

காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைக்கவும் ஐ.நா.சார்பில் காலநிலை மாநாடு எகிப்து நாட்டிலுள்ள ஷார்ம் எல் ஷேக் நகரில் நவம்பர் 6 முதல் நவம்பர் 18 வரை நடைபெற்றது. COP (Conference of the Parties) என்று அழைக்கப்படும் இம்மாநாடு 1995ல் தொடங்கி நடந்துவருகிறது. சமீபத்தில் எகிப்தில் நடைபெற்றது இதன் 27ஆவது மாநாடு.
இந்த மாநாட்டில் 5 முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. அதன்படி, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், காலநிலை மாற்றத் திட்டங்களுக்கான நிதி ஆதாரம், காலநிலை மாற்றத்தைக் குறைப்பதில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு, உணவு பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அவற்றைச் செயல்படுத்துதல் ஆகிய 5 அம்சங்கள் இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டன. இம்மாநாட்டில் இந்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் கலந்து கொண்டார்.
கிராமப்புற குழந்தைகளின் காப் 27(COP)
தென்தமிழகத்தின் தொன் போஸ்கோ கிராமப்புற நிறுவனங்களின் கூட்டமைப்பு புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களிலிருந்து 132 குழந்தைகளை அழைத்து காப் 27 குறித்து விவாதித்தது. இந்தக் கூட்டம் நவம்பர் 12, 13 ஆகிய நாட்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழஈரால் எனும் சிற்றூரில் உள்ள தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தின் கீரனூர், ராமநாதபுரம் மாவட்டத்தின் சாயல்குடி, தூத்துக்குடி மாவட்டத்தின் விளாத்திகுளம், கீழஈரால், விருதுநகர் மாவட்டத்தின் ஆலங்குளம், சோழபுரம், தென்காசி மாவட்டத்தின் நெட்டுர் ஆகிய கிராமங்களிலிருந்து வந்து இந்நிகழ்வில் பங்கேற்ற குழந்தைகள் காலநிலை மாற்றம் குறித்து விவாதித்தனர்.
வேம்பு மக்கள் சக்தி இயக்கம் ஒருங்கிணைத்த இந்நிகழ்வில் கீழஈரால் பகுதியில் உள்ள 50 தன்னார்வலர்கள் குழந்தைகளுக்குப் பயிற்சியளித்தனர். குழந்தைகளுக்குப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த பயிற்சியும், கதைசொல்லல் மூலம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டன. இரவில் நடைபெற்ற தீ முகாம் (Camp fire) எனும் நிகழ்வில் காடுகள் அழிக்கப்படுதல், கனிம வளங்கள் சூறையாடப்படுதல் பற்றி நாடகம் , பேச்சு, கவிதை ஆகிய நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்வில் பங்கேற்ற குழந்தைகள் ஞெகிழி பைகள் பயன்படுத்தாமை, இயற்கைக்கு முரணான செயல்களில் ஈடுபடாமை, கரியமில வாயுக்களைக் குறைத்தல் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, காலநிலை மாற்றத்தினை மீட்டெடுத்தல் பற்றிய கோசங்கள் எழுப்பியவாறு கீழஈரால் கிராம வீதிகளில் பசுமை நடைப்பயணம் மேற்கொண்டது காலநிலை மாற்றப் பாதிப்புகளை உளபூர்வமாக உணர்த்தும் விதமாக இருந்தது.
இந்நிகழ்வில் பங்கேற்ற குழந்தைகள் நிறைவேற்றிய தீர்மானங்கள்: