

ஒவ்வோர் ஆண்டும் டெல்லியின் பெயர் ஓர் இழிபுகழுக்காகத் தவறாது செய்திகளில் அடிப்பட்டுவிடும். இப்போதும் அப்படித்தான் அடிபட்டுக்கொண்டிருக்கிறது. காற்று மாசு என்றாலேயே டெல்லி என்றாகிவிட்டது. காற்று மாசின் அளவைக் கணக்கிட ஒரு தரக் குறியீடு இருக்கிறது. அதை AQI (Air Quality Index) என்பர். இது 300 என்ற அளவுக்கு மேல் சென்றால் அபாய நிலை. டெல்லியில் 2019 அக்டோபரில் இது ஏறக்குறைய 500ஐ தொட்டது. சிகாகோ எனர்ஜி பாலிசி பிரிவின் ஆய்வு, வட இந்தியக் காற்று மாசால் அம்மக்களின் மொத்த ஆயுளில் ஏழு ஆண்டுகள் குறையும் என்கிறது.
விவசாயிகள் மீது பழி: டெல்லியில் காற்று மாசு என்றால் உடனே பஞ்சாப் உழவர்கள் மீது குற்றம் சுமத்தும் குரல்கள் எழும். அவர்கள் வயல்களில் வைக்கோலை எரிப்பதே காரணம் என்பர். ஆனால், அவ்வாறு வைக்கோலை எரிப்பது 12% மட்டுமே காரணம். அதுவும் ஆண்டுக்கு ஓரிரு மாதம் மட்டுமே நிகழ்கிறது என்கிறார் கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர் சச்சிதானந்த் திரிபாதி. 60% மாசுக்கு டெல்லிக்குள் நிகழும் ஆலைகள், சூளைகள், போக்கு வரத்து, கட்டுமானக் கழிவுகள் உள்ளிட்ட செயல்களே காரணம் என்கிறார் அவர். பசுமைப் புரட்சிக்கு முன்பு தாங்கள் வைக்கோலைக் கொளுத்தியதில்லை என்கிறார்கள் பஞ்சாப் உழவர்கள். கால்நடைகளின் பயன்பாட்டைக் குறைத்த நவீன வேளாண்மை அறிஞர்கள் எஞ்சும் வைக்கோலைக் குறித்துத் தீர்வு எதனையும் யோசிக்கவில்லை. தற்போது தீர்வாக முன்வைக்கப்படும் இயந்திரமும் (Rota-feeder) பொருளாதாரரீதியில் போதுமான பலனளிக்கவில்லை என்பதால் வைக்கோலைக் கொளுத்துகிறோம் என்கிறார்கள் அவர்கள். வைக்கோலைக் கொளுத்துவது என்பது பஞ்சாபில் பல்லாண்டுகளாகவே நடைபெறும் நிலையில், தற்போது மட்டும் அது சிக்கலாக மாறியதற்குப் பின்னே ஓர் அரசியல் இருக்கிறது.
என்ன காரணம்? - முன்பு வைக்கோலைச் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் தொடக்கத்தில் விவசாயிகள் எரித்துவந்தனர். அப்போது காற்று மேற்கிலிருந்து வீசும். எனவே, பஞ்சாப் புகை டெல்லிக்கு வராது. பஞ்சாப் மட்டுமே புகைமண்டலமாகக் காட்சியளிக்கும். பஞ்சாப் அரசு 2009ஆம் ஆண்டு நிலத்தடிநீர்ப் பாதுகாப்புச் சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. அதன் பின்னரே காட்சி மாறியது. இந்தச் சட்டம் நிலத்தடி நீர்ப் பாதுகாப்புக்கெனக் கூறப்பட்டாலும் அதைக் கொண்டுவரத் தூண்டியது USAID, மான்சாண்டோ நிறுவனம் என்று நம்பப்படுகிறது. இந்தச் சட்டம் வந்த பிறகு பஞ்சாப் உழவர்கள் பயிரிடும் காலத்தை மாற்ற வேண்டியிருந்தது. பஞ்சாபில் முன்னர் ஏப்ரல் மாதத்தில் நெல் பயிரிடுவர். புதிய சட்டத்துக்குப் பிறகு அது ஜூன் மாதத்துக்குத் தள்ளிப்போனது. அதனாலேயே அறுவடையும் தாமதமானது. அடுத்து கோதுமை பயிரிட உடனடியாக நிலத்தைத் தயார்செய்ய வைக்கோலை எரிக்கவேண்டிய நிலைமை. முன்பு செப்டம்பர் இறுதியில் எரித்தவர்கள் தற்போது அக்டோபர் இறுதியில் எரிக்கின்றனர். அது காற்று வடக்கிலிருந்து வீசும் காலம். எனவே, புகை டெல்லிக்குள் ஊடுருவத் தொடங்கியது.
நெல்லுக்குப் பதில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட தம் மக்காச் சோளத்தைப் பயிரிடுவதற்காக இந்த ஏற்பாட்டை மான்சாண்டோ செய்வதாகக் குற்றச்சாட்டுகிறார் தொழில்நுட்ப - பொருளியல் அறிஞர் அரவிந்த் குமார். எனவே, காற்று மாசு எனக் குற்றஞ்சாட்டும்போது இப்படியான மறைமுகக் காரணிகளையும் நாம் கணக்கிலெடுக்க வேண்டியிருக்கிறது.
தோற்றப்பிழை: டெல்லியைப் போல சென்னை, மும்பை போன்றவையும் பெருநகரங்கள்தாம். ஆனால், அங்கு மட்டும் டெல்லியைவிடக் காற்று மாசு குறைவாக இருப்பது ஏன்? அது இயற்கை செய்துவைத்துள்ள ஏற்பாடு. உண்மையில் இங்கும் மாசு அதிகளவில் இருக்கிறது. ஆனால், நகரங்களின் அருகே உள்ள கடல் அந்த மாசினைப் பங்கிட்டுக் கொள்கிறது. ஆகவே, மாசின் அளவு குறைவாக இருப்பதுபோலக் காட்சியளிக்கிறது. அது வெறும் தோற்றப்பிழையே. சென்னையில் காற்று மாசு சீரான வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஓராண்டில் மூன்றிலொரு பங்குக்கு மேல் காற்று மாசு கவலையளிக்கும் விதத்திலேயே உள்ளது. சில வேளைகளில் மிகக் குறைவான காற்று வேகம், காற்று இல்லாமை அல்லது காற்றில் ஈரப்பதம் மிகுந்திருத்தல் போன்ற பல காரணங்களால் கடல், காற்று மாசினைப் பங்கிட்டுக்கொள்ள மறுக்கிறது. அப்போது சென்னை நகரின் நிலை மோசமாக மாறுகிறது. 2019 நவம்பர் 6ஆம் தேதி டெல்லியிலிருந்த காற்று மாசினைவிடச் சென்னையில் 30 AQI மாசு அதிகம் இருந்தை நினைவில் கொள்ள வேண்டும். - கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்