இயற்கையைக் காக்கத் தூண்டும் பறவைகள்

நீலத்தாழைக் கோழி
நீலத்தாழைக் கோழி
Updated on
3 min read

நான் சிறு வயதில், பள்ளிப் பருவங்களில் வயல் வெளிகளில் கொக்குகள், நாரைகள், சில உள்நாட்டுப் பறவைகளையும் கண்டிருந்தாலும், பறவைகளையும் அவற்றின் குணாதிசயங்களையும் கண்டு ரசிக்க ஆரம்பித்தது சென்னை குரோம்பேட்டை, தாம்பரம் சதுப்புநிலங்களில்தான். பறவை களைப் படமெடுத்துக் கொண்டு மட்டும் இருந்தேன். பின்னர் மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காக அவற்றைப் பற்றிப் படிப்பதிலும், பறவை ஆர்வலர்களிடம் பேசுவதிலும் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டேன்.

தூண்டிய வீடு: திருநீர்மலை சாலையில் அமைந்துள்ள பெரிய ஏரியும் அதையொட்டிய சதுப்புநிலங் களும் உள்ளன. அங்குள்ள மெப்ஸ் (Madras Export Processing Zone- MEPZ), அதைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளிலிருந்து அந்த ஏரியில் கழிவு நீர் கலக்கிறது. குடிநீருக் காகப் பயன்படுத்தப்படாத அந்த ஏரியில் பல வகையான வலசைப் பறவைகளையும் உள்நாட்டுப் பறவைகளையும் காணலாம். அங்கு வரும் பறவைகளில் முக்கிய மானவை, நத்தைக்கொத்தி நாரை, நீலத்தாழைக் கோழி, கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, நீர்க் காகம், வெள்ளை அரிவாள்மூக்கன் (Black Headed Ibis) அன்றில் எனப்படும் கறுப்பு அரிவாள்மூக்கன் (Black Ibis) போன்றவை. சதுப்பு நிலப் பகுதிகளுக்கு இடையில் கட்டப்பட்ட குடியிருப்பில் வசித்தது, இப்பறவைகளைக் கண்டு களிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் காரணமாக அமைந்தது. பறவை களை நோக்கும் இந்தப் பழக்கம், சூழலியல் பறவைகளின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தியது. உணவுச் சங்கிலியைக் கட்டமைத்து சூழலியல் சமநிலையைப் பாதுகாப்பதில் பறவைகளின் பங்கை அறியவைத்தது.

நத்தையுடன் நத்தைகொத்தி நாரை<br />படம்: கோ. சக்திவேல்
நத்தையுடன் நத்தைகொத்தி நாரை
படம்: கோ. சக்திவேல்

நத்தைக்கொத்தி நாரை: சில வருடங்களுக்கு முன்பு நத்தைக் கொத்தி நாரையைப் படம் எடுத்துவிட்டுப் பின்னர் உற்றுப்பார்த்தபோதுதான் அதன் அலகில் உள்ள இடைவெளியைக் கண்டேன். அதன் மூடியுள்ள அலகைப் பக்கவாட்டில் காணும்போது அலகின் நுனியில் அந்த இடைவெளி நீள்வட்டமாகத் தெரியும். நத்தையைக் கொத்திய பின்பு அவற்றின் ஓடுகளை அந்த இடைவெளியில் வைத்தே அந்தப் பறவை உடைக்கும். ஆனால், இளம் பறவைகளுக்கு இந்த இடைவெளி காணப்படுவதில்லை. சதுப்புநில, நீர்நிலைப் பகுதி ஓரங்களில் நத்தைகள் பெருகியிருப் பதைக் கண்டால், இந்த நாரைகளின் வரவைக் கட்டாயம் எதிர்பார்க்கலாம். சில ஆண்டுகளாக நம் உள்நாட்டு நத்தையினங்கள் குறைந்து அயல் உயிரினமான ஆப்பிரிக்கப் பெரு நத்தைகளின் (Giant African Snail) எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த ஆப்பிரிக்கப் பெரு நத்தைகள் கப்பல் போக்குவரத்து மூலமாகவும், வளர்ப்புப் பிராணி வணிகம் மூலமாகவும், நம் நாட்டில் வந்தேறிப் பெருகிவிட்டது. இவை உள்நாட்டு நத்தையினங்களைப் போல் இன்றி உருவத்தில் பெரிதாகக் காணப்படும். இவை உள்நாட்டு நத்தையினங்களின் வாழ்விடத்தை ஆக்கிரமிப்பதோடு, அவற்றை உணவாகக் கொள்ளும் உயிரினங்களையும் பெரிதும் பாதிக்கின்றன. நோய்க்கிருமிகளைத் தாவரங்களுக்கும் மனிதர்களுக்கும் கடத்தும் இவ்வகை நத்தைகள் நம் சூழலியல் சமநிலைக்கும் விவசாயத்திற்கும் பெரும் சவாலாக விளங்குகின்றன. நத்தைக்கொத்தி நாரைகள் அவற்றை உணவாகக் கொள்வதன் மூலம் அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகின்றன.

