ஒரு கட்டிடப் பொறியாளரின் கனவு வீடு!

ஒரு கட்டிடப் பொறியாளரின் கனவு வீடு!
Updated on
3 min read

நவீன உலகின் தொழில்நுட்ப வளர்ச்சியால், சிமெண்ட் இல்லாமல் உறுதியான, நிலையான வீட்டைக் கட்ட முடியாது எனும் எண்ணம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. இந்தச் சூழலில், சிமெண்ட் குறித்த கற்பிதத்தை ஜெகதீசன் (31) எனும் கட்டிடப் பொறியாளர் தான் கட்டிய வீட்டின் மூலம் உடைத்தெறிந்து இருக்கிறார்.

சிமெண்ட் இல்லாமல், சுடாத களிமண் செங்கற்களைக்கொண்டு அவர் கட்டியிருக்கும் வீடு நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக உறுதியுடன் இருக்கிறது. அதற்கு ‘தாய்மண் வீடு’ என்று பொருத்தமான பெயரையும் அவர் சூட்டியிருக்கிறார்.

கனவின் தொடக்கம்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை எனும் சிற்றூரைச் சேர்ந்தவர் ஜெகதீசன். வேப்பந்தட்டை அருகிலுள்ள அன்னமங்கலம் எனும் குக்கிராமமே அவருடைய சொந்த ஊர். வேப்பந்தட்டையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் வீடுகளைக் கட்டிக்கொடுப்பது ஜெகதீசனின் தொழில். அவர் கட்டிக்கொடுத்தவை எல்லாமே கான்கிரீட் வீடுகளே.

அவரது சொந்த கிராமத்தில் பலர் தங்களின் மண்வீடுகளை இடித்துவிட்டு கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தருமாறு கேட்டபோதுதான் அவரின் வாழ்க்கைக்குப் புது அர்த்தம் கிடைத்தது. நன்றாக இருக்கும் வீடுகளை ஏன் இடிக்க வேண்டும் என்கிற அவரது கேள்விக்கு சிமெண்ட் வீடுதான் உறுதியானது என்ற பதிலையே பலரும் கூறினார்கள்.

சிறு வயதில் அவர் பார்த்துப் பெரிதும் வியந்த மண்வீடுகளில் பல தகர்க்கப்பட்டு, அவருடைய கண் முன்னால் கான்கிரீட் வீடுகளாக உருமாறின. மண்வீடுகள் உறுதியற்றவை என்கிற கண்ணோட்டத்தை எப்படி மாற்றுவது என்று யோசித்தார். இறுதியில், அந்தக் கண்ணோட்டத்தை மாற்றும் விதமாக, மண்ணைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு வீட்டைத் தானே கட்டுவது என முடிவெடுத்தார். அந்த முடிவு அவருடைய லட்சியமாகவும் மாறியது. சில ஆண்டுகளுக்கு முன்னர், கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தன்னுடைய கனவுக்கு அவர் செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கினார்.

மீண்டும் கற்றல்: தானே ஒரு கட்டிடப் பொறியாளராக இருந்தபோதும், மண்வீடுகளின் கட்டுமானம் குறித்துக் கூடுதலாகக் கற்றுக்கொள்வதற்காகப் புதுச்சேரி ஆரோவில் வளாகத்தில் உள்ள எர்த் இன்ஸ்டிடியூட்டில் இணைந்து ஜெகதீசன் படித்தார். களிமண்ணைக் கொண்டு வளைவுகள், குவிமாடம் கட்டுவது தொடர்பான தொழில்நுட்பங்களை அங்கே கற்றுத் தேர்ந்தார்.

சொந்த ஊருக்குத் திரும்பிய ஜெகதீசன், தனது கனவு வீட்டைக் கட்டும் முயற்சியில் இறங்கினார். சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடு என்பதால், தான் கட்டும் வீட்டின் கட்டுமானத்துக்கு கான்கிரீட் பயன்படுத்தக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். அத்துடன், வீட்டின் கதவுகளுக்கும் ஜன்னல்களுக்கும் புதிய மரங்களை வெட்டக் கூடாது எனவும் தீர்மானித்தார்.

