

நோனி பழங்கள் வெள்ளை நிறமாக மாறும்போதோ அல்லது நன்கு பழுத்த பின்னரோ சிறிய பழக்காம்புகளோடு அறுவடை செய்ய வேண்டும். மூன்றாம் ஆண்டு முதல் மகசூல் கொடுக்க ஆரம்பிக்கும் நோனி தாவரம், ஐந்து வருடங்களிலிருந்து தொடர்ச்சியாக மகசூல் தரும். நோனி வகை, மரபுவழி, சுற்றுச்சூழல் (மண்), சாகுபடி முறை அடிப்படையில் ஆண்டு மகசூலானது மாறுபடும். மண்வளம், சுற்றுப்புறச் சூழல், மரபுவழி, தாவர அடர்த்தி ஆகியவற்றின் மூலம் மகசூல் தீர்மானிக்கப்படுகிறது.
அந்தமான் நிகோபார் தீவுகளில் பழங்குடியினரால் இயற்கையாகப் பராமரிக்கப்படும் நோனியானது உற்பத்தி குறைவாக உள்ள போதும், மருத்துவக் குணங்களில் சிறந்து காணப்படுகிறது.
சேகரிப்பு
அறுவடை செய்யப்பட்ட பழங்கள், சுத்தமான கூடைகளில் சேகரிக்கப்பட்டுக் கழிவு நீக்கப்பட வேண்டும். பின்னர் 1.5% சோடியம் ஹைபோ குளோரைடு கரைசலில் கழுவி நன்கு உலர்த்தப்பட வேண்டும். இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட பழங்கள் கூடைகளில் அடைக்கப்பட்டுத் தொழிற்சாலைகளுக்கு முடிந்தவரை விரைந்து அனுப்பப்படவேண்டும். இவ்வாறு செய்வதால் இப்பழங்கள் குறைந்தபட்சம் 10 முதல் 15 நாட்கள்வரை கெடாமல் இருக்கும்.
சுவையூட்டல்
பல மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கும்போதும், பழத்திலிருந்து வரும் விரும்பத் தகாத மணத்தால் நோனி பழத்தின் பயன்பாடு குறைவாகவே உள்ளது. பழங்குடியினரைத் தவிர்த்த மற்றவர்கள் இப்பழத்தை நேரடியாக உண்பதையோ சாற்றைப் பருகுவதையோ விரும்புவதில்லை. எனவே, இதன் விருப்பத் தன்மையையும் சந்தை மதிப்பையும் அதிகரிக்க நோனி பழச்சாற்றை, மற்றப் பழச்சாறுகளுடன் போதிய விகிதத்தில் கலக்க வேண்டும்.
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, அன்னாசிப் பழம், இலந்தை, மாம்பழம், பெல் எனப்படும் வில்வப் பழச்சாற்றுடன் நோனி பழச்சாற்றைக் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து செறிவூட்டம் செய்து, குறிப்பிட்ட வெப்பநிலையில் பாட்டில்களில் அடைப்பதன் மூலம், இதன் ஆயுட்காலத்தையும் சுவையையும் அதிகரிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் முதன்முறையாக நான்கு புதிய நோனி ரகங்களையும் போர்ட்பிளேரில் உள்ள மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதிப்புக்கூட்டல்
உலர் பிஸ்கட்டுகள் / ரொட்டிகள், செறிவூட்டம் செய்யப்பட்ட நோனி குளிர்பானக் கலவை, நோனி பழச்சாறு சேர்க்கப்பட்ட ஊட்டச்சத்து பானங்கள் போன்றவற்றைத் தயாரிப்பதன் மூலம் நோனியின் பயன்பாட்டையும் ஏற்புத்திறனையும் அதிகரிக்க முடியும்.
தமிழகத்திலும் பல்வேறு நிறுவனங்கள் நோனி பழச்சாறு கலக்கப்பட்ட பொருட்களைச் சந்தைப்படுத்தும் முனைப்பில் இயங்கிவருகின்றன. நோனி மூலம் விவசாயிகள், தொழில்முனைவோர் பயனடைய முடியும்.
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com