

சென்னையைப் புரட்டிப் போட்ட வார்தா புயலில் ஆயிரக்கணக்கான மரங்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளன. சென்னையில் தட்பவெப்பத்தைத் தீர்மானிக்கும் காரணிகளில் முதன்மைப் பங்கை வகித்த அவை இன்று அகன்றுவிட்டன.
இன்று வீழ்ந்துகிடக்கும் மரங்கள் எந்த வகையைச் சேர்ந்தவை என்றாலும் அவற்றின் கிளைகளும் இலைகளும் பெரும் பயனைத் தரக்கூடியவை. அவற்றை வெட்டி எடுத்து அப்படியே குப்பைக் கிடங்குகளில் வீசிவிட்டால், எந்த நல்ல பலனும் நமக்குக் கிடைக்கப் போவது இல்லை. உண்மையில் மிகச் சிறந்த உயிர்மக் கரிமத்தை (Organic carbon) அவை கொண்டிருக்கின்றன. இவை விலை மதிப்பற்றவை. இன்றைய கரிம வணிக யுகத்தில் (Carbon trade) உயிர்மக் கரிமத்துக்காக பல நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.
எனவே, இந்த உயிர்மக் கரிமத்தை நாம் முறையாகப் பயன்படுத்த வேண்டும். அவை சிதைந்து உயிர்மமற்ற கரிமமாக (Inorganic carbon) மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இயற்கை சுழற்சி
அப்படிச் செய்வதற்கு மிகச் சிறந்த வழி, கிடைக்கும் உயிர்மக் கழிவுவகளை மட்காக-மட்கு உரமாக மாற்றுவதுதான். மட்காகுதல் என்பது இயற்கையான ஒரு நிகழ்வு. இறந்த உயிர்மப் பொருட்களை நுண்ணுயிர்கள் சிதைத்து மண்ணுக்கு வளம் தரக்கூடிய மட்குப் பொருளைத் தருகின்றன. ஆனால், இயற்கை முறையில் மட்கு உருவாவதற்கு மிக நீண்ட நாட்களாகும். முதலில் நுண்ணுயிர்கள் சிதைக்கும் பணியைத் தொடங்குகின்றன.
பின்னர் பூஞ்சானங்களும் புரோட்டாசோவாக்களும் அதனுடன் சேர்ந்துகொள்கின்றன. நூற்றுக்காலிகள் எனப்படும் பூரான் வகைகளும், ஆயிரக்காலிகள் எனப்படும் மரவட்டைகளும், வண்டுகளும் மண்புழுக்களும் பெரிய உடல்களைக் கடித்து சிறுசிறு துணுக்குகளாக மாற்றுகின்றன. இவை நுண்ணுயிர்களுக்கு ஏற்றவாறு மாறுகின்றன.
நுண்ணுயிர்களின் உணவு
இயற்கையான இந்த நிகழ்வை நாம் விரைவுபடுத்த வேண்டும் என்றால், குறிப்பிட்ட இடத்தில் உயிர்மக் கழிவை முறைப்படி சேர்த்து வைத்து, அதில் நுண்ணுயிர்களைப் பெருக்க வசதி செய்ய வேண்டும். இப்படிச் செய்துவிட்டால், விரைவாக மட்கு உரம் உருவாகிவிடும். நுண்ணுயிர்கள் என்பவை உயிருள்ளவை. எனவே இவற்றுக்கு உணவு, காற்று, ஈரப்பதம் போன்றவை அத்தியாவசியத் தேவை.
நுண்ணுயிர்களுக்கான அடிப்படை உணவு கார்பன் எனப்படும் கரிமப் பொருட்களும், நைட்ரஜன் எனப்படும் வெடியமும் ஆகும். கரியானது ஆக்சிஜன் ஏற்றமடைந்து ஆற்றலைக் கொடுக்கிறது. நைட்ரஜன் அமினோ அமிலங்களைக் கொடுக்கிறது. இவைதான் புரதச் சத்தை தருகிற அடிப்படைப் பொருட்கள். மட்காவதற்கு மிகச் சிறந்த கரி/நைட்ரஜன் விழுக்காட்டளவு 30:1. அதாவது ஒரு பங்கு நைட்ரஜன் இருக்குமானால், 30 பங்கு கரியை நுண்ணுயிர்கள் சிதைத்துக் கொடுக்கின்றன. மிகச் சிறந்த முறையில் மட்கு உருவாக ஏற்ற கரி/நைட்ரஜன் அளவு, ஒரு பங்கு நைட்ரஜனுக்கு 25 முதல் 35 பங்கு கரி என்கிற அளவுவரை இருக்கலாம். குறைவான கரிச் சத்து இருந்தால் நைட்ரஜன் அமோனியாவாக மாறி காற்றோடு கலந்துவிடும். கூடுதலான கரிச் சத்து அமைந்துவிட்டால் மட்குவதற்கான கால அளவு மிக அதிகமாக ஆகிவிடும்.
குவிந்து கிடக்கும் மூலப்பொருள்
மட்காவதற்கான அடிப்படைப் பொருட்கள் உயிரியல் பொருட்களாக இருக்க வேண்டும். இப்போது சென்னையில் மிக அதிக அளவில் இலைகளும் கிளைகளும் கிடைக்கின்றன. பச்சையான இலைதழைகள் ஒன்று முதல் இரண்டு பங்கும், பழுப்பு நிற - அதாவது கரிமம் அதிகம் உள்ள காய்ந்த, சருகான இலைதழைகள் மூன்று முதல் நான்கு பங்கும் சேர்ந்து இருப்பது நல்லது. இப்படிக் கலந்து கொடுப்பதால் கிடைக்கும் பயன் கூடுதலாக இருக்கும். அத்துடன் காற்றோட்ட வசதியும் கிடைக்கிறது. காற்றோட்டம் இல்லாதபோது கெட்ட நாற்றம் ஏற்படும்.
என்னென்ன தேவை?
மட்காவதற்கு முன் பொருட்களை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொடுத்தால் இன்னும் வேகமாக மட்காகுதல் நடைபெறும்.
காற்றில்லா நுண்ணுயிர் வாழ்விகள் உடைக்கும் பொருட்கள் கார்பன் டை ஆக்சைடும், தண்ணீரும். காற்றில் வாழும் நுண்ணுயிர்களுக்கு கழிவுக் குவியலை அடிக்கடி புரட்டிப் போட வசதி செய்வதன் மூலமோ, குவியலில் கம்புகளை நட்டு காற்றோட்டம் கொடுப்பதன் மூலமோ ஆக்சிஜன் எனப்படும் உயிர்வளித் தேவையை நிறைவு செய்யலாம்.
குவியலுக்கு ஈரப்பதமும் மிக அவசியம். அப்போதுதான் உயிரினங்கள் வாழவும், நகரவும், கரைந்த நிலையில் இருக்கும் சத்துகளை எடுத்துக்கொள்ளவும் முடியும். அது மட்டுமல்லாது நைட்ரஜன் என்ற தழைச்சத்தானது, நீர் இருந்தால் மட்டுமே கரைந்த நிலையில் இருக்கும். இல்லாவிட்டால் காற்றில் ஆவியாகி வெளியேறிவிடும்.
ஒரு மட்குக் குவியலில் தண்ணீரானது 50 முதல் 60 சதவீதம் இருக்க வேண்டும். அதேநேரம் கையில் எடுத்துப் பிழிந்தால் நீர் சொட்டக் கூடாது.
மட்கு செய்முறை
1. விழுந்த மரக்கிளைகள், இலைகள் மற்றும் செடிகள், உயிர்மக் கூளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இதில் பிளாஸ்டிக், கண்ணாடி, கற்கள் போன்ற ஏதும் இருந்தால், அவற்றைப் பிரித்து அகற்ற வேண்டும்.
2. மாட்டுச் சாணம் அல்லது திறமி எனப்படும் திறநுண்ணுயிர்க் கரைசலைச் சேர்க்கலாம்.
3. போதிய நீர் விட வேண்டும்.
> இவை அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஊறுகாய் போடுவதுபோல, ஒரே நேரத்தில் ஒரு மட்கு உரப் படுகையை அமைத்துவிட வேண்டும்.
> இடம் தேர்வு செய்யும்போது நீர் தேங் காத இடமாகவும், நிழல் உள்ள இடமாகவும் பார்த்துக்ககொள்ள வேண்டும்.
> நான்கு அடி நீளம், பத்து அடி அகலம் என்ற அளவில் ஒரு மட்குப் படுகையை அமைக்கலாம். இப்படி பல படுகைகளை அமைத்துக் கொள்ளலாம்.
> முதலில் ஓரடி அளவுக்கு இலைதழைகளைப் போட வேண்டும். அவற்றை குளோரின் கலக்காத சாதாரண நீரைக்கொண்டு நன்கு நனைக்க வேண்டும். அதன் மீது நன்கு கரைத்த சாணத்தை அல்லது திறநுண்ணுயிர்க் கரைசலைத் தெளிக்க வேண்டும்.
> அடுத்த அடுக்காக ஓரடி அளவுக்குக் கழிவை அடுக்க வேண்டும். அதன் மீது முன்பு கூறியதுபோல, மீண்டும் குளோரின் கலக்காத சாதாரண நீரைக்கொண்டு நன்கு நனைக்க வேண்டும். அதன் மீது நன்கு கரைத்த சாணத்தை அல்லது திறநுண்ணுயிர்க் கரைசலைத் தெளிக்க வேண்டும்.
> இப்படியாக மூன்று முதல் நான்கு அடி உயரத்துக்கு படுகையை அமைக்கலாம். அதன் பின்னர் நீர் தெளித்து, அவற்றை மண்ணைக் கொண்டு மூடிவிட வேண்டும். தினமும் படுகையின் மீது நீர் தெளித்து வரவேண்டும்.
இப்படிச் செய்யும்போது மிக விரைவாக மட்கு உரமாக மாறி விடும். இம்முறை மிகக் குறைந்த செலவுள்ள, எளிமையான முறை. மட்கு உரம் முதிர்ச்சி பெறுவதற்கு 90 முதல் 120 நாட்கள் ஆகும். இந்த மட்கு உரம் கிலோ 5 முதல் 10 ரூபாய்வரை விற்பனையாகிறது. கழிவில் இருந்து குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு மட்கு கிடைக்கும்.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com