன்றும் ஒரு பிரச்சினையை எடுத்துக்கொண்டு அலசுகிறது. வெப்பநிலை உயர்வால் குதிப்பு மீன் குறைவதால் மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்பும், தேனீக்கள் குறைவதால் பழங்குடிகளின் தேன் சேகரிப்பில் ஏற்படும் பாதிப்பும் எளிய மக்களின் வாழ்க்கையில் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தப்போகும் பாதிப்பை அழுத்தமாக உணர்த்துகின்றன. பருவமழை தப்பியதால் ஏற்படும் வறட்சி தரும் பாதிப்புகளைப் பேசும் அதேநேரம், வறட்சியிலும் பேரழிவிலும் தாக்குப்பிடிக்கும் பாரம்பரிய நெற்பயிர்கள் என மாற்று வழியையும் ஆசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார். விவசாயிகள் தற்கொலை, கடல் நீர்மட்டம் உயர்வதால் தமிழகம் சந்திக்கப் போகும் பொருளாதார பாதிப்புகள் பற்றிய இரண்டு கட்டுரைகளும் சூழலியலுக்கும் பொருளாதாரத்துக்கும் உள்ள நேரடித் தொடர்பைச் சொல்கின்றன. நம் பாரம்பரியச் சூழலியல் பாதுகாப்புக்கு எடுத்துக்காட்டான கோவில் காடுகள், கடல் வளத்தைப் பெருக்கும் பவழத் திட்டுகள் ஆகியவை அழிந்து வருவதன் தீவிரத்தைக் கவனப்படுத்தியுள்ளார். புவி வெப்பமடைதலால் பெருகி வரும் தொற்றுநோய்களைப் பரப்பும் கொசுக்களைப் பற்றி மற்றொரு கட்டுரை எச்சரிக்கிறது.
எளிமையும் நேர்த்தியும்
அறிவியல் ஆதாரம் இல்லாமல், கணிப்புகளின் அடிப்படையில் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்படலாம். ஆனால், புவி வெப்பமடைதல்-பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி மதிப்பிட உருவாக்கப்பட்ட 'பருவநிலை மாற்றம் பற்றி ஆராயும் பன்னாட்டு அரசுக் குழு'வில் (The Intergovernmental Panel on Climate Change - IPCC) உள்ள ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளும்கூட, இன்றைய சூழ்நிலையில் எந்தப் பாதிப்புக்கும் ஒற்றைக் காரணத்தை அறுதியிட்டுக் கூற முடியாத நிலையிலேயே இருக்கிறார்கள். அதேநேரம், பருவநிலை மாற்றத்துக்கான அடிப்படைக் காரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டன. இயற்கையில் நிகழும் பிறழ்வுகளுடன் நேரடியாகப் பொருத்திக் கூறும் அளவுக்கு, அந்தக் காரணங்கள் தீர்மானமான கணிதச் சூத்திரம் போல் இல்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
புவி வெப்பமடைதலின் வரலாற்று-அறிவியல் பின்னணியை விளக்கும் பிற்சேர்க்கைகளும், கலைச்சொல் விளக்கமும் புதிய துறை பற்றிய வாசகரின் பயத்தை விலக்கி வைக்கும்.
கட்டுரைகளுக்கு இடையே வரும் கவிதைகள் நம் குற்றஉணர்வைத் தூண்டி மனதைக் குடைகின்றன. ஓவியர் மணிவண்ணனின் சிந்தனையைக் கிளறும் முகப்பு ஓவியம் தொடங்கி, நூலின் வடிவமைப்பும் நேர்த்தியும் வாசிப்பை மேம்படுத்துகின்றன.
சாதாரண வாசகனை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ள இந்த நூல், அதற்கான அனைத்து அம்சங்களையும் சிறந்த முறையில் உள்ளடக்கி இருக்கிறது.
நிகழ்காலம் - தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றம், பொன்.தனசேகரன், கார்த்திலியா வெளியீடு, தொடர்புக்கு: 044 -43042021.
புவி வெப்பமயமாதல் அறிமுகக் கையேடு
புவி வெப்பமயமாதல் பிரச்சினை குறித்து விளக்கும் 'புவி வெப்பமயமாதல் - தொடக்கநிலையினருக்கு' என்ற கிராஃபிக் புத்தகம் முன்னணி விஞ்ஞானி டீன் குட்வின் எழுதியது. புவி வெப்பமயமாதல் என்ற சுற்றுச்சூழல் பிரச்சினையின் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன, இந்தப் பிரச்சினைக்குத் தனிநபர்களான நாம் என்ன செய்ய முடியும் என்ற இரண்டு அடிப்படைகளை இந்தப் புத்தகம் விளக்குகிறது. புவி வெப்பமயமாதலைக் குறைக்க ஆசிரியர் முன்வைக்கும் 50 எளிய செயல்பாடுகள் நாம் அனைவரும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவை. சுற்றுச்சூழல்-அறிவியல் பிரச்சினைகள் என்றால் புரியாது என்ற பயத்தை ஜோ லீயின் கோட்டோவியங்கள் நிறைந்த இந்தப் புத்தகம் சற்று விலக்கி வைக்கிறது. இந்த நூலைத் தமிழில் தந்திருப்பவர் பேராசிரியர் க.பூரணச்சந்திரன், அடையாளம் வெளியீடு. தொடர்புக்கு: 04332-273444