களிமண் செங்கற்கள்: சிமெண்டிற்கு மாற்றாகக் களிமண்ணைப் பயன்படுத்துவது என முடிவெடுத்த ஜெகதீசன், அதற்குத் தகுந்த களிமண்ணைத் தனது ஊருக்கு அருகிலேயே கண்டறிந்தார். அந்தக் களிமண்ணில் இருந்து உருவாக்கப்பட்ட சுடாத செங்கற்களைக் கொண்டு வீட்டைக் கட்டத் தொடங்கினார். செங்கற்களின் இணைப்புக்கும் களிமண்ணையே பயன்படுத்தினார். களிமண் செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டிருக்கும் குவிமாடங்களும், வளைவுகளும் அந்த வீட்டுக்குக் கூடுதல் பொலிவைத் தந்தன.

பழமையிலிருந்து புதுமை: ஏற்கெனவே இடிக்கப்பட்ட வீட்டிலிருந்து பெறப்பட்ட மரக்கதவுகளையும் ஜன்னல் களையும் அருகில் உள்ள ஒரு விறகுக் கடையில் வாங்கி, வீட்டின் கதவுகளுக்கும் ஜன்னல்களுக்கும் பயன்படுத்தினார்.

பழைய இருசக்கர வாகனங்களின் சங்கிலிக்கண்ணிப் பற்சக்கரங்களைப் (செயின் ஸ்ப்ராக்கெட்டுகள்) பயன்படுத்தி அவர் உருவாக்கியிருக்கும் ஜன்னல் கம்பிகளும், முகப்பு கம்பிக்கதவுகளும் மலைக்க வைக்கின்றன.

முக்கியமாக, களிமண் செங்கற்களைக் கொண்டு அவர் நிறுவியிருக்கும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பில் 20,000 லிட்டர் மழைநீரைச் சேகரித்துவைக்க முடியும்.

குறைந்த மின்கட்டணம்: வீட்டினுள் இயற்கை ஒளியும் காற்றும் எளிதில் கிடைக்கும்படி இந்த வீட்டின் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால், வீட்டினுள் வெளிச்சமும் காற்றோட்டமும் நன்கு பரவிக் காணப்படுகின்றன. முக்கியமாக, இது களிமண்ணைக் கொண்டு கட்டப்பட்டிருப்பதால், கோடைக்காலத்தில் வெப்பமும், குளிர்காலத்தில் குளிரும் இதனுள் புகாது. எனவே, தனது வீட்டுக்கு ஜெகதீசன் ஏசி வசதி செய்துகொள்ளவில்லை. விளக்கு, மின்விசிறி ஆகியவற்றின் பயன்பாடும் குறைந்த அளவே தேவைப்படுவதால், அவரது வீட்டுக்கான மின் கட்டணம் 30 ரூபாயைத் தாண்டுவதில்லை.

நிறைவான வீடு: 1,100 சதுர அடி இடத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த வீட்டை ஜெகதீசன் ஓராண்டுக்குள் கட்டிமுடித்திருக்கிறார். அதன் கட்டுமானத்துக்கு ஆன செலவு 17 லட்சம் ரூபாய். இன்னும் திட்டமிட்டால், இந்தச் செலவை வெகுவாகக் குறைக்க முடியும் என்று அவர் உறுதியாகக் கூறுகிறார். கட்டுமான செலவு குறைந்தால், வருங் காலத்தில் இத்தகைய வீடுகளுக்கான விருப்பமும் தேவையும் அதிகரிக்கும் என்பதால், அதற்கான முயற்சியில் ஜெகதீசன் இறங்கிவிட்டார்.

இதுபோன்ற வீடுகள் புதியவையல்ல. ஏற்கெனவே, காலம்காலமாகக் கட்டப்பட்டு வந்த வீடுகள்தான். காந்தியக் கட்டிடக் கலை நிபுணர் லாரி பேக்கர் போன்றோர் இந்த முறையைத்தான் பிரபலப்படுத்தினார்கள். இந்தப் பின்னணியில் இளம் பொறியாளரான ஜெகதீசன் போன்ற ஒருவர் சூழலுக்கு இணக்கமான முன்மாதிரி வீட்டைக் கட்டியிருப்பது, இன்னும் பலருக்கு உத்வேகம் தரும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in