

யானைகளும் அரசர்களும்
சுற்றுச்சூழல் வரலாறு - தாமஸ் ஆர்.டிரவுட்மன் (தமிழில் - ப.ஜெகநாதன், சு.தியோடர் பாஸ்கரன்); காலச்சுவடு பதிப்பகம், 04652 – 278525.
இந்தியாவில் உள்ள யானை களின் உருவ அமைப்பு, குணாதிசயங்கள், பண்புகள் போன்றவற்றை இந்நூலில் தாமஸ் ஆர்.டிரவுட்மன் விவரித் துள்ளார். யானைகள் போருக்கு எவ்வாறு பயன்படுத்தப்பட்டன, பயிற்சிகள் உள்ளிட்ட விவரங்களும் இதில் விரிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளன. காடுகள் அழிப்பால் அந்த உயிரும் அழிந்தொழிந்ததைப் பற்றியும் நூலில் பேசப் பட்டுள்ளது. யானைகளின் ஈராயிரம் ஆண்டுக் கால பயணத் தடமாக இந்நூல் அமைந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டப் பறவைகள் l தி பாரஸ்ட் வே ட்ரஸ்ட், vinodsachin@gmail.com
2018இல் ‘Birds of Tiruvanna malai' என்னும் பெயரில் ஒரு களக் கையேட்டினை ‘தி பாரஸ்ட் வே ட்ரஸ்ட்’ அமைப்பினர் வெளி யிட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட அளவில் தென்படும் 254 வகையான பறவைகளைப் பற்றிய விரிவான குறிப்புகளுடன் இருந்த அந்தக் கையேட்டின் தமிழாக்கம் இது. அழகிய படங்களுடனும் ஓவியங்களுடனும் வெளியாகியிருக்கும் இந்தத் தமிழ்க் கையேட்டில் புதிதாகச் சில பறவைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
விலங்குகளும் பாலினமும்
நாராயணி சுப்ரமணியன், Her Stories, 7550098666
பால் பண்புகள், பாலினம் ஆகிய இரண்டுக்கும் இடையிலான நுணுக்கமான வேறுபாடுகள், மனித சமூகத்தில் இவை எப்படிச் சமூக அமைப்பு சுரண்டல்களைக் கட்டமைக்கின்றன என்பதைப் பல்வேறு ஆய்வாளர்கள் விளக்கிக் கூறியுள்ளனர். எனினும் ‘ஆண் என்பவன் இயல்பாகவே...', ‘பெண்களின் உடல் அமைப்பிலேயே...' போன்ற கருத்தாக்கங்களை உருவாக்கிக்கொள்கிறோம். 'விலங்குகளும் பாலினமும்' எனும் இந்த நூலில் நாராயணி சுப்ரமணியன் அவற்றைத் தெளிவாக விளக்கிக் கூறி, ஆழமான சிந்தனையை நம்முள் அற்புதமாக விதைத்துச் செல்கிறார்.
பசுமை கவிதைகளில் ஒரு சூழலியல் பயணம்
க. அம்சபிரியா, இருவாச்சி வெளியீடு, 9444640986
இயற்கை வளங்களின் சுரண்டலையும் அழிப்பையும் உணர்ச்சிபூர்வமாகப் பதிவுசெய் யும் சூழலியல் சார்ந்த 100 கவிதைகள் குறித்து ஆசிரியர் எழுதியிருக்கும் கட்டுரை களின் தொகுப்பே இந்த நூல். காலநிலை மாற்றப் பாதிப்புகள், இயற்கையை அழிவின் விளிம்புக்குத் தள்ளும் தற்போதைய சூழலில், இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆகுபா
மருத்துவர் வி.விக்ரமக்குமார், காக்கைக்கூடு வெளியீடு, 90436 05144,
ஐந்தாண்டு பயணங்களில் ஆந்தைகள், குரங்குகள், பாம்புகளோடு ஆசிரியருக்குக் கிடைத்த அனுபவக் கோவையே இந்நூல். காடுகளில் மகிழ்ந்து திரிந்த போது எதிர்பாராமல் தென்பட்ட ஆ.கு.பா.களைப் படம்பிடித்த, பின் தொடர்ந்த அனுபவங்களை இந்நூலில் பகிர்வதன் மூலம் விக்ரம்குமார் நம்மையும் அந்தப் பயணத்தில் பங்கேற்கச் செய்கிறார்.
தமிழகம் சமூகப் பொருளாதார கட்டமைப்பு மாற்றமும் சுற்றுச்சூழலும்
ப. கு. ராஜன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்., 044-26251968
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி வெறுமனே வளர்ச்சியாக இல்லாமல் மேம்பாடு, முன்னேற்றம் என்பதாகவும் உள்ளது. தமிழ்நாட்டின் கிணிக் குணகம் (Gini Coefficient) ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பது இதற்குச் சான்று. முன்னேற்றத்தையும் மேம்பாட்டையும் பாதிக்காத விதமாகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வது என்பதை மார்க்சிய நோக்கில் இச்சிறுநூல் முன்மொழிகிறது.
