

‘கடைசி மரமும் வெட்டப்பட்டு, கடைசி ஆறும் நஞ்சாகி, கடைசி மீனும் பிடிக்கப்பட்ட பிறகே பணத்தைச் சாப்பிட முடியாது என்பது தெரியும்’ செவ்விந்தியப் பழங்குடிகளின் இம்மொழி இன்று புகழ்பெற்றது. இதன் விளைவாக, நம் மனிதரின் பேராசைக்குப் புவிக்கோளம் பலியாகி வருகிறது என்று சொல்கிறோம்.
காற்று மாசாவதற்கு யார் காரணம்? மனிதர். நீர் நாசமானதற்கு யார் காரணம்? மனிதர். நிலம் வளமிழந்ததற்கு யார் காரணம்? மனிதர். காடு அழிந்ததற்கு யார் காரணம்? மனிதர். உயிரினங்கள் அழிவதற்கு யார் காரணம்? மனிதர். புவி வெப்பமாவதற்கு யார் காரணம்? மனிதர். காலநிலை மாற்றத்துக்கு யார் காரணம்? மனிதர். சுருக்கமாக, உலகம் அழிவதற்கு யார் காரணம்? மனிதரே. எல்லாம் சரி, அவர் எந்த மனிதர்?
மனிதரின் பொறுப்பு
உலகம் தோற்றம் தொடங்கி ஊழிக்காலங்கள் அறிவியல் முறையில் கணக்கிடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 12 ஆயிரம் ஆண்டுகளாக நிலவிய காலத்துக்கு ‘ஹோலோசீன்’ காலம் என்று பெயர். நாம் அதன் எல்லையைக் கடந்திருக்கிறோம். புதிய காலத்துக்கு ‘ஆந்த்ரபோசீன்’ காலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது ‘மானுடக்காலம்’ எனலாம்.
இனி புவிக்கோளின் இயல்பைத் தீர்மானிக்க இருப்பது மனிதர்களே. எனவே, புவியைக் காப்பது மனிதரின் பொறுப்பு என்கிறோம். அதற்கு மனிதர் தொடர்ந்து செய்ய வேண்டியதைப் பட்டியலிடுகிறோம். மரக்கன்றுகளை நடவேண்டும். குண்டு பல்புகளை எல்.இ.டி பல்புகளாக மாற்றவேண்டும். குழாயில் தண்ணீர் சொட்டினால் உடனே நிறுத்தவேண்டும்.
மிதிவண்டி ஓட்டவேண்டும். குளம் குட்டைகளில் ஞெகிழி கழிவுகளைப் பொறுக்க வேண்டும். ஆண்டுக்கு பத்து நிமிடம் இரவில் மின் பயன்பாட்டை நிறுத்தவேண்டும். இவ்வாறு புவியைக் காப்பாற்றும் பல்வேறு யோசனைகள் வந்து கொண்டிருக்கின்றன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சூழலியலைப் பற்றிப் பேசினால் கேட்பதற்கு நான்கு பேர்கள்கூட இருக்க மாட்டார்கள். அப்படிப் பேசுபவரைப் பார்த்தால் ‘பாவம்! யார் பெற்ற பிள்ளையோ தனியாக நின்று புலம்புகிறது’ என்று பரிதாபப்படுவர். இன்று நிலைமை எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், சரியான திசையில் முன்னேறியுள்ளதா என்பதே கேள்வி.
எது சேவை?
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் ஒருவர் வெளியே வந்ததும் ‘நான் சூழலியலுக்குச் சேவை செய்துவிட்டேன்’ என்கிறார். அவர் ஏடிஎம் அறைக்குள் மரக்கன்று எதையாவது நட்டுவிட்டாரா என்று எட்டிப்பார்த்தால் ஒன்றும் இருக்காது. என்ன சேவை செய்தீர் எனக் கேட்டால் பணம் எடுத்தவுடன் இயந்திரம் ரசீது வேண்டுமா எனக் கேட்டதாம். இவர் வேண்டாம் என மறுத்துவிட்டாராம். அதனால் சூழலுக்குச் சேவை செய்துவிட்டாராம். நான்கு அங்குல காகிதத்தை அவர் சேமித்ததை ஒப்புக்கொள்வோம்.
ஆனால், அதே அறைக்குள் ஓர் இயந்திரம், நான்கு விளக்குகள், ஒரு ஏசி இயந்திரம் இயங்குகிறதே, அதை என்ன செய்ய? காகிதத்தின் மூலப்பொருளான மரம்கூட புதுப்பிக்கத்தக்க ஆற்றல். ஆனால், மின்சாரம்? அது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இல்லையே? எவ்வளவு புதைப்படிவ எரிபொருள் செலவாகிறது? சேமிப்பு என்றால் அனைத்தும் சேமிப்புதானே? எதற்குச் சொல்கிறோம் என்றால், நாம் தவறான திசையில் வழிநடத்தப்படுகிறோம் அல்லது நமது கவனம் திட்டமிட்டுத் திசைமாற்றப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டத்தான். இதுவொரு மறைமுகமான சதித்திட்டம்.
அந்த மனிதர் யார்?
இந்த ஆந்த்ரபோசீன் காலத்தில் எல்லா மனிதர்களும் சமமாக இருக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது ஐ.நா. வளர்ச்சி திட்ட (UNDP) அறிக்கை (2020). எதிர்வரும் 2100ஆம் ஆண்டுக்குள் ஏழை நாடுகள் ஐம்பதிலிருந்து நூறு நாட்கள் வரை கூடுதலான மோசமான பருவ நிகழ்வுகளைச் சந்திக்க இருக்கின்றன.
இவை புயல், மழை, வறட்சி என்று எந்த வடிவத்திலும் நிகழலாம். அதே சமயம் பணக்கார நாடுகள் குறைவான பருவக் கெடு நிகழ்வுகளையே சந்திக்குமாம். இது தெளிவாகத் தெரிவிப்பது எதையெனில், இனி ஹோமோ சேப்பியன் இனம் என்பது ஏழை, பணக்காரர் என இரு பிரிவுகளாக விளங்கப் போகிறது என்பதையே.
இயற்கை வளத்துய்ப்பே வளர்ச்சி எனில் அவ்வளர்ச்சி ஏன் அனைத்து மக்களுக்கும் சமமாக அமைவதில்லை? சரி, புவிக்கோளம் மனிதரால் பாதிக்கப்படுகிறது என்பதை ஒத்துக்கொள்வோம். அதற்காக, மனிதர் ஏதாவது செய்தே தீரவேண்டும் என்பதையும் ஒத்துக்கொள்வோம். ஆனால், கேள்வி என்னவெனில், மனிதர், மனிதர் என்று கதைக்கிறோமே அந்த மனிதர் யார்? அவர், பொது மனிதரா? இல்லை பெருநிறுவன மனிதரா? அதாவது அவர் ‘காமன்’ மனிதரா? அல்லது ‘கார்ப்பரேட்’ மனிதரா?\
- நக்கீரன் கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர், vee.nakkeeran@gmail.com