குயிலே... குயிலே..

குயிலே... குயிலே..
Updated on
4 min read

நான் பறவைகளைத் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தது 2022 ஜனவரியிலிருந்துதான். பறவைகளில் என்னை அதிகம் ஈர்த்தவை குயில் வகைப் பறவைகளே. இதுவரை ஐந்து வெவ்வேறு குயிலினங்களைப் பார்த்து விட்டேன். பொதுவாகக் குயில்கள் என அழைக்கப்படுபவை ஆங்கிலத்தில் Asian Koel-யையே. இவை தவிர வேறு குயிலினங்களும் உண்டு..

செண்பகம்: செம்போத்து என்றழைக்கப்படும் செண்பகத்தை (Greater Coucal) குயிலினம் என்று அறிந்தபோது முரணாகத்தான் தோன்றியது. பொதுவாகக் குயில்களை இனிய பாடல்களுக்காகவே நினைவுகூர்வோம். ஆனால், செம்போத்தின் குரலோ முழங்குவது போலவும் நீட்டி முழங்கக்கூடிய ஆழத்தையும் கொண்டது. ‘கூப் கூப் கூப்’ என்று அது அழைப்பதைப் பறவைகளின் குரலொலிகள் மண்டிய இடங்களிலும் தனித்து அறிய முடியும்.

ஆனால், இப்போது செம்போத்துகளும் ‘குக் குக்’ என்று குயில்போலவே கூவுகின்றன, குரல் தடித்துப்போய்விட்டது என்று தோன்றுகிறது. பறவைகளைக் கணக்கெடுக்க ஆரம்பித்ததிலிருந்து மிகவும் எளிதாக அடையாளம் காண முடிவது இவற்றைத்தான். நேரில் பார்த்தாலும் இவற்றின் கறுப்பு உடலும் காவி இறகும் நீண்டு அகன்ற வாலும் தவறவிடமுடியாத அடையாளங்கள். பொதுவாகக் குயிலினத்துக்கு வால் சற்று நீளம் என நினைக்கிறேன். மற்ற குயில்களைப்போலன்றி இவை தானே கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சுகளைப் பராமரிப்பவை.

குயில்: நான் இருக்கும் பகுதியில் குயில்களை அதிகம் பார்த்துவிட முடியாது. அவற்றின் இனிமையான குரலொலியை எளிதில் கேட்கலாம். ஆனால், ஊரில் இரண்டு ஆள் உயரத்தில் ஒரு மரம் உண்டு, சிறிய பழங்கள் கொண்டது. சீனிப்பழ மரம் (தேன் பழம்) என்று கூறுவர். பறவைகளுக்கு உகந்த பட்டாணி அளவிலான பழங்கள் கொண்டது. அந்த மரத்தில் ஒரே நேரத்தில் மூன்று குயில்களைப் பார்த்திருக்கிறேன். கூடவே மைனா, தேன்சிட்டு என மற்ற பறவைகளையும் கண்டிருக்கிறேன்.

குயில்களைக் கூர்ந்து கவனித்தால் முதலில் தெளிவாகத் தெரிவது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நிற வேறுபாடுதான். இரண்டும் வெவ்வேறு பறவைகள் போலிருக்கும். ஆண் கருமை நிறம். வெயிலில் அடர் நீலம்போல அவ்வப்போது மின்னும். பெண் குயில் பழுப்பு நிறமும் வெள்ளை வரிகளும், வெள்ளை திட்டுகளும் கொண்டது. ஆண், பெண் இரண்டிற்குமே சிவப்பு நிற கண்கள்.
காகங்களின் கூட்டில் முட்டையிடுபவை குயில்கள் என்பதை அறிவோம். ஆனால், பலமுறை மைனாக்களும் குயில்களைத் துரத்திக்கொண்டு பறப்பதைக் காண முடிந்தது. மட்டுமில்லாமல் கரிச்சான் கூட்டிலும் குயில்கள் முட்டையிடுவது உண்டாம்.

அக்காக்குயில்: ஒருநாள் வீட்டின் அருகிலிருந்த கோயிலைச் சுற்றி வல்லூறின் குரலொலியைப் போல ‘கிக் கிக்’ என்கிற சற்று கூரிய சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. பகல் முழுதும் கல்லுக்குருவிகள் (தவிட்டுக்குருவிகள்) அமளி செய்து கொண்டிருந்தன. அவை பொதுவாகவே சலம்பிக்கொண்டே இருப்பவை. பாம்புகள் ஏதேனும் வந்தால் அந்த இடத்தையே நிறைத்து அவை அலறிக்கொண்டே இருக்கும். அதைக்கொண்டே நாங்களும் கவனமாக இருப்போம். ஆனால், இன்று வல்லூறு இருந்ததால் அவை பயந்து அலறுகின்றன என நான் நினைத்தேன். ஆனால், ஒன்றுகூடப் பறந்து விலகி ஓடவில்லை.

சற்றுநேரம் கவனித்த பிறகுதான் கல்லுக்குருவிகள், வல்லூறுக்கு உணவூட்டுகின்றன என்பதை உணர்ந்தேன். அப்போதுதான் பொறிதட்டியது. நான் பார்த்தது வல்லூறே இல்லை, அக்காக் குயிலின் குஞ்சு என்று. அது குளிரில் நடுங்குவதுபோல உடலை உதறிக்கொண்டே இருந்தது. பல கல்லுக்குருவிகள் சேர்ந்து ஒரு அக்காக்குயிலுக்கு ஊட்டிக்கொண்டிருந்தன. இத்தனைக்கும் அந்தக் குஞ்சு கல்லுக்குருவிகளைவிட ஏற்கெனவே பெரிதாக வளர்ந்திருந்தது.

ஆரம்பத்தில் குயிலையும் அக்காக்குயிலையும் வேறுபடுத்தி அறிவது கடினமாக இருந்தது. அக்காக்குயிலும் பெண் குயிலும் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே தோன்றும். ஆனால், இதெல்லாம் பறவைகளைப் பார்ப்பதன் ஆரம்பக்கட்ட இடர்கள்தான். ஒருசில நாட்கள் தொடர்ந்து அடையாளம் காண முயன்றால், வேறுபாடுகளை நாம் எளிதில் உணர்ந்துகொள்ள ஆரம்பிப்போம். இந்தப் பறவையின் ஆங்கிலப் பெயர் Common Hawk Cuckoo. வேட்டையாடிப் பறவைபோல, அதாவது வல்லூறு போன்ற தோற்றத்தைக் கொண்டதாலேயே இப்பெயர்.

சுடலைக்குயில்: இரண்டு பறவைகளை முதன்முதலில் பார்த்தது இன்றும் எனக்கு நினைவுள்ளது. ஒன்று இந்த சுடலைக்குயில். அதற்குக் காரணம் இந்த தமிழ்ப்பெயர். ஆங்கிலப் பெயர் Pied Cuckoo. ஆனால், தமிழ் கையேட்டில் இதன் பெயர் சுடலைக்குயில் என்பதைப் பார்த்தபோது “ஆம், நல்லதொரு பெயர்” என்று புன்னகைத்துக்கொண்டேன். அதிராமபட்டினத்துக்கு அருகில் உள்ள கரிசல்காடு என்னும் கிராமத்தில்தான் சுடலைக்குயிலை முதலில் பார்த்தேன். கரிசல்காட்டின் எல்லையில் கிழக்கு கடற்கரைச் சாலை செல்கிறது.

சாலையின் ஒரு மருங்கிலிருந்த மின்கம்பிகளில் இரண்டு பறவைகள் அமர்ந்திருந்தன. தலையைச் சற்றே சிலுப்பிக்கொண்டிருந்தது ஒரு வகையில் சின்னானை நினைவூட்டியது. இந்த சிலுப்பிய தலைதான் இவற்றைத் தனித்து அடையாளம் காண எனக்கு உதவுகிறது. இறகுகளிலும் வாலிலும் வெள்ளைத் திட்டுகள் இருக்கும். சுடலைக் குயிலில் இரண்டு உள்ளினங்கள் (sub species) உள்ளன. தென்னிந்தியாவில் பார்ப்பது ஆண்டு முழுவதும் இங்கேயே இருப்பது. பொதுவாகக் கல்லுக்குருவிகளின் கூட்டில் முட்டையிடும். இன்னொரு உள்ளினம் ஆப்பிரிக்காவிலிருந்து மழைக்கால ஆரம்பத்தில் வட இந்தியாவை வந்தடைகிறது. குளிர்காலத்தில் திரும்பிச்சென்றுவிடுகிறது.

நீலக்கண்ணி: நான் பார்த்த பறவைகளிலேயே மிகவும் கூரிய கண் பார்வையைக் கொண்டது இது. உடல் நீலம் பரவியது போலிருக்கும். நீலம் என்றால் மயில்போலன்று. மூக்கு கண்கள், சிறகுகளில் ஆங்காங்கே நீலம். மற்றபடி கருப்பும் சாம்பலும்தான். ஆனால், கறுப்புக் கண் பாவையைச் சுற்றியிருக்கும் நீல நிறம் நம்மை முறைப்பது போன்ற உணர்வை அளிக்கிறது. உண்மையில் இது கூச்சம் நிறைந்த பறவை.

மொத்தமாக ஐந்து முறைதான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதன் நீலக்கண்களைப் பார்க்கும் முன் புதர்களுக்குள் சென்று ஒளிந்துவிடும். ஒரு முறை அதிர்ஷ்டம் வாய்த்தது. பேராவூரணிக்கு அருகிலிருக்கும் பின்னவாசல் பெரிய ஏரியில் ஒருமுறை பறவைகளைக் கணக் கெடுத்துக் கொண்டிருந்தேன். அந்த ஏரியின் ஒரு கரை மட்டும் புதர்கள் மண்டிய மேடு. ஒருவர் மட்டும் நடந்துசெல்லும் வழித்தடம் உண்டு. பத்தடி தூரத்திலிருந்த புதரின் உள்ளே அசைவைக் கண்டு சலனமின்றி நின்றிருந்தேன். அப்போது தான் முதன்முதலில் நீலக்கண்ணி புதரிலிருந்து மெல்லமெல்ல கிளைகளில் தாவி வெளியே வந்தது.

அது என்னைப் பார்த்துவிட்டது என்பதை உணர்ந்தேன். தேவையில்லாத இடையூறாக என்னைக் கருதி அது முறைக்கிறது என்றும் எண்ணினேன். அது பறந்தோடிவிடவில்லை. நிதானமாக விலகிச் சென்றது. அதன் கண்களும் மூக்கும் நீலம் ஊறியிருந்து நினைவில் அழுந்தப் பதிந்திருக்கிறது. எனவே, சரியாக Blue faced malkoha என்று அடையாளம் காண முடிந்தது.
இதன் வாலின் அடிப்பகுதியில் அழகிய வெள்ளை நிற வட்டத்திட்டுகள் இருக்கும்.

இதுவும் கூடுகட்டி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் குயில் வகை. நாம் பார்க்கும் பறவைகளை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கினால் நிச்சயமாக ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. செம்போத்தும் ஒரு குயில் வகைதான் என்று நான் அறிந்துகொண்டது அப்படிப்பட்ட ஒன்றுதான். - பா.விஜயபாரதி, b.vijayabharathi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in