இப்படிக்கு மரம்
கோவை சதாசிவம், குறிஞ்சி பதிப்பகம், +91 99650 75221
சூழல் சீர்கேடுகளால் ஆயிரத்திற்கும் மேலான தாவரங்களின் பூக்கள் தங்களின் புற ஊதா நிறமிகளை மாற்றிக் கொள்கின்றன. கலப்பின தாவர வளர்ச்சியால் பூக்கள் இயல்பான வாசனையைச் சிறிது, சிறிதாக இழந்துவிட்டன. காற்று மாசால் பூக்களின் மணம் பரவும் தூரம் வெகுவாகக் குறைந்துவிட்டது. கடந்த பதினைந்து ஆண்டுகளாக மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் பல பூச்சியினங்கள் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளன. இந்தச் சூழலில், மரம் செய்ய விரும்பும் மனிதர்களுக்குக் கோவை சதாசிவம் எழுதியிருக்கும் புத்தகம் இது.
பண்பாடு முதல் காட்டுயிர் வரை
பேரா.ஆ.சிவசுப்ரமணியன் (ஆசிரியர்), ஏ.சண்முகானந்தம் (தொகுப்பாசிரியர்), உயிர் பதிப்பகம், +91 98403 64783
பேரா.ஆ.சிவசுப்ரமணியன், மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழ்ச் சமூகம், பண்பாடு ஆகியவை சார்ந்து ஆய்வு மேற்கொண்டு, அத்துறைகளில் புது வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருப்பவர். இந்தப் போக்கு இந்நூலிலும் தொடர் கிறது. சமூகவியல் ஆய்வாளர்களும் முற்போக்காளர்களும் சுற்றுச்சூழல் குறித்து ஆராய வேண்டிய அவசியம் உள்ளது என்பதை இந்நூல் அழுத்தமாகப் பதிவு செய்கிறது,
பூமி இழந்திடேல்
சூழலியல் - காலநிலைக் கட்டுரைகள், தொகுப்பு: சு. அருண் பிரசாத், கனலி, தொடர்புக்கு: 9080043026
‘சூழலியல்-காலநிலை’ சார்ந்த கட்டுரைகளை சு. அருண் பிரசாத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார். நாராயணி சுப்ரமணியன், த.வி. வெங்கடேஸ்வரன், ராஜன் குறை, ஆதிரன், கணேஷ் வெங்கட்ராமன், சுப சுந்தரம், வறீதையா கான்ஸ்தந்தின், தங்க ஜெயராமன், ரஞ்சித் குமார், பாலசுப்ரமணியன் பொன்ராஜ், இ. ஹேமபிரபா, கார்த்திக் வேலு உள்ளிட்டோர் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் உடனான நேர்காணல், கிரெட்டா துன்பர்க் உரை உள்பட முக்கியமான மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நேர்காணல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
திணைவெளி
வறீதையா கான்ஸ்தந்தின், புலம் வெளியீடு, +919790752332
நீண்ட நெடிய ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. 1990களில் தொடங்கி கடல், மீன்வளம், கடல்சார் மக்கள் குறித்து ஆய்விலும் எழுத்திலும் தொடர்ந்து தீவிரமாய் இயங்கி வரும் முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின், ‘கடலம்மா பேசுறங் கண்ணு’, ‘நெய்தல் சுவடுகள்’, ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை’, ‘மூதாய் மரம்’உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவரின் சமீபத்திய நூலான ’திணை வெளி’ சுற்றுச்சூழல், பண்பாடு சார்ந்த தமிழ் நூல்களில் முக்கியமானது.
| பொங்கல் ‘பறவை கணக்கெடுப்பு 2023’ - நீங்களும் பங்கேற்கலாம் தமிழகப் பறவைகளின் பரவல், தற்போதைய நிலை, அவை வாழுமிடங்களின் நிலை போன்றவற்றைக் கண்காணிக்கும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 15 முதல் 18 வரை பொங்கல் விடுமுறை நாள்களில் ‘பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு’ நடைபெறுகிறது. இந்த ஆண்டும் அதே நாள்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. உங்கள் வீட்டைச் சுற்றியோ, அருகிலுள்ள பூங்காவிலோ, பறவைகள் அதிகம் கூடக்கூடிய இடங்களிலோ குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்குப் பறவைகளைப் பார்த்து, அடையாளம் கண்டு, அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பறவைப் பட்டியலைத் தயார் செய்ய வேண்டும். பிறகு அந்தப் பட்டியலை www.ebird.org/indiaஇல் பதிவேற்ற வேண்டும். மேலும் விவரங்களுக்கு: shorturl.at/doW14 |