

பருவநிலை மாற்றம் அதன் கொதிநிலைக்கு அருகே நெருங்கிவிட்ட சூழலில், இன்று உயிரினச் சூழலுக்கு ஒவ்வாத பல செயல்கள் விரைந்து முடுக்கம் பெற்றுள்ளன. அவற்றுள் உயிரினங்களின் அற்றுப்போதலும் (Extinction) ஒன்று. இன்று கிட்டத்தட்ட 10 லட்சம் வகை சிறப்பினங்கள் முற்றிலும் அழியும் தறுவாயில் உள்ளன. சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் கூற்றுப்படி, கடந்த 500 ஆண்டுகளில், 844 விலங்குகளும் தாவரங்களும் முற்றிலும் அற்றுப்போய்விட்டன. அவற்றில் கீழ்க்கண்ட ஆறு உயிரினங்கள் சமீபத்தில் அற்றுப்போனதாக அறிவிக்கப்பட்டுள்ளன. நம் வாழ்நாளில், நம் கண்முன்னே அற்றுப்போன உயிரினங்கள் இவை:
1. பிண்டா ஆமை: ஈக்வடார் நாட்டில், பசிபிக் பெருங் கடலில் ஓடும் பூமத்திய ரேகையின் இரண்டு பக்கங்களிலும் இருக்கும் தீவுக் கூட்டமே கலபகாஸ். ஒரு கோடியே, நாற்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பெரும் எரிமலை வெடிப்பிலிருந்து உருவான தீவுக் கூட்டம் இது. உலகிலேயே தனித்துவ மான உயிரியல் வாழ்க்கையும், பூகோள வரையறை களையும் கொண்ட இதன் நிலப்பரப்பே மனித இன மர்மங்களை பரிணாமவியலின் தந்தை சார்லஸ் டார்வினுக்கு விளக்கியது.
இந்தத் தீவுக் கூட்டங்களில் பிண்டா எனும் சிறப்பு ஆமை இனம் வாழ்ந்துவந்தது. அளவில் பெரியதாக இருந்த அந்த ஆமை இனம் இன்று முற்றிலும் அற்றுப்போய்விட்டது. திமிங்கில வேட்டையாளர்களும் கடற்பயண வணிகர்களும் இவற்றை விருப்ப உணவாகப் பயன்படுத்தியதால் 19ஆம் நூற்றாண்டில் இவற்றின் எண்ணிக்கை பெருமளவு குறைய ஆரம்பித்தது. இதன் அற்றுப் போதலுக்குக் காடழிப்பும் ஓர் துணைக்காரணம்.
அந்த இனத்தின் கடைசி ஆமையாக, தன்னந்தனியாக வாழ்ந்த ஆமைக்கு லோன்சம் ஜார்ஜ் என்று ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டிருந்தனர். மிகப் பிரபலமான இந்த ஆமையின் எடை, 400 கிலோவுக்கும் அதிகம். ஜூன் 24, 2012 அன்று தனது 100ஆவது வயதில் அது இறந்துபோனது. அதன் பின்னர் இந்த அரிய ஆமை இனம் உலகில் அற்றுப்போய்விட்டது.
2. பிராம்பிள் கே எலி: வாலில் மொசைக் போன்ற வடிவத்தைப் பெற்ற பிராம்பிள் கே என்ற எலி இனம், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் அழிந்த முதல் உயிரினமாக 2019இல் அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பெருந் தடுப்புப் பவளத்திட்டு அருகே உள்ள பிராம்பிள் கே தீவில் வசித்துவந்த கொறிப்பன இனத்தைச் சேர்ந்தது இந்த எலி.
கடல்மட்ட உயர்வால் தீவின் பரப்பளவு 9.8 ஏக்கரிலிருந்து 6.2 ஏக்கராகக் குறைந்ததன் காரணமாக இந்த எலி இனம் அற்றுப்போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது. உணவுக்கும், இருப்பிடத் துக்கும் தேவையான தாவரங்களின் தொடர் அழிவால் முற்றிலும் அற்றுப்போன உயிரினம் இது.
3. யாங்க்ட்சீ ஆற்று ஓங்கில் (Yangtze river dolphin): சீனாவின் மஞ்சள் ஆற்றை (யாங்க்ட்சீ) வசிப்பிடமாகக் கொண்ட உயிரினம் வெள்ளை ஓங்கில்கள் (டால்பின்கள்). ஆசியாவின் மிக நீளமான நதியான யாங்க்ட்சீ நதியில் 2002இல் கடைசியாகக் காணக்கிடைத்த இந்த நன்னீர் பாலூட்டி, மிக அருகிய இனமாக 2008-ல் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதிவேக தொழிற்துறை வளர்ச்சி, தீவிர மீன்பிடிப்பு, கடல் மாசடைதல் உள்ளிட்ட காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. கடந்த 20 ஆண்டுகளில் இவற்றுள் ஒன்றைக்கூடக் காணமுடியவில்லை என்பதால், 2019இல் அது முற்றிலும் அற்றுப்போய் விட்டதாக அறிவிக்கப்பட்டது.
4. ஸ்பிக்ஸ் மக்காவ் கிளி (Spix's Macaw): பிரேசில் நாட்டின் பாஹியாவின் ரியோ சாவோ பிரான்சிஸ்கோவில் வாழ்ந்த பறவையினம் இது. நீலநிறம் கொண்ட ஸ்பிக்ஸ் மக்காவ் பறவை அமேசானின் மழைக்காடுகளில் காணப்பட்டது. 1638ஆம் ஆண்டு ஜார்ஜ் மார்க்கிரேவ் (George marcgrave) என்ற சூழலியலாளர், ஸ்பிக்ஸ் மக்காவ் கிளியை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தினார். ஆண், பெண் கிளிகள் நிறத்தில் ஒன்றாக இருந்தாலும் உருவ அளவில் பெண் பறவை சற்றே சிறியது.
பிரேசிலில் காணப்பட்ட இவ்வகைப் பறவைகளின் அழிவுக்கு அந்நாட்டின் முன்னாள் அதிபர் பொல்சொனாரோவும் (Jair Bolsonaro), அவரது ஆட்சிக்காலத்தில் அமேசான் காடுகள் மரம் வெட்டும் நிறுவனங்களுக்குத் திறந்துவிடப்பட்ட அவலமும் முக்கியக் காரணம். இயற்கையான சூழலில் துடைத்தொழிக்கப் பட்டுவிட்ட இந்த பறவையில் சில, இன்றும் காட்சி சாலைகளில் உள்ளன.
5. கேமரூன் கறுப்பு காண்டாமிருகம் (Western Black rhinos): ஆப்பிரிக்காவின் வறுமைக்குப் பலியான சிறப்பினம் இது. இவற்றின் கொம்புகளுக்குச் சர்வதேச அளவில் கிடைக்கக்கூடிய மதிப்புக் காக அதிகம் வேட்டையாடப்பட்டதாலேயே இந்த உயிரினம் அற்றுப்போனது. ஆப்பிரிக்கக் கண்டத்தின் கேமரூன் நாட்டில் 2000-2008 ஆண்டுகளில் தீவிரத் தேடுதலுக்குப் பிறகு கண்டறிய முடியாமல், மிகவும் அருகிய இனமாகக் கறுப்பு காண்டாமிருகம் அறிவிக்கப்பட்டது.
பின்னர் 2011இல் அற்றுப்போன உயிரினமாக அறிவிக்கப்பட்டது. வேட்டையாடுதலும், அதைத் தடுப்பதற்கு முறையான அரசியல் நடவடிக்கை களும் இல்லாமல் போனதே இந்தப் பாலூட்டி அற்றுப்போனதற்கான முதன்மைக் காரணம்.
6. தந்த மூக்கு மரங்கொத்தி (Ivory-billed Woodpecker): அமெரிக்காவின் தெற்குப் பகுதியிலும் கியூபாவிலும் உள்ள ஊசியிலைக் காடுகளில் காணப்படும் மரங்கொத்தி வகை இது. மரங்களின் பட்டைகளை இடைவிடாமல் அலகால் கொத்துவதால், நெசவாளர் என பறவையிய லாளர்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர்.
1800களிலிருந்தே காடுகள் அழிக்கப்பட்டதால் வாழிடம் இன்றி தந்த மூக்கு மரங்கொத்தி அழியத் தொடங்கியது. 1944க்குப் பிறகு இதுவரை நேரடியாகவும் , மறைமுகமாகவும்கூட இந்த மரங்கொத்தி காணப்படவில்லை. கடந்த ஆண்டுதான் இதனை ‘அச்சுறுத்தலுக்குள்ளான’ பட்டியலிலிருந்து ‘முற்றிலும் அற்றுப்போன’ பட்டியலுக்கு மாற்றி அறிவிக்கப்பட்டது.
அழிவிற்கு யார் காரணம்? - இன்னும் பல சிறப்பினங்கள் அற்றுப் போயிருப்பினும் அவை அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட காலக்கெடுவில் நம்பிக்கையுடன் தென்படுமெனத் தேடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தந்த மூக்கு மரங்கொத்தி அற்றுப்போனது முறையாக அறிவிக்கப்பட எடுத்துக்கொண்ட காலத்தைப் போல இவையும் பொறுமையாகத் தேடப்படுகின்றன. இவற்றின் அழிவிற்கு யார் காரணம்? சந்தேகத்துக்கு இடமின்றி மனிதர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட லாப-நுகர்வு-உற்பத்தி வெறியும், அதற்குத் துணைபோன அரசாங்கங்களும்தான். - செ.கா கட்டுரையாளர், தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர், chekarthi.world@gmail.com