

கடலூரில் வசிக்கும் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் பி. கிருஷ்ணராஜ் ஆட்கொல்லிப்புலி, சிறுத்தை வேட்டை அனுபவங்களை எழுதிப் புகழ்பெற்ற ஜிம் கார்பெட் மீது அதீத ஈடுபாடு கொண்டிருப்பவர். ஜிம்கார்பெட் பற்றிய பல சுவையான தகவல்களின் நடமாடும் களஞ்சியமாக கிருஷ்ணராஜ் திகழ்கிறார்.
ஜிம் கார்பெட்டின் புத்தகங்களை தமது இளமைப்பருவத்தில் படிக்க ஆரம்பித்த கிருஷ்ணராஜ், ஜிம் கார்பெட் பித்தராகவே மாறிவிட்டார். எண்பத்து மூன்று வயதிலும் இளைஞராகவே இருக்கிறார். ஒடிசலான தேகம், பளிச்சென்ற முகம். உற்சாகமான பேச்சு, எதைப் பேசினாலும் கடைசியில் ஜிம் கார்பெட்டில் வந்து நிற்கிறது பேச்சு. அவருடனான உரையாடலின் சுருக்கம் இது:
பள்ளி ஆசிரியரான உங்களுக்கு வேட்டைக்காரரான ஜிம்கார்பெட் மீது எப்படி ஆர்வம் உண்டாயிற்று?
ஜிம் கார்பெட்டை வேட்டைக்காரர் என்று சொல்லாதீர்கள் உண்மையில் அவர் ஒரு துப்பாக்கி ஏந்திய துறவி! ஆம், அப்படித்தான் கானக மக்கள் அவரைக் கொண்டாடுகிறார்கள்! இன்னமும் வட இந்திய மாவட்டங்களில் பழங்குடி மக்களைக் காக்க வந்த ரட்சகராகவும் நாயகனாகவும் அவர் நினைவுகூரப்படுகிறார். ஆட்கொல்லிப் புலிகள் - சிறுத்தைகளைச் சுடுவதற்கு அரசாங்கம் அவரை நியமித்த போதிலும் காட்டு விலங்குகள் மீது அவருக்கு எவ்வித வன்மமும் இல்லை.
ஒரு சந்தர்ப்பத்தில் ஆட்கொல்லிச் சிறுத்தையைச் சுட்டு வீழ்த்தும் முயற்சியில் வெற்றி பெற்றபோது, அது குறித்து எவ்விதப் பெருமிதமும் அவர் கொள்ளவில்லை. மாறாக தமது செயல் குறித்து அவரிடம் வருத்தமே மேலிட்டது. ஜிம் கார்பெட்டின் வேட்டை அனுபவங்கள் என்னை ஆட்கொண்டதற்குக் காரணம் அவரது சாகச விழைவு மட்டுமல்ல, அவரிடம் குடிகொண்டிருந்த அற உணர்வும்தான்!
கிருஷ்ணராஜின் அறையிலிருந்த துப்பாக்கியைக் குறித்துக் கேட்டபோது:
ஆமாம்! அது நான் பயன்படுத்தியதுதான்! இரட்டைக் குழல் தோட்டா துப்பாக்கி! 26 வயதில் ஆட்சியரிடம் உரிய உரிமம் பெற்று வாங்கியது! இதை எடுத்துக்கொண்டு காடுகளுக்கு வேட்டை உரிமம் பெற்றுச் சென்றிருக்கிறேன். அதுகூட, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 வருவதற்கு முன்பு. கிருஷ்ணகிரி, கொள்ளேகால், செங்கம், தருமபுரி, கேரள எல்லையில் உள்ள காடுகள், கர்நாடக எல்லையில் உள்ள காடுகளில் வேட்டைக்குச் சென்றிருக்கிறேன்.
மான்களையும், கழுதைப் புலிகளையும், காட்டுப்பன்றிகளையும் சுட்ட அனுபவம் எனக்கு உண்டு... ஆனால், பின்னாளில் எனக்குள் மனமாற்றம் ஏற்பட்டு இப்படி விலங்குகளை வேட்டையாடுவதை விட்டுவிட்டேன். இதற்கும் ஜிம் கார்பெட்தான் காரணம்!
வேட்டையால் விளையும் சாகச உணர்வினை வெறுத்த ஜிம் கார்பெட், பிறகு வேட்டையில் ஈடுபடுவதை முற்றிலுமாகக் கைவிட்டு கானகவாசிகள் மீதும் வனவிலங்குகள் மீதும் அன்பும் அக்கறையும் கொண்டார். இயற்கையியலாளராகவும் கானகக் காப்பாளராகவும் மாறினார். வேட்டை இன்பத்துக்காக விலங்குகளைக் கொல்வதை முற்றிலுமாக அவர் வெறுத்தார். என்னுள் ஏற்பட்ட மனமாற்றத்துக்கும் அது அடிப்படையாக அமைந்தது.
ஜிம்கார்பெட் இந்தியாவில் எங்கே வாழ்ந்தார்?
ஜிம் கார்பெட் பிறப்பால் ஆங்கிலேயராக இருந்தாலும் ஒரே ஒரு தடவைதான் இங்கிலாந்து போயிருக்கிறார். 1915இல் சோட்டி ஹல்த்வானி என்ற கைவிடப்பட்ட கிராமத்தை 1,500 ரூபாய்க்கு வாங்கினார். அந்தக் கிராமத்தில் தமக்காக ஒரு அழகிய குளிர்கால இல்லத்தைக் கட்டினார். இந்த வீட்டைச் சுற்றிலும் பழமரங்களும் தோப்புகளும் உருவாக்கப்பட்டன. இந்த வீடுதான் இப்போது ஜிம் கார்பெட் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கிறது.
1947இல் ஜிம் கார்பெட் இந்தியாவை விட்டு வெளியேறி கென்யாவிற்குப் போய்விட்டார். இந்தியாவில் அவர் வாங்கிய 221 ஏக்கர் பரப்பளவு நிலத்தை அங்கு உழுது பயிரிட்ட ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுத்து விட்டுத்தான் சென்றார். அதனால்தான், இந்தியாவை விட்டு ஜிம் கார்பெட் விடைபெற்று 65 ஆண்டுகள் ஆனபிறகும் மலைவாழ் மக்களின் உள்ளங்களிலும் அவர் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
காடுகள், புலிகள் பற்றிய திரைப்படங்கள் பார்த்திருக்கிறீர்களா?
பார்த்திருக்கிறேன். அவை உண்மைக்குப் புறம்பாக இருக்கின்றன. ஜிம் கார்பெட்டின் வாழ்க்கை வரலாறு ஏற்கெனவே பி.பி.சியால் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது முழுமை யாக இல்லை. ஜிம் கார்பெட்டின் அனைத்து நூல்களையும் படித்தால் மட்டுமே, அவர் எப்படிக் காடுகளையும், காட்டுயிர்களையும் மலைவாழ் மக்களையும், மரங்களையும், செடிகொடிகளையும், மலைகளையும், ஆறு ஓடைகளையும், பள்ளத்தாக்குகளையும், இந்தியாவையும் எவ்வாறு நேசித்தார் என்பது புரியும்.
காட்டுவாசிகளோடு உங்களுக்குப் பழக்கமுண்டா?
என் குருவே காட்டுவாசியான மூக்கன் என்பவர்தான், அவரிடம் அபாரமான மோப்ப ஆற்றல் உண்டு. அத்துடன் விலங்குகளைப் போலக் குரல் எழுப்புவதில் வல்லவர். தரையில் உள்ள பாதச் சுவடுகளை வைத்து அந்த விலங்கு எது, ஆணா பெண்ணா, அது முன்னர் இங்கு வந்துள்ளதா, தற்போது இங்கிருந்து சென்று எவ்வளவு நேரம் ஆகியிருக்கிறது என்பதையெல்லாம் சொல்லக்கூடியவர். காட்டின் நிசப்தம் மிகவும் பயங்கரமாக இருக்கும். ஒரு குச்சி ஒடியும் சத்தமும் மூக்கனுக்குக் கேட்டுவிடும். காட்டில் நீங்கள் நடந்து செல்லும்போது எதையும் காணமாட்டீர்கள். ஆனால், பல விலங்குகள் உங்களைக் கவனித்துக்கொண்டே இருக்கும்.
உங்கள் உடல்நலம் இப்போது எப்படி உள்ளது?
தினசரி 20 கி.மீ. நடக்கும் வழக்கம் எனக்கு உண்டு. ஆறு மாதங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு சிறு விபத்து காரணமாக தற்போது வாக்கர் துணையோடு நடக்கிறேன். எனக்குப் பழையபடி உடம்பு சரியாகிவிடும். அதன் பின்னர் மறுபடி கானகங்களில் நான் அலைந்து திரிவேன். கிருஷ்ணராஜின் குரலில், தன்னம்பிக்கை கொப்பளிக்கிறது. - தஞ்சாவூர்க் கவிராயர்
thanjavurkavirayar@gmail.com