

உலக அளவில் பிரபலமான 'சயின்ஸ்' எனும் அறிவியல் இதழில், கடல் மாசுபாடு குறித்து முதன்முறையாக ஒரு ஆய்வுக் கட்டுரை சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. அதில், கடலை மாசுபடுத்தும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது சீனா. கடலோரத்தில் வசிக்கும் மக்களால் வருடத்துக்கு 80 லட்சம் டன் நெகிழிக் கழிவு கடலில் கொட்டப்படுகிறது என்று சொல்லிப் பதறவைக்கிறது அந்த ஆய்வு. சரி இந்தப் பட்டியலில், இந்தியாவின் இடம் என்ன தெரியுமா? ரொம்ப நல்ல இடத்தில் எல்லாம் இல்லை. 12-வது இடம்தான்!
பறவை வளர்க்கும் காபித் தோட்டம்
உலகிலேயே பறவைகளுக்கு இணக்கமான காபித் தோட்டங்கள் எத்தியோப்பியா நாட்டில்தான் இருக்கின்றனவாம். ‘பயலாஜிகல் கன்சர்வேஷன்' எனும் சூழலியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டிருக்கும் ஆய்வு ஒன்றின் முடிவின்படி, இந்த நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் காபித் தோட்டங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றனவாம். மரங்கள் அடர்ந்த அந்தத் தோட்டங்களில் பறவைகளுக்கு இணக்கமான சூழல் நிலவுவதால், இங்குப் பல்வேறு விதமான பறவைகளைக் காண முடிகிறது.
எனவே, இந்தத் தோட்டங்களைப் பறவை உயிரினப் பன்மை கொண்ட இடமாகக் கருதலாம் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. உலகம் முழுக்க மரங்கள் வெட்டப்பட்டு நேரடியாகச் சூரிய ஒளியின் கீழ் தற்போது காபி பயிர் விளைவிக்கப்படுகிறது. இதனால் காபிக் கொட்டை தரமானதாக இல்லாமல் போவது மட்டுமில்லாமல், பறவைகளுக்கான வாழிடங்களும் அழிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- நவீன்