நீலத்தாழைக் கோழி: நீலத்தாழைக் கோழி காண்பதற்கு நாட்டுக் கோழிகளைவிடச் சற்றுப் பெரிதாக இருந்தாலும் நன்கு பறக்கும் திறன் கொண்டவை. ஆபத்தை உணர்ந்தால் புற்கள், செடிகளுக்கிடையில் ஓடி ஒளிந்துகொள்ளும். நாரைகள் போலல்லாது குறுகிய தொலைவில் இவற்றைப் படமெடுத்துள்ளேன். இந்தியாவின் பெரும்பாலான சதுப்புநில, நீர்நிலைப் பகுதிகளில் நீலத்தாழை கோழி களைக் காண முடியும். மீன்கள், தவளைகள், நீர்நிலைகளின் மேற்பரப்பில் காணப்படும் செடி களின் தண்டுகள், ஊர்வன போன்றவற்றை உணவாகக் கொள்கின்றன. உணவு வலையின் சமநிலை பிறழாது காப்பதில் இதன் பங்கும் முக்கியமானது. தொடர்ந்து கவனித்தபோது கால்களால் உணவைப் பற்றி வாயருகே கொண்டு சென்று அவை உண்பதைக் கண்டேன்.

மஞ்சள் மூக்கு நாரை: மழை பெய்திருந்தால் மட்டுமே மஞ்சள் மூக்கு நாரைகளை திருநீர்மலை சதுப்புநிலத்தில் காண முடியும். பெரும்பாலும் வேடந்தாங்கல், கரிக்கிலி, பள்ளிக்கரணையில்தான் பார்க்க முடியும். அவ்வாறு ஒரு நவம்பரில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் எட்டு நாரைகள் ஒன்றுபோல எங்கள் குடியிருப்புப் பகுதியிலிருந்த சதுப்புநிலத்திற்கு வந்திறங்கின. மஞ்சள் மூக்கு நாரைகள் குழுவாக நடந்துசெல்வது, திரும்புவது ராணுவ வீரர்கள் இடது, வலது எனச் சீராக அணிவகுப்பு செய்வது போன்றிருக்கும். ஒன்றுபோல கால்களை நகர்த்துவது, சீராக எட்டு நாரைகளும் தலையைத் திருப்புவது என அந்த அழகான காட்சியைக் குடியிருப்பில் பெரும்பாலோர் கண்டு மகிழ்ந்தனர். நானிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு, சதுப்புநிலத்தை ஒட்டியிருப்பதால் படிக்கட்டு களில் நின்றபடி, வெளிச் சுவரில் கேமராவை வைத்துக்கொண்டு படமெடுத்துக் கொண்டிருப்பேன். அதைப் பார்த்த சில குடியிருப்புவாசிகள் என்னவென்று விசாரித்து அப்பறவைகளைப் பற்றிக் கேட்டு அறிந்துகொண்டார்கள். “இத்தனை ஆண்டுகள் இங்கு இருந்திருக்கிறோம். ஆனால் இவற்றைக் கவனித்ததே இல்லையே” என்று சிலர் சொன்னது உண்டு. அதையெல்லாம்விட எனக்கு மகிழ்ச்சி தந்தது இன்னொரு விஷயம். மாடியிலிருந்தபடியே சிலர் குப்பையைச் சதுப்புநிலத்தில் வீசுவதுண்டு. இப்பறவைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்ததும் அந்தப் பழக்கத்தை விடுத்து, கீழே வந்து நகராட்சிப் பணியாளர்கள் எடுத்துச்செல்லும் வண்ணம் வைத்துவிட்டுச் செல்ல ஆரம்பித் தார்கள். இயற்கையை, அவற்றின் அங்கமான பறவைகளை நேசித்தால் அவற்றின் மீதும் அவற்றின் வாழிடம் மீதும் கரிசனம் இயல்பாகவே ஏற்படும் என்பதை நேரிடையாகக் கண்டேன். இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம் என்று உணர்ந்த ஒரு பொறுப்பான சமூகம் உருவாகப் பறவைகள் நிச்சயமாக உதவும். - கண்ணன் சுப்ரமணியன், kanias2020@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in