

விமானப் பயணம் என்பது பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் அரிதானதாக மட்டுமே சாத்தியமான ஒன்றாக இருந்தது. இன்று நடுத்தர வர்க்கத்தினருக்கும் அது சாத்தியப்பட்டிருக்கிறது. மூன்றாயிரம் ரூபாய் இருந்தாலே திருச்சியிலிருந்து சென்னைக்கோ பெங்களூருக்கோ விமானத்தில் சென்றுவிட முடியும். குறைந்த விமானக் கட்டணம், அதிகரித்திருக்கும் வாங்கும் திறன் ஆகியவற்றால் நம்மூரில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்தே வருகிறது!
இருபது ஆண்டுகளுக்கு முன் ஆண்டுக்கு 160 கோடி பேர் உலக அளவில் விமானப்பயணம் மேற்கொண்டனர். ஆனால், தற்போது ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் விமானங்கள் வானில் பறக்கின்றன. இன்று கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக ஆண்டுக்கு 460 கோடி பேர் விமானப்பயணம் மேற்கொள்கின்றனர். 460 கோடி என்பது உலக மக்கள்தொகையில் 60 சதவீதம். இது எப்படி சாத்தியம் என்று நினைக்க வேண்டாம். ஒருவர் பலமுறை பயணிப்பதால் வரும் எண்ணிக்கை இது.
நேரடித் தொடர்பு: இந்தப் பின்னணியில் அதிகரிக்கும் விமானப் பயணங் களுக்கும் காலநிலை மாற்றத்துக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அண்மையில் பாகிஸ்தானில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளம், இந்த ஆண்டு அமெரிக்காவில் சில மாகாணங்களில் ஏற்பட்ட 50 டிகிரி செல்சியஸைவிட அதிகமான வெப்பநிலை, உலகெங்கும் அதிகரித்துவரும் கோடை வெப்பம், அமெரிக்கா, ஐரோப்பாவில் கோடைக்காலத்தில் ஏற்படும் காட்டுத்தீ உள்ளிட்ட அனைத்தும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளே என்று அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் அதிகரித்திருக்கும் விமானப் போக்குவரத்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆண்டுக்கு 100 கோடி டன் கரியமில வாயுவை உலகளாவிய விமானப் போக்குவரத்து உமிழ்கிறது. இது ஒப்பீட்டளவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான ஜப்பானின் ஓராண்டு கரியமில வாயு உமிழ்விற்குச் சமமானது. இந்த மாதம் கனடாவின் மான்ட்ரீயல் நகரில் நடைபெற்ற சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் கூட்டத்தில் புவி வெப்பமாதலில் விமானப் போக்குவரத்தின் பங்களிப்பு என்ன என்பதே முக்கிய பேசுபொருளாக இருந்தது.
பூஜ்ய உமிழ்வு: விமானத் தயாரிப்பு நிறுவனங்களும் அதைச் சார்ந்த அமைப்புகளும், விமானங்களின் கரியமில வாயு உமிழ்வை வரும் 2050க்குள் பூஜ்ஜியமாகக் குறைக்க வேண்டும் என்று அறிவித்திருக்கின்றன. ஆனால், அந்த இலக்கை எப்படி அடைவது என்கிற திட்டம் யாரிடமும் இல்லை. விமான துறையின் இந்த இலக்கு நிறைவேறப் பசுமை எரிபொருள், கரியமில வாயு உமிழ்வை ஈடுசெய்தல் ஆகிய இரண்டு வழிகள் உள்ளன.
அன்றாட வாகனப் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் பசுமை எரிபொருள் நல்ல நம்பிக்கையைத் தந்தாலும், விமான எரிபொருளின் தேவையையும் தரத்தையும் ஈடுசெய்யும் அளவுக்கு அது போதுமானதல்ல! எரிபொருள் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் பயன் தரும் எனினும், அது கரியமில வாயுவின் உமிழ்வைப் பெரிதாகக் குறைக்கப் போவதில்லை!
குறுந்தொலைவு விமானங்களுக்குப் பதிலாக அதிவேக மின் தொடர்வண்டிகளை இயக்குவது, வேலை சம்பந்தப்பட்ட பயணங்களைத் தவிர்த்து காணொளிக் கூட்டங்களாக (Video conferencing) நடத்திக்கொள்வது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனாலும் மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும் பொழுது விமானப் பயணங்களை அதிகமாக விரும்புவார்கள் என்பதே நடைமுறை.
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய மானது விமான நிறுவனங்கள் கார்பன் உமிழ்வை ஈடுசெய்ய சில வழிகளை முன்வைக்கிறது. பசுமைக் காடுகளை உருவாக்கும் திட்டங்களில் விமான நிறுவனங்கள் முதலீடு செய்யலாம் என்பது ஒரு வழி. ஆனாலும், விமானங்களின் கரியமில வாயு உமிழ்வை ஈடுசெய்ய எந்த அளவிற்குக் காடுகளை உருவாக்க வேண்டும் என்கிற திட்டம் யாரிடமும் இல்லை. மேலும், கடந்த காலத்தில் இத்தகைய திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் பெரிதாகப் பலன் தரவில்லை. ஆகவே, விமானத் துறையின் இலக்கான பூஜ்ய உமிழ்வு அல்லது உமிழ்வை ஈடுசெய்தல் என்பது எட்ட முடியாத இலக்காகவே தெரிகிறது!
மாற்று வழிகள்: கரியமில வாயு உமிழ்வு மட்டுமே பிரச்சினை அல்ல, விமானத் துறையின் தாக்கம் அதையும் தாண்டிச் செல்கிறது. விமான எஞ்சின்களால் அதிக வெப்ப நிலையில் உமிழப்படும் நைட்ரஜன் ஆக்சைடு தூசுப்படலங் களை (Aerosols) உருவாக்கி காற்று மண்டலத்தின் அமைப்பையே மாற்றி விடுகிறது. மேலும், எரியும் நீர்க்கரிமங்கள் (hydrocarbons) நீராவியை உண்டாக்கி அவை தூசுப் படலங் களுடன் கலந்து புகைக் கோடுகளைத் (contrils) தோற்றுவிக்கின்றன.
இந்தப் புகைக்கோடுகள், கரியமில வாயுவைவிடக் காலநிலை மாற்றத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று ஆய்வுகள் தெரிவிக் கின்றன. புகைக் கோடுகளின் தாக்கம் காலநிலை மாற்றத்தில் அதிகம் இருக்கும் என்றால், வெறும் பசுமை எரிபொருளும், உமிழ்வை ஈடுசெய்யும் திட்டங்களும் மட்டும் போதுமானவையாக இருக்காது.
மூன்று முக்கிய நடவடிக்கைகள்: விமானப் பயணங்களால் ஏற்படும் காலநிலை மாற்றத் தைக் கட்டுப்படுத்த மூன்று முக்கிய நடவடிக்கைகள் அவசியம்: முதலாவது, அரசும் விமான நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு, எரிபொருள் தொழில்நுட்பத்தில் அதிகமாக முதலீடு செய்து நிலையான எரிபொருளுக்கு வித்திட வேண்டும். மின்சாரம் அல்லது ஹைட்ரஜனால் இயங்கும் விமானங்களை உருவாக்க வேண்டும்.
இரண்டாவதாக, சர்வதேச அளவில் அரசாங்கங்களும் விமானத் துறை நிறுவனங்களும் சிறு குழுக்களாக இணைந்து கொள்கைகளை வகுத்து, அடையக்கூடிய இலக்குகளை உருவாக்கிச் செயல்பட வேண்டும்.
மூன்றாவதாக, இத்துறையில் கூடுதல் ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட வேண்டும். புகைக்கோடுகள், காற்று மண்டலத்துடனான வேதிவினைகளின் விளைவுகள் கண்டறியப்பட வேண்டும். முக்கியமாகத் தொழில்நுட்பம், பொருளாதாரம், அரசியல் சார்ந்த நடைமுறைப்படுத்தக் கூடிய தீர்வை அறிவியலாளர்கள் கண்டறிய வேண்டும். - கண்ணன் கோவிந்தராஜ் கட்டுரையாளர், நெதர்லாந்தின் டுவெண்டி பல்கலைக்கழக அறிவியலாளர், merchikannan@gmail